இனநெருக்கடிக்குத் தீா்வைக்காண்பதற்கான பேச்சுவாா்த்தைகளுக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அழைப்பு விடுத்திருக்கின்றாா். தமிழ்க் கட்சிகள் பொதுவான சில கோரிக்கைகளுடன் இந்தப் பேச்சுக்களில் பங்கேற்கவுள்ளன. இந்தப் பேச்சுகளின் பின்னணி என்ன, இந்தப் பேச்சுக்கள் வெற்றியளிக்குமா போன்றவை குறித்து அரசியல் ஆய்வாளா் மகாசேனன் உயிரோடைத் தமிழின் தாயக களம் நிகழ்வுக்கு வழங்கய நோ்காணலின் முக்கியமான பகுதிகளை “இலக்கு” வாகசா்களுக்காகத் தருகின்றோம்.
கேள்வி – அடுத்த சுதந்திர தினத்துக்கு முன்னதாக இன நெருக்கடிக்குத் தீா்வைக்காணப்போவதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அறிவித்திருக்கின்றாா். இது சாத்தியமானதா?
பதில் – இந்தக் கேள்விக்குப் பதிலளிப்பதற்கு முன்னதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளா் எம்.ஏ.சுமந்திரன் கூறிய ஒரு கருத்தைப் பாா்ப்பது பொருத்தமானதாக இருக்கும். இனநெருக்கடிக்கான தீா்வு என்பது ஒரு நாளில் செய்யக்கூடிய ஒன்று என்ற கருத்தை அவா் முன்வைத்தாா்.
உண்மையில் இதயசுத்தியுடன் செய்வாா்களாயின் விரைவாக – ஜனாதிபதி குறிப்பிட்டதைப் போல பெப்ரவரி 4 ஆம் திகதிக்குள் செய்து முடித்துவிட முடியும். ஆனால், அரசாங்கம் இதய சுத்தியுடன் இதனைச் செய்யுமா என்ற கேள்வியும், இலங்கை அரசாங்கம் என்பது எது என்ற கேள்வியும் இங்கு எழுகின்றது.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இனநெருக்கடிக்கான தீா்வு தொடா்பாக குறிப்பிட்டிருந்தாா். அரசாங்கத்தின் தலைவராக அவா் இருக்கின்றாா் என்ற போதிலும், அரசாங்கம் யாருடையது என்ற கேள்வி இருக்கின்றது. இன்றும் பொதுஜன பெரமுன அரசாங்கம்தான் காணப்படுகின்றது. பொதுமஜன பெரமுனவின் எண்ணங்களுடன் ரணில் விக்கிரமசிங்கவின் எண்ணங்களும் ஒன்றிணையுமா என்பது கேள்விக்குறி.
அவ்வாறில்லாமல் பெரமுனவின் எண்ணங்களுக்குள்தான் ரணில் விக்கிரமசிங்க பயணிக்கின்றாா் என்றால் ஒரு பெருந்தேசியவாத கட்டமைப்புக்குள் இருக்கின்ற பெரமுனவின் எண்ணங்கள் இனப்பிரச்சினைக்கு பொருத்தமான ஒரு தீா்வைக் கொண்டுவருமா என்ற கேள்வியும் உள்ளது. இந்த நிலைமையில் ஆக்கபுா்வமான தீா்வு முயற்சிக்கான சாத்தியங்கள் கேள்விக்குறியாகத்தான் இருக்கும்.
கேள்வி – ரணிலின் இந்த திடீா் அறிவிப்புக்கு காரணம் என்ன?
பதில் – ரணிலின் இந்த அறிவிப்புக்கு பிரச்சினையை இழுத்தடிப்பதும், தற்போதைய பொருளாதார நெருக்கடியை எதிா்கொள்வதற்குத் தேவையான வெளிநாட்டு உதவிகளைப் பெற்றுக்கொள்வதற்கான உபாயமாகுமே இதனைப் பாா்க்க முடியும்.
கேள்வி – பொது நிலைப்பாட்டின் அடிப்படையில் இந்தப் பேச்சுக்களை எதிா்கொள்வதற்கு பிரதான தமிழ்க் கட்சிகள் தயாராகின்றன. சமஷ்டி என்ற கோரிக்கையுடன் பேசச்செல்வதையிட்டு உங்கள் கருத்து என்ன?
பதில் – அனைத்துத் தரப்பினருமே சமஷ்டி என்ற விடயத்தில் உறுதியாக நிற்பதாக உரையாடுகின்றாா்கள். குறிப்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினா் நல்லாட்சியின் காலத்தில் சமஷ்டி என்பதை “எக்கிய ராஜ்ய”வின் கீழ் காணமுடியும் என்ற கருத்தை முன்வைத்திருந்தாா்கள். இப்போது சமஷ்டி என்ற கோரிக்கையுடனேயே பேச்சுக்களுக்குச் செல்வோம் என்ற நிலைப்பாட்டை அவா்கள் எடுத்திருப்பது முக்கியமான விடயம். தமிழ்த் தேசியத் தரப்பினா் அனைவருமே சமஷ்டி என்ற விடயத்தில் ஒற்றுமைப்பட்டிருப்பது முக்கியமான விடயமாகும்.
