13  இன்  முழுமையான அமுலாக்கத்திற்கு ஒத்துழைக்க வேண்டும்-சமூகச் செயற்பாட்டாளர் யு. ஜி. செனவிரட்ன

இலங்கையின் பிரபல சமூகச் செயற்பாட்டாளரான யு. ஜி. செனவிரட்னவுடன்  ஒரு நேர்காணல்…

* கேள்வி:-

இலங்கையின் சமகால அரசியலமைப்பின் அதிருப்தி நிலை குறித்து கூறுவீர்களா?

*பதில் :-

இலங்கை சுதந்திரமடைந்த பின்னர் முதன்முதலாக 1972 ம் ஆண்டில் முதலாவது குடியரசு அரசியலமைப்பு முன்வைக்கப்பட்டது.ஏற்கனவே நடைமுறையில் இருந்த சோல்பரி அரசியலமைப்பு பல்வேறு குறைபாடுகளைக் கொண்டிருந்ததாக காரணம் காட்டி முதலாவது குடியரசு அரசியலமைப்பு முன்வைக்கப்பட்டது.

இதன்படி  சோல்பரி அரசியலமைப்பு இலங்கை மக்களின் பிரதிநிதிகளால் உருவாக்கப்படவில்லை.முற்றாக பிரித்தானியரான சோல்பரியினரால் உருவாக்கப்பட்டது.இலங்கை தொடர்பில் பிரித்தானிய அரசிற்கு பல சிறப்புரிமைகள் காணப்பட்டன .

பாராளுமன்ற சட்ட ஆக்கம் தொடர்பாக போதிய இறைமையைக் கொண்டிருக்கவில்லை.நியமன உறுப்பினர் பதவிகள் மக்களாட்சிக் கோட்பாட்டிற்கு தடையாக இருந்தது. செனற்சபை பல்வேறு குறைபாடுகளைக் கொண்டிருந்தது. அடிப்படை உரிமைகள் சோல்பரியாப்பில் உள்ளடக்கப்படவில்லை என்று பல்வேறு குறைபாடுகள் சோல்பரி அரசியலமைப்பு தொடர்பில் முன்வைக்கப்பட்டு முதலாவது குடியரசு அரசியலமைப்பு உருவாக்கப்பட்டது.

எனினும் முதலாவது குடியரசு அரசியலமைப்பும் எதிர்பார்த்த சாதக விளைவுகளைப் பெற்றுக் கொடுக்காத நிலையில் இரண்டாவது குடியரசு அரசியலமைப்பு 1978 இல் முன்வைக்கப்பட்டது. இதுவே சமகால அரசியலமைப்பாக உள்ளது.இரண்டாவது குடியரசு அரசியலமைப்பு உருவாக்கத்திற்கு ஐக்கிய தேசியக் கட்சியின் நீண்டகால இலக்குகள், 1977 தேர்தலில் இக்கட்சிக்கு கிடைத்த பெருவெற்றி என்பனவும் உந்துசக்தியாக அமைந்தன என்றால் மிகையாகாது. இவ்வரசியலமைப்பின்  தந்தையாக  அப்போதைய ஜனாதிபதி ஜே.ஆர்.ஜயவர்த்தனா விளங்கினார்.

இவ்வரசியலமைப்பின் ஊடாக ஏற்கனவே நடைமுறையில் இருந்த தொகுதிவாரி தேர்தல் முறைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டு, விகிதாசார பிரதிநிதித்துவ தேர்தல் முறை முன்வைக்கப்பட்டமை முக்கிய மாற்றமாகும்.எனினும் சமகாலத்தில் உள்ள 1978 ம் ஆண்டில் முன்வைக்கப்பட்ட அரசியலமைப்பும் பல்வேறு குளறுபடிகளைக் கொண்டுள்ளமை வெளிப்படையாகும்.இவ்வரசியலமைப்பு நாட்டின் அபிவிருத்திக்கும் ஐக்கியத்துக்கும் வலுசேர்ப்பதை விடுத்து பிரிவினைக்கும் பிளவுகளுக்கும் வித்திடுவதாக பலமான ஒரு குற்றச்சாட்டு இருந்து வருவதும் குறிப்பிடத்தக்கதாகும்.இதேவேளை இவ்வரசியலமைப்பின் ஊடாக அறிமுகப்படுத்தப்பட்ட விகிதாசார தேர்தல் முறை தொடர்பிலும் திருப்தியான வெளிப்பாடுகளைக் காணமுடியவில்லை.எவ்வாறாயினும் விகிதாசார பிரதிநிதித்துவ தேர்தல் முறை சிறுபான்மையினருக்கு மிகவும் சாதகமானது என்பதையும் குறிப்பிட்டாதல் வேண்டும்.

