எமக்கு நஞ்சுப் போத்தலை தந்துவிட்டு இந்திய மீனவர்களை அனுமதியுங்கள் -காரைநகர் மீனவர்கள்

இந்திய மீனவர்களுக்கு இலங்கை கடற்பரப்பில் மீன்பிடி நடவடிக்கை களுக்கு அனுமதி வழங்கினால் எமக்கு நஞ்சுப் போத்தலைத் தந்து கொலை செய்யுங்கள் என்று யாழ்ப்பாணம் காரைநகர் அம்பாள் கடற்றொழிலாளர் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.

ஒரு மாத காலத்துக்குள் 60 இலட்சம் ரூபா வலை, உடைமைகள் இந்திய இழுவைப் படகுகளினால் சேதமடைந்துள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

அம்பாள் கடற்றொழிலாளர் சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடக சந்திப்பிலேயே இவ்வாறு கருத்து தெரிவிக்கப்பட்டது. “எங்களது கடற்றொழில் அமைச்சர் சரி, எங்களது அரசாங்கம் சரி எமது பிரச்சினைகளில் கரிசனை கொள்கிறார்கள் இல்லை. இப்போது மீன்பிடி பருவ காலம். இவ்வாறான சூழ்நிலையில் எமது மீனவர்கள் தொழில் செய்து உழைக்கும் நேரத்தில், அவர்களது பல இலட்சம் ரூபா பெறுமதியான முதல்கள் அழிக்கப்பட்டுள்ளன.

இதனால் ஏனைய தொழிலாளிகள் கடலுக்குச் சென்று தொழில் செய்வதற்குப் பயப்படுகின்றனர். இது குறித்து கடற்படையினருக்கு தெரிவித்த வேளை தமக்குக் கைது செய்வதற்கு அனுமதி இல்லை எனக் கூறுகின்றனர்.

இதற்கு முன்னர் படகுகள் கைது செய்யப்பட்டு வந்த நிலையில் தற்போது அவ்வாறு நடப்பதில்லை, எமது கரையிலிருந்து 5 கிலோமீற்றர் எல்லைக்குள் வந்து தொழில் செய்து எமது வளங்களை அழிக்கின்றனர்.” என்றும் அவர்கள் மேலும் தெரிவித்தனர்.