உக்ரைன் போர் போர் அடுத்த கட்டத்திற்கு நகரும் நிலையை அடைந்துள்ள நிலையில் புதியதொரு களமுனையை அவசரமாக திறப்பதற்கு அமெரிக்கா ஆசைப்படுகின்றது. எனவே தான் தாய்வானுக்கு தொடர்ந்து இராஜதந்திரிகளை அனுப்பிவரும் அமெரிக்காவும், நேட்டோ நாடுகளும் தாய்வானுக்கு அண்மையாக தளம் அமைப்பதற்கான அனுமதியையும் பிலிப்பைன்ஸ் இடம் இருந்து பெற்றுள்ளது.
இந்த நிலையில் இந்த வாரம் சீனாவின் ஆய்வுப்பணியில் ஈடுபட்ட பலூன் ஒன்றையும் சுட்டு வீழ்த்தியுள்ளது. அந்த பலூன் உளவுப்பணியில் ஈடுபட்டதாக அமெரிக்கா கூறிவருகையில், அது காலநிலையை அவதானிப்பதற்காக பறக்கவிடப்பட்டது என கூறுகின்றது சீனா.
2017 ஆம் ஆண்டில் இருந்து நான்கு தடவைகள் சீனாவின் பலூன் அமெரிக்காவின் வான்பரப்பில் பறந்ததாகவும், கிழக்கு ஆசியா, ஐரோப்பா போன்ற பகுதிகள் உட்பட ஐந்து கண்டங்களில் சீனாவின் பலூன் உளவுப் பணிகளில் ஈடுபட்டதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.
கடந்த வாரம் அமெரிக்காவின் வான்பரப்பில் காணப்பட்ட பலூன் லத்தீன் அமெரிக்க நாடுகளின் வான்பரப்பின் ஊடாக அமெரிக்காவிற்குள் ஊடுருவியதாகவும், பல மணி நேரம் அமெரிக்காவின் முக்கிய தளங்கள் மீது பறப்பை மேற்கொண்டதாகவும் தெரிவித்துள்ளது அமெரிக்கா.
அதேசமயம், பலூன் கனடாவின் வான்பரப்பில் கணப்பட்டதாக கனடா அமெரிக்காவுக்கு தெரிவித்துள்ளது. 200 அடிகள் உயரம் கொண்ட அந்த பலூனை சுட்டுவீழ்த்த அமெரிக்கா முதலில் முற்படவில்லை. சுட்டு வீழ்த்தப்பட்டால் தரையில் உள்ள மக்கள் பாதிக்கப்படுவார்கள் என அமெரிக்கா முதலில் தெரிவித்திருந்தது. தனது கருத்துக்கு TOP GUN திரைப்படைத்தையும் ஆதாரமாக சேர்த்திருந்தது.
ஆனால் பல மணி நேரம் அமெரிக்காவின் முக்கிய இடங்கள் மீது பறந்த பலூன் கிழக்கு கடல் வழியாக வெளியேறி அத்திலாந்திக் சமுத்திரத்தை அடைந்தபோது, பொன்ரகனில் இருந்து கிடைத்த உத்தரவுக்கு அமைவாக வேர்ஜினியாவில் உள்ள லாங்லி வான்படைத்தளத்தில் இருந்து புறப்பட்ட இரண்டு எப்-22 மற்றும் இரண்டு எப்-15 ரக விமானங்கள் தாக்குதலுக்கு தாக்கியழித்துள்ளன.
தூக்குதல் விமானங்களில் பறப்பு எல்லைக்கு அப்பால் பறந்த பலூனை எப்-22 ரக விமானம் AIM-9X sidewinder A2A என்ற ஏவுகணையை கொண்டு தாக்கியது. வெடித்து சிதறிய பலூன் கடலில் வீழ்ந்ததுடன், அதனை தற்போது அமெரிக்காவின் கடற்படையினர் மீட்டுவருகின்றனர்.
ஆய்வு செய்த பின்னரே அது தொடர்பில் மேலும் தகவல்களை கூறமுடியும் என அமெரிக்கா தெரிவித்துள்ளது. அதேசமயம், முதல்கட்ட ஆய்வின் போது பலூனில் தொலைதொடர்பு அன்ரனாக்கள் காணப்பட்டதாக தெரிவித்துள்ளது. காலநிலையை அவதானிப்பதற்கும் அன்னராக்கள் தேவை.
