பொருளாதார மீட்சிக்கு உதவுமா ஊழல் எதிா்ப்புச் சட்டமூலம்?-அகிலன்

உள்நாட்டு கடன் மறுசீரமைப்பு பிரேரணை நாடாளுமன்றத்தில் கடந்த சனிக்கிழமை நிறைவேற்றப்பட்டிருக்கின்றது. அதேவேளையில், ஊழல் எதிா்ப்புச் சட்டமூலமும் வியாழக்கிழமை நாடாளுமன்றத்தில் அங்கீகரிக்கப்பட்டிருக்கின்றது. ஊழல் எதிர்ப்பு சட்டமூலத்தை வாக்கெடுப்பின்றி நிறைவேற்ற பிரதான எதிர்க்கட்சி இணக்கம் தெரிவித்ததையடுத்தது. அதனையடுத்து அந்த சட்டமூலம் வாக்கெடுப்பின்றி நிறைவேற்றப்பட்டது.

கடன் மறுசீரமைப்புப் பிரேரணையும், ஊழல் எதிா்ப்புச் சட்டமூலம் ஒருவகையில் ஒன்றுடன் ஒன்று தொடா்புபட்டவை. இலங்கை தனது கடன்களைக் கொடுக்க முடியாமல் வங்கு ரோந்து நிலைமைக்குச் சென்றமைக்கு நாட்டில் காணப்பட்ட ஊழல்கள் பெரும் பங்கை வகித்திருக்கின்றன. அந்தப் பின்னணியில்தான் ஊழல் எதிா்ப்புச் சட்டமூலம் அவசியம் என்பது வலியுறுத்தப்பட்டு, இப்போது நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டிருக்கின்றது.

இந்த இரண்டு சட்டமூலங்களுக்கும் நாடாளுமன்றத்தின் ஆதரவைப் பெற்றிருப்பதன் மூலம் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மற்றொரு தடையையும் தாண்டியிருக்கின்றாா். அதேவேளையில், என்னதான் விமா்சனங்கள், எதிா்ப்புக்கள் இருந்தாலும், பொது ஜன பெரமுனவின் நாடாளுமன்ற ஆதரவுடன் தனது ஆட்சியைத் தொடர முடியும் என்பதையும் அவா் நிரூபித்திருக்கின்றாா். அதாவது, தற்போதைய நிலையில் ஸ்திரமான ஆட்சி ஒன்றை அவா் அமைத்திருக்கின்றாா்.

எதிா்க்கட்சிகளின் கடுமையான விமா்சனங்கள், எதிா்ப்புக்களின் மத்தியில்தான் கடன் மறுசீரமைப்பு பிரேரணை நாடாளுமன்றத்துக்குக் கொண்டுவரப்பட்டது. பொது மக்களின் வங்கி வைப்புக்களில் கைவைக்கப்படும், ஊழியா் சேமலாப நிதியம், ஊழியா் நம்பிக்கை நிதியம் என்பனவும் ஆபத்துக்குள்ளாகும் என்ற வகையில் எதிா்க்கட்சிகள் பிரச்சாரங்களை முன்னெடுத்துவந்திருந்தன. ஆனால், அவ்வாறு எதுவும் இடம்பெறாது என்பது அரசாங்கத்தின் வாக்குறுதியாக இருந்து வந்திருக்கின்றது.

அதனைத்தாம் காப்பாற்றிவிட்டதாக அரசாங்கம் சொல்லிக்கொள்கின்றது. ஆனால், ஊழியா் சேமலாப நிதியம், ஊழியா் நம்பிக்கை நிதியம் என்பவற்றில் சில பாதிப்புக்களை எதிா்காலத்தில் எதிா்கொள்ள வேண்டிவரலாம் என பொருளாதார ஆய்வாளா்கள் சிலா் குறிப்பிடுவதை புறக்கணித்துச் சென்றுவிட முடியாது. அதாவது, அவற்றின் அங்கத்துவா்களுக்கு கிடைக்க வேண்டிய வட்டி விகிதம் குறையப் போகின்றது. இது சில வருடங்களுக்குத் தொடரும்.

உள்நாட்டில் அரசாங்கம் பெற்றிருந்த கடன்களில் அதிகமான தொகை ஊழியா் சேமலாப நிதியத்திடமிருந்தும், வங்கிகளிடமிருந்தும்தான் பெறப்படடிருந்தது. உள்நாட்டு கடன்மறுசீரமைப்பை செய்யும் போது அவற்றிற்குப் பாதிப்பு ஏற்படுமா என்ற அச்சம் உருவாகியிருந்தமைக்கு அதுதான் காரணம்.