1978 இல் முன்வைக்கப்பட்ட சமகால அல்லது இரண்டாவது குடியரசு அரசியலமைப்பினை மாற்றி புதிய அரசியலமைப்பினை முன்வைக்க வேண்டும் என்ற கருத்துக்கள் தொடர்ச்சியாகவே ஓங்கி ஒலிக்கின்றன. புதிய அரசியலமைப்பினை  முன்வைக்கும் பணிகள் ஆட்சியாளர்களால் அவ்வப்போது மேற்கொள்ளப்பட்டபோதும் இதுவரை அது சாத்தியமாகவில்லை.கடந்த நல்லாட்சி காலத்தில் புதிய அரசியலமைப்பு தொடர்பாக பொதுமக்கள் கருத்தறியும் குழு ஏற்படுத்தப்பட்டு அமைப்புக்கள் மற்றும் புத்திஜீவிகளின் கருத்துக்கள் பலவும் பெற்றுக் கொள்ளப்பட்டன.எனினும் ” வெண்ணெய் திரண்டு வரும் நிலையில் தாழி உடைந்ததைப்போன்று ” இறுதித்தருவாயில் புதிய அரசியலமைப்பை முன்வைக்கும் பணிகளுக்கு இடையூறு ஏற்பட்டமை இலங்கையைப் பொறுத்தவரையில் ஒரு சாபக்கேடேயாகும் என்பதையும் மறுப்பதற்கில்லை.

*கேள்வி :- 

13 ஆவது திருத்தச் சட்டம் தொடர்பில் கூறுங்கள்?

* பதில் :-

1978 ம் ஆண்டில் முன்வைக்கப்பட்ட இரண்டாவது குடியரசு அரசியலமைப்பு இதுவரை பல திருத்தங்களுக்கும் உள்ளாகி இருக்கின்றது.13 ஆவது திருத்தமும் இதிலொன்றாகும். 1987 ம் ஆண்டு நவம்பர் மாதம் 14 ம் திகதி அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தம் ஊர்ஜிதம் செய்யப்பட்டது.இலங்கை ஜனநாயக சோஷலிஸக் குடியரசு 18 ஆம், 138 ஆம்,154 ஆம் சரத்துக்களை திருத்துவதன் ஊடாக இலங்கையின் மாகாண சபைகள் உருவாக்கப்பட்டன.

அதிகாரப்பரவலுக்கான அடிப்படையாக அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தச் சட்டமூலம் முன்வைக்கப்பட்ட நிலையிலேயே மாகாணசபை முறை உருவாக்கப்பட்டது.வடக்கு, கிழக்கு மாகாணங்கள் இணைந்த மாகாண ஆட்சி அறிமுகம் செய்யப்பட்டது. தமிழ் மொழிக்கு சம அந்தஸ்து வழங்கப்பட்டமை யும் இதில் முக்கிய அம்சமாக விளங்கியது. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, மக்கள் விடுதலை முன்னணி உள்ளிட்ட கட்சிகள் ஆரம்பத்திலிருந்தே இதனை எதிர்த்தன.பிரதான கரப்பான் விடுதலைப் புலிகளும் இதனை ஏற்க மறுத்தனர்.2008 இல் சுதந்திரக் கட்சியின் ஆட்சியில் மக்கள் விடுதலை முன்னணியின் முயற்சியால் உயர்நீதிமன்ற தீர்ப்பொன்றின் மூலம் இணைந்த வடக்கு கிழக்கு மாகாணங்கள் பிரிக்கப்பட்டன.