ஆனால் ஆட்கள் அற்ற எந்தவிதமாக பாதுகாப்பும் இன்றி மெதுவாக அசைந்து செல்லும் பலூனை சுட்டு அமெரிக்கா உலக அரங்கில் ஒரு நாடகத்தை அரங்கேற்றியுள்ளதாக சீனாவின் வெளிவிவகார அமைச்சகம் தெரிவித்துள்ளது. பொது நிறுவனத்திற்கு சொந்தமான காலநிலையை அவதானிக்கும் இந்த பலூன் காற்றின் அழுத்தம் காரணமாக சில சமயங்களில் திசைமாறுவதுண்டு ஆனால் அமெரிக்கா அதனை மிகைப்படுத்தியுள்ளது. எதிர்காலத்தில் அமெரிக்காவின் இத்தகைய நடவடிக்கைகளுக்கு பதிலடி கொடுக்கப்படும் எனவும் அது எச்சரித்துள்ளது.
இந்த நிலையில் உளவு பலூன்கள் ஏன் தற்போது முக்கியத்துவம் பெற்றுள்ளது?
அது மிக இலுகுவாக வடிவமைக்கப்பட கூடியது, ஏவுவதற்கு ஏவு தளங்களும் தேவையில்லை. அதிக புற ஊதாகதிர்களை வெளியிடாததால் வான்பாதுகாப்பு பொறிமுறைகளில் இருந்து தப்பி பிழைக்கும் சாத்தியம் கூடியது. எனவே தான் அமெரிக்காவின் வான் பாதுகாப்பு பொறிமுறைகளை உடைத்து ஊடுருவியுள்ளதுடன், பல மணிநேரம் பறந்துள்ளது.
ஏவுகணைகள் கொண்டு தாக்குவதும் கடினம். எனவே தான் கனடா ஊடாக அமெரிக்காவிற்குள் நுளைந்த பலூனை மொன்ரானா பகுதியில் வைத்து சுட்டு வீழ்த்த எடுத்த முயற்சிகள் தோல்வியில் முடிந்ததாக த பொக்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. இத்தகைய பலூன்கள் மிகவும் மலிவான உற்பத்தி செலவை கொண்டது. அதாவது சில ஆயிரம் டொலர்கள் செலவில் தயாரிக்கப்பட்ட சீனாவின் பலூனை தாக்குவதற்கு அமெரிக்கா 400,000 டொலர்கள் பெறுமதியான AIM-9X sidewinder A2A என்ற ஏவுகணையை பயன்படுத்தியிருந்தது.
இந்த பலூன்கள் குறைந்த செலவில் உளவுத்தகவல்களை திரட்டும் பொறிமுறை என்கிறார் சீனாவை தளமாகக் கொண்ட Craig Singleton என்ற பாதுகாப்பு ஆய்வாளர்.
செய்மதிகளை விட வேகமாக தகவல்களை தளத்திற்கு அனுப்புவதுடன், விமானங்களால் கண்டறிவதும் கடினமானது. உலங்குவானூர்திகள் தரையில் இருந்து 7 கி.மீ உயரம் வரை பறக்க கூடியவை. பயணிகள் விமானம் 14 கி.மீ உயரம் வரை பறக்க கூடியவை. அமெரிக்காவின் தாக்குதல் மற்றும் உளவு விமானங்கள் 28 கி.மீ உயரம் வரை பறக்க கூடியவை. ஆனால் பலூன்கள் 17 – 42 கி.மீ உயரம் வரை பறக்க கூடியவை.
அதாவது 36,000 கி.மீ உயரத்தில் செய்மதிகள் பறக்கும் Exosphere இற்கும் தாக்குதல் விமானங்கள் பறக்கும் Stratosphere இற்கும் இடையில் பறக்க கூடியவை. Troposphere இற்கு மேல் இவை பறப்பதால் அவற்றால் பயணிகள் விமானங்களுக்கு எந்த பாதிப்புக்களும் இல்லை.