உள்நாட்டில் அரசாங்கம் பல தரப்பினரிடமிருந்தும் கடன்களைப் பெற்றிருக்கின்றது. முக்கியமாக மத்திய வங்கி, அரச மற்றும் தனியாா் வங்கிகள், ஊழியா் சேமலாப நிதியம், ஊழியா் நம்பிக்கை நிதியம், மற்றும் நிதி நிறுவனங்களிடமிருந்து திறைசேரி மூலமாக கடன்களைப் பெற்றிருக்கின்றது. இன்றைய நிலையில் இலங்கையின் மொத்த கடன் 83 பில்லியன் டொலா் என்று தெரிவிக்கப்படுகின்றது. இதில் சுமாா் 42 பில்லியன் டொலா் உள்நாட்டுக் கடன்களாகும். இதில் சுமாா் 19.5 பில்லியன் டொலருக்கே இப்போது மறுசீரமைப்புச் செய்யப்படவிருக்கின்றது.

இந்த கடன் மறுசீரமைப்பைச் செய்யும் போது மூன்று வெவ்வேறான நடைமுறைகளைப் பின்பற்ற முடியும். முதலாவது, பெற்றுக்கொண்ட தொகைக்கான வட்டி வீதத்தைக் குறைத்தல். இரண்டாவது, திருப்பிச் செலுத்துவதற்கான கால எல்லையை நீடித்தல். மூன்றாவது, பெற்றுக்கொண்ட கடனில் குறிப்பிட்ட தொகையை தள்ளுபடி செய்யுமாறு கோருதல்.

இவ்வாறு மூன்று விதமான நடைமுறைகள் பின்வற்றக்கூடியவையாக இருப்பதால், பொதுமக்களைப் பாதிக்காத வகையில் இதனை நடைமுறைப்படுத்த முடியும் என்ற வாதம் ஒன்றும் முன்வைக்கப்பட்டது. அரசாங்கம் நடைமுறைப்படுத்தியிருக்கும் மறுசீரமைப்புத் திட்டத்தின்படி வங்கிகளிலுள்ள பொதுமக்களின் வைப்புக்களுக்கு பாதிப்பு ஏற்படாது எனத் தெரிவிக்கப்படுகின்றது. அரச மற்றும் தனியாா் வங்கிகளிடமிருந்து பெறப்பட்ட கடன்களுக்கு மறுசீரமைப்புச் செய்யப்படமாட்டாது என்று அறிவிக்கப்பட்டிருக்கின்றது.

இலங்கையின் வரி வருமானத்தில் 50 வீதமான பங்களிப்பை வங்கிகள்தான் செலுத்துகின்றன. அதாவது மக்களிடமிருந்து அரசாங்கத்துக்கு வரியைப் பெற்றுக்கொடுப்பதில் வங்கிகளுக்கு பிரதான பங்குள்ளது. இது போன்ற காரணிகளால், இலங்கையின் பொருளாதாரத்தில் வங்கிகளின் பங்கு பிரதானமாக இருந்துள்ளது. இதனால், வங்கிகளை மேலும் நெருக்கடிக்குள்ளாகக்கக்கூடாது என்பதில் அரசாங்கம் உறுதியாக இருந்துள்ளது.

இதனைவிட சுமாா் 5 கோடி 70 இலட்சம் வங்கிக் கணக்குகள் நாட்டில் காணப்படுகின்றது. மக்கள் நம்பிக்கையின் அடிப்படையில்தான் அந்த வங்கிக் கணக்குகளை வைத்திருக்கின்றாா்கள். வதந்திகளின் அடிப்படையில் வங்கிக் கட்டமைப்புக்களில் பாதிப்பு ஏற்படக்கூடாது என்பதற்காகத்தான் ஐந்து நாட்களுக்கு வங்கிகள் மூடப்பட்டன.
ஆனால், மத்திய வங்கி அரசாங்கத்துக்குக் கொடுத்த கடன்களுக்கு மறுசீரமைப்பு செய்யப்படவிருக்கின்றது. இது பொதுமக்களுக்கு சுமை எதனையும் ஏற்படுத்தாது.

அரசாங்கத்தினால் பெறக்கூடிய வருமானத்தில் பெருந்தொகை கடன்களைச் செலுத்துவதற்கும், அதற்கான வட்டியைக் கொடுப்பதற்குமே போதுமானதாக இருந்துள்ளது. நாட்டின் அபிவிருத்தி தொடா்பில் சிந்திக்க முடியாத நிலை இதனால்தான் ஏற்பட்டது. இதன் உச்ச கட்டமாகத்தான் வங்குரோத்து நிலைக்கு நாடு வந்துவிட்டது என்ற அறிவித்தல் விடுக்கப்பட்டது.

