இந்திய பாராளுமன்ற மாநிலங்கள் அவையில், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச்செயலாளர் வைகோ இலங்கை இனப்படுகொலை குறித்து வெளியுறவுத் துறை அமைச்சரிடம் கேள்வி எழுப்பினார்.
அதன் விவரம் வருமாறு:-
அவைத் தலைவர் அவர்களே, அமைச்சர் அவர்கள் அளித்த அறிக்கையில், மற்ற நாடுகளுடனான இந்தியாவின் நட்புறவையும், நமது நேர்மறையான
அணுகுமுறையையும் மிகத் தெளிவாகக் காட்டுகிறது.
ஆனால், ஜெனீவா, ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபையில், இலங்கை தொடர்பாக வாக்கெடுப்பு நடந்தபோது, என்ன காரணங்களுக்காக இந்தியா வாக்களிக்கவில்லை என்பதை அறிய விரும்புகிறேன்? இது எனது முதல் கேள்வியாகும். இதற்கு மாண்புமிகு அமைச்சர் அவர்களிடமிருந்து பதில் பெற விரும்புகிறேன்.
இரண்டாவது, இலங்கையில் இனப்படுகொலை நடந்தது. இலட்சக்கணக்கான தமிழர்கள் கொல்லப்பட்டனர், பெண்கள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டனர், குழந்தைகள் கொல்லப்பட்டனர், முந்தைய அரசு ஆயுதங்களை வழங்கியது. அது வேறு. ஆனால், நீங்கள் இப்போது இலங்கைக்கு ஆதரவளிக்கிறீர்கள்.
ஆனால், இலங்கை அம்பாந்தோட்டை துறைமுகத்தை சீனாவுக்கு குத்தகைக்கு வழங்கியதுடன், அண்மையில் சீனப் போர்க்கப்பல் துறைமுகத்தில் தரையிறங்கி இருக்கிறது. இது இந்தியாவின் பாதுகாப்பு மற்றும் பொருளாதாரத்தில் தீவிர தாக்கத்தை ஏற்படுத்தும். இந்த முக்கியமான பிரச்சினையில், இந்தியாவின் நலனைக் காக்க நீங்கள் என்ன நடவடிக்கை எடுத்துள்ளீர்கள்? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.