செய்மதிகளை விட இவை மெதுவாக பறப்பதுடன், பூமியின் சுழற்சி காரணமாக செய்மதிகளால் அதிக நேரம் முக்கியமான பகுதிகளில் தரித்து நிற்க முடிவதில்லை. ஆனால் பலூன்களால் அது முடியும்.
பனிப்போர் காலத்தில் கூட அமெரிக்காவும், ரஸ்யாவும் இத்தகைய பலூன்களை உளவுப் பணிகளுக்காக பயன்படுத்தியிருந்தன. 23 மி.மீ பீரங்கிகள் பொருத்தப்பட்ட Myasishchev M-55 என்ற அதிக உயரத்தில் பறக்கும் உளவு விமானங்களும் பிரத்தியோகமாக தயாரிக்கப்பட்டு அன்று சோவித்தினால் பயன்படுத்தப்பட்டிருந்தது.
ஆனால் தற்போது எழுந்துள்ள கேள்விகள் என்னவெனில் 1997 ஆம் ஆண்டு முதல் பல தடவைகள் பறந்த பலூனை கண்டுகொள்ளாமல் விட்ட அமெரிக்கா தற்போது ஏன் அதனை சுட்டு வீழ்த்தியுள்ளது? பல மணிநேரம் அமெரிக்காவின் முக்கிய பகுதிகளிற்கு மேலால் பறந்த பலூன் உண்மையில் உளவு பலூனாக இருந்தால் அது தகவல்களை சேகரித்து தளத்திற்கு அனுப்பியிருக்கும். அவ்வாறு அனுப்பிய பின்னர் கடல் வழியாக தளம் திரும்பிய பலூனை சுட்டு வீழ்த்துவது படைத்துறை ரீதியாக புத்திசாலித்தனம் அற்றது. அதாவது தகவல்களை சேரிப்பதற்கு முன்னர் அதனை தடுத்திருக்க வேண்டும்.
அவ்வாறு அமெரிக்கா தடுக்க தவறியது என்பது பலூன் உண்மையில் காலநிலை அவதானிப்புக்காக அனுப்பப்பட்டது என்பது அமெரிக்காவுக்கு தெரியுமா என்ற சந்தேகங்களை எழுப்பியுள்ளது.
அதேசமயம் இந்த பலூன்களின் உளவு கருவிகளை தரையில் இருந்து செயலிழக்க வைக்கும் தொழில்நுட்பங்கள் அமெரிக்காவிடம் உண்டு எனவே சீனாவின் பலூன் ஏற்கனவே பலவீனப்படுத்தப்பட்டு விட்டது என்கிறார் பென்ரகனின் பாதுகாப்புத் துறைக்கான மூத்த அதிகாரி. அவ்வாறெனில் ஏன் நிராயுதபாணியாக நின்ற பலூன் தற்போது சுடப்பட்டது?
2027 ஆம் ஆண்டு சீனா – தாய்வான் போர் ஆரம்பமாகும் என்கிறார் அமெரிக்காவின் புலனாய்வு அமைப்பான சி.ஜ.ஏயின் தலைவர் வில்லியம் பேர்ன்ஸ். எனவே தான் தாய்வானுக்கு தொடர்ந்து ஆயுதங்களை வழங்ககின்றது அமெரிக்கா.
பிலிப்பைன்ஸ் இலும் 30 ஆண்டுகளக்கு பின் மீண்டும் தளம் அமைக்கின்றது அமெரிக்கா. இலங்கையிலும் சோபா உடன்பாட்டை கொண்டுவந்து தளம் அமைக்க திட்டமிடுகின்றது.
போரை ஆரம்பிப்பதற்கு முன்னர் எதிரியை ஒரு பயங்கரமானவனாக சித்தரிப்பது போரியல் தத்துவம் அதன் மூலம் உலக நாடுகளின் எதிர்ப்பை தணித்துவிடலாம். அமெரிக்காவின் முன்னாள் வெளிவிவகாரச் செயலாளர் கொலின் பவல் ஐ.நாவில் ஒரு குப்பியை காண்பித்து 45 நிமிடத்தில் ஈராக் எம்மை அழிக்கும் என்று கூறியதை போலவே இதுவும். ஆனால் ஈராக்கும் சீனாவும் ஒன்றா என்பதை காலம் உணர்த்தும்.