13 ஆவது திருத்தம் சமர்ப்பிக்கப்பட்டு மையப்படுத்தப்பட்ட ஆட்சியில் அதிகாரப் பகர்வு அம்சம் சேர்க்கப்பட்ட நிலையில், பரஸ்பர விரோதத் தன்மையொன்று காணப்பட்டபோதும் இலங்கை அரசியலுக்கு அது ஒரு புதிய  அனுபவமாகக் காணப்பட்டது. 13 ஆவது திருத்தத்தை அமுல்படுத்துவதற்கு தடைகளை ஏற்படுத்துவதற்கு அன்று ஜனாதிபதி பிரேமதாசா அரசாங்கம் பின்பற்றிய அரசியல் உபாயங்களை விடவும் பாரதூரமான விதத்தில் திருத்தத்தின் உள்ளடக்கத்தின் சட்டரீதியான கட்டமைப்பினால் பயனடைய கடந்த கால அரசாங்கம் திறமை பெற்றிருந்தது என்பதும் பலர் அறிந்த விடயமாகும்.அது மட்டுமன்றி அதிகாரத்தைப் பகிர்வது என்பது நாகரீகமான ஒரு அரசியல் செயற்பாடென்று சமூகமயப்படுத்தப்பட்ட கலாசாரத்தை பின்னோக்கி நகர்த்தி அதனை ஒரு தகாத வார்த்தையாக சமூகமயப்படுத்தும் முயற்சியிலும் அரசாங்கம் அப்போது இறங்கி இருந்ததையும் இங்கு தெரிவிக்க விரும்புகிறேன்.

13 ஆவது திருத்தம் தொடர்பில் பல்வேறு விமர்சனங்கள் இருந்து வரும் நிலையில் கலாநிதி ரொஹான் எதிரிசிங்க பின்வருமாறு ஒரு கருத்தினையும் முன்வைப்பதனை அவதானிக்கக் கூடியதாக உள்ளது.” 13 ஆவது சீர்திருத்தத்தின் கீழ் கல்வி, சுகாதாரம், போக்குவரத்து என்பன தொடர்பாக மாகாணங்களுக்கு அதிகாரம் வழங்கப்பட்டாலும் அவற்றை நடைமுறைப் படுத்துகையில் அவை தொடர்பாக பாரிய அதிகாரங்கள் மத்திய அரசாங்கத்திடமே உள்ளது.அவற்றை வரையறுக்க வேண்டுமாயின் சமஷ்டி முறையொன்று அவசியமாகும்” என்று கலாநிதி ரொஹான் எதிரிசிங்க கூறுகின்றார்.

13 ஆவது திருத்தச் சட்டம் முன்வைக்கப்பட்டு 35 வருடங்களுக்கும் மேல் கடந்துள்ளது.இந்நிலையில் 13 ஆவது திருத்தச் சட்டத்தை தூக்கிப் பிடித்துக் கொண்டிராது அதனையும் விஞ்சிய அதாவது 13+ தீர்வொன்று குறித்து சிந்திக்க வேண்டும் என்று புத்திஜீவிகள் தமது நிலைப்பாட்டை வலியுறுத்தி இருந்தனர். பெரும்பாலான தமிழ் மக்களின் கருத்தும் இதுவாகவே  இருந்தது.இந்நிலையில் 13 ஆவது திருத்தச் சட்டத்தில் உள்ள விடயங்களையே கொடுக்க விரும்பாத இனவாதிகள் 13 ற்கும் விஞ்சிய தீர்வு தொடர்பாக உடன்படுவார்களா? என்ற நியாயமான கேள்வியையும் பலர் எழுப்பி இருந்தனர்.அது இப்போது நடந்தேறி இருக்கின்றது.

* கேள்வி:-

 13 ஆவது திருத்தம் தொடர்பில் மதகுருமார்களிடையே வலுப்பெற்று வருகின்ற எதிர்ப்பு தொடர்பில் என்ன கூற விரும்புகிறீர்கள்?