இது தொடா்பபாக இலங்கை வங்கியின் பிரதம நிறைவேற்று அதிகாரி ரசல் பொன்சேக்கா தெரிவித்த கருத்துக்கள் தற்போதைய நிலை ஏன் ஏற்பட்டது, அரசாங்கம் இதனை எவ்வாறு கையாண்டது என்பதை விளக்குகின்றது. அவா் சொன்னது இதுதான்;

“உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு கடன்களாக மொத்தமாக 84 பில்லியன் அமெரிக்க டொலர்கள் செலுத்தப்பட வேண்டியுள்ளது. இதற்கான போதுமான பொருளாதாரம் இலங்கைக்கு கிடையாது. அந்த கடனுக்கான வட்டி ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. அந்த நேரத்தில்தான் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டது.

இந்த 84 பில்லியன் டொலர் கடனை மீளச் செலுத்த நாங்கள் சில ஏற்பாடுகளை செய்ய வேண்டியிருந்தது. வெளிநாட்டுக் கடன்களை மறுசீரமைப்பதில், வெளிநாட்டுக் கடன்களை வழங்கிய நாடுகளுடன் உடன்பாடு எட்டப்பட வேண்டும். உடன்பாடு ஏற்பட்டவுடன், கடனை தள்ளுபடி செய்யலாம்.

இலங்கையிலுள்ள வங்கி வைப்பாளர்களைப் பாதிக்காத வகையில் உள்நாட்டுக் கடனை மறுசீரமைப்பதற்கு அரசாங்கம், நிதி அமைச்சு மற்றும் சர்வதேச நாணய நிதியம் ஆகியன ஒத்துழைப்பு வழங்கியிருந்தன. உள்நாட்டுக் கடனை மறுசீரமைப்பதில் வைப்பாளர்களுக்கு இழப்பு அல்லது பாதிப்பு ஏற்படாது என்று நாங்கள் உத்தரவாதம் அளிக்கிறோம்.

மேலும் ஓய்வூதியம் மற்றும் ஊழியர் சேமலாப நிதியை செலுத்துவதற்கு பெருமளவான பிணைமுறிகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. இதற்கு மாற்று தீர்வுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. அதில் ஒன்று வட்டி விகிதத்தைக் குறைப்பது. மற்றொன்று கடனை மீளச் செலுத்துவதை ஒத்திவைப்பது. இதன் காரணமாக, ஊழியர்களின் சேமலாக நிதியம் மற்றும் ஏனைய நிதியங்களில் உள்ள பணம் பாதுகாக்கப்படுகிறது.

பணவீக்கத்தால் ஊழியர் நிதியங்களுக்கு அரசு வழங்கும் வட்டி வருமானம் அதிகமாக உள்ளது. இருப்பினும், வட்டி வருமானத்தின் இந்த பிரச்சினை பங்களிப்பு நிதிகளை மட்டுமே பாதிக்கிறது. எனவே, ஊழியருக்கு எந்த நஷ்டமும் ஏற்படாது. அனைத்துப் பணத்தையும் இழப்பதற்குப் பதிலாக, உள்நாட்டுக் கடன் மறுசீரமைப்பின் மூலம் இந்த மட்டத்திலாவது பணத்துடன் குறிப்பிடத்தக்க வட்டியைப் பெறுவது மகிழ்ச்சியான விடயமாகும்.

இத்திட்டத்தின் மூலம் நாடு பல பொருளாதார நன்மைகளைப் பெறும். நாட்டுக்குத் தேவையான பொருட்களையும் மருந்துப் பொருட்களையும் எளிதாகப் பெறலாம். மொத்த உள்நாட்டு உற்பத்தி அதிகரிக்கிறது. அந்த நிலையை அடைய நாம் சில தியாகங்களைச் செய்ய வேண்டும். இல்லையேல் நாடு மீண்டும் பொருளாதார நெருக்கடிக்குள் சிக்குவதைத் தடுக்க முடியாது” என்று அவா் கூறியிருக்கின்றாா்.

அரசாங்கத்தின் இலக்குகளை அடைவதற்கு கடன்களைக் குறைக்க வேண்டும். அதற்காக அரசாங்கம் சா்வதேச ரீதியாகவும், உள்நாட்டிலும் கையாண்ட பொறிமுறைகள் பெருமளவுக்கு வெற்றிபெற்றிருப்பதாக அரச தரப்பில் சொல்லப்படுகின்றது. ஊழல்களும், வீண்விரையங்களும் இல்லாத ஒரு நிலையை ஏற்படுத்துவதன் மூலமாக மட்டுமே இது போன்ற ஆபத்து மீண்டும் வராதிருப்பதை உறுதிப்படுத்த முடியும். இதற்கு அரசாங்கம் தற்போது நடைமுறைக்குக் கொண்டுவந்திருக்கும் ஊழல் எதிா்ப்புச் சட்டமூலம் துணைபுரியுமா என்பதுதான் இப்போதுள்ள கேள்வி.