* பதில்:-

13 ஆவது திருத்தம் சிறுபான்மையினரைப் பொறுத்தவரையில் பல்வேறு சாதக விளைவுகளுக்கும் வித்திட்டுள்ளது என்பதில் இருவேறு கருத்துக்கு இடமில்லை என்று கருதுகின்றேன்.13 ஆவது திருத்தச் சட்டம் உருவாக்கப்பட்டு மாகாண சபை முறைக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டபோதும் காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்கள் மத்திய அரசின் வசமே இருந்தது.இது ஒரு பெரும் குறைபாடாகவே   கருதப்பட்டது.

இக்குறைபாடு காரணமாக மாகாண சபை முறை பெயரளவில் காணப்படுவதாகவும் மாகாண சபைகளுக்கு முழுமையான அதிகாரங்கள் வழங்கப்பட வேண்டும் என்றும் கருத்துக்களை அவதானிக்க முடிந்தது.எனினும் இவ்வதிகாரங்களை வழங்குவதில் இன்று வரை இழுபறி நிலையே இருந்து வருகின்றது.

இதனிடையே 13 ஆவது திருத்தத்தின் அமுலாக்கத்தின் அவசியம் தொடர்பில் அண்மையில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கருத்து தெரிவித்திருந்தார்.இதனைத் தொடர்ந்து தற்போது அவரின் கருத்துக்கு எதிர்ப்பலைகள் கிளம்பியுள்ளன.அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் தெரிவிக்கப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த புதன்கிழமை (08) கொழும்பில் பௌத்த பிக்குகளினால் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இதன்போது ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட பௌத்த தேரர்களால் 13 ஆவது திருத்தத்தின் பிரதியொன்றும் தீயிட்டுக் கொழுத்தப்பட்டமை சகலரினதும் கவனத்தை ஈர்த்த ஒரு செயலாக அமைந்தது.பிக்குகளின் எதிர்ப்பு நடவடிக்கைகள் காரணமாக போக்குவரத்து நடவடிக்கைகளும் அன்றைய தினம் பாதிப்படைந்திருந்தன.இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையும் பெரிதும் பாதிப்படைந்திருந்தது.இதேவேளை பாராளுமன்றத்தின் பிரதான நுழைவாயிலுக்கு அருகிலும் பிக்கு ஒருவர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிந்தார்.

1957 ஜூலை பண்டா செல்வா உடன்படிக்கை, 1965 டட்லி செல்வா உடன்படிக்கை என்பன பௌத்த பிக்குகளின் எதிர்ப்பு காரணமாக ஏற்கனவே கைவிடப்பட்டமையும் இங்கு நோக்கத்தக்கதாகும்.

இத்தகைய ஆர்ப்பாட்டங்களால் 13 ஆவது திருத்தச் சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துவதில் சிக்கல்கள் மேலெழுந்துள்ளன. இந்நிலையில்  பௌத்த பிக்குகளை மீறி 13 ஐ அமுல்படுத்த முடியாது என்று முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அண்மையில் பாராளுமன்றத்தில் தெரிவித்திருக்கின்றார். இருபுறமும் பற்றி எரியும் தீப்பந்தம் தை ஜனாதிபதி கையில் எடுத்துள்ளதாகவும் கருத்து வெளிப்பாடுகள் இருந்து வருகின்றன.

எவ்வாறெனினும்  ஒற்றையாட்சிக்கு பாதிப்பு ஏற்படாத வண்ணம் அதிகாரப்பகிர்வு மேற்கொள்ளப்படும் என்று அரச தரப்பு செய்திகள் வலியுறுத்துகின்றன.இதன் நம்பகத்தன்மையை கருத்தில் கொண்டு 13 ஆவது சீர்திருத்தத்தின் முழுமையான அமுலாக்கத்திற்கு சகலரும் ஒத்துழைப்பு வழங்குவதே சிறந்ததாகும் என்று நினைக்கிறேன்.

 செவ்வி கண்டவர் :-

 துரைசாமி நடராஜா