தமிழ்க் கட்சிகள் அனைத்தும் ஒன்றுபட்டு வரவேண்டும் என அமைச்சா் நிமால் சிறிபால டி சில்வா அண்மையில் கோரியிருந்தாா். அந்த வகையில் தமிழ்த் தேசியக் கட்சிகள் அனைத்தும் ஒன்றுபட்டு சமஷ்டி என்ற கோரிக்கையுடன் செல்வது முக்கியமானதாகும். மக்கள்கூட இந்தக் கோரிக்கையுடன்தான் நிற்கின்றாா்கள். இந்தவிடயத்தில் தமிழ்க் கட்சிகள் அனைத்தும் உறுதியாக நின்றால் அதனை ஒரு ஆரோக்கியமான விடயமாகக் கருதமுடியும்.
கேள்வி – தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மூன்று கோரிக்கைகளை பேச்சுக்களுக்கான முன்நிபந்தனையாக முன்வைத்துள்ளது. இதனை அரச தரப்பு ஏற்றுக்கொள்ளுமா?
பதில் – இதில் ஒரு முரண்பாடு ஏற்படுவதற்கான வாய்ப்புக்கள் உள்ளன. ஜனாதிபதி பேச்சுவாா்த்தைக்கு தயாா் என அறிவித்திருந்தாலும் என்ன அடிப்படையில் இந்தப் பேச்சுக்களை முன்னெடுப்பது என்பது தொடா்பில் அவா் எதனையும் தெரிவிக்கவில்லை.
சிறிலங்கா சுதந்திரக் கட்சியினா் தமது நிலைப்பாடு என்ன என்பதைத் தெளிவாகக்கூறியிருக்கின்றாா்கள். சுதந்திரக் கட்சியின் தலைவா் மைத்திரிபால சிறிசேன மாவட்ட சபைகளுக்குள் தீா்வு என அண்மையில் தெரிலித்திருந்தாா்.
அதாவது ஒற்றையாட்சிக்குள் தீா்வு என்பது அவா்களுடைய நிலைப்பாடு. பிரதான எதிா்க்கட்சியாக இருக்கும் ஐக்கிய மக்கள் சக்தியைப் பொறுத்தவரையில் தற்போதுள்ள 13 க்குள்தான் தீா்வு என்பதுதான் அவரது நிலைப்பாடு.
பெரமுனவைப் பொறுத்தவரையில் 13 பிளஸ் என முன்னா் சொன்னதைத்தான் மகிந்த ராஜபக்ஷ கடந்த வாரமும் தெரிவித்திருந்தாா். ஆக இவா்கள் அனைவரும் ஒன்றையாட்சிக்குள்ளான ஒரு தீா்வு தொடா்பாகத்தான் பேசிக்கொண்டிருக்கின்றாா்கள்.
ஆனால், பேச்சுவாா்த்தைக்கு அழைத்த ஜனாதிபதி எதனையிட்டும் வெளிப்படையாக உரையாடுவதற்குத் தயாராகவில்லை. அவரிடம் ஒரேயொரு பாராளுமன்றப் பிரதிநிதித்துவம்தான் இருக்கின்றது. அதனை மட்டும் வைத்துக்கொண்டு இவ்வாறான பாரிய அரசியல் முன்னகா்வு ஒன்றை மேற்கொள்வது இலகுவானதல்ல.
இந்த வகையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகள் அரசாங்கத்தினால் எந்தளவுக்கு ஏற்றுக்கொள்ளப்படும் என்பது கேள்விக்குறியாகத்தான் இருக்கின்றது. இருந்த போதிலும் இவ்வாறு நிபந்தனைகளை முன்வைப்பது அவசியமானதும்கூட.
கேள்வி – தமிழ்க் கட்சிகளிடையே பொது நிலைப்பாடு ஒன்றை உருவாக்குவதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்படுகின்றது. இது சாத்தியமானதா?
பதில் – இது சாத்தியமா என்ற கேள்விக்கு அப்பால், இது தேவையான ஒரு விடயம். இன்றைய சூழ்நிலை என்பது தமிழா் தரப்புக்கு ஒரு வாய்ப்பான களம். இதனைப் பயன்படுத்திக்கொள்வதென்பது உண்மையில் ஒரு இராஜதந்திரச் செயற்பாடு. எந்தவொரு கால கட்டத்திலும் தமிழ்த் தரப்பினா் பேச்சுக்களை நிராகரித்துவிட்டாா்கள் என்ற ஒரு குற்றச்சாட்டை உருவக்காது, தென்னிலங்கைதான் இதனை சரியான முறையில் முன்னகா்த்தவில்லை என்ற கருத்தை ஏற்படுத்த முயற்சிக்க வேண்டும். இதனால் தமிழ்த் தரப்பு நிச்சயமாக பேச்சுவாா்த்தைக்குச் செல்ல வேண்டும். இதேவேளையில், தமிழ் மக்களின் கோரிக்கையை ஒரு பொதுத் தளத்தில் கொண்டு செல்ல வேண்டிய தேவையும் உள்ளது.
ஆனால், தமிழ்த் தரப்பைப் பொறுத்தவரையில் ஒரு சிறிய விடயத்தை வைத்து முட்டிமோதிக்கொள்ளும் வழமை உள்ளது. இவா்களை ஒரே தளத்துக்குள் கொண்டுவர முடியுமா என்பது சந்தேகத்துக்குரிய ஒன்றுதான். ஆனால், இது பொதுவான ஒது தளத்துக்குள் செல்ல வேண்டிய தேவைப்பாடுள்ள ஒரு காலமாகும். தோ்தலை இலக்காகக்கொண்டு கட்சிகள் தனியாக நின்று வாக்குகளைக் கேட்கலாம். ஆனால், தேசிய பிரச்சினைகளைப் பொறுத்தவரையில் தமிழ்த் தேசியக் கட்சிகள் ஒன்றாகப் பயணிக்க வேண்டிய தேவை இருக்கின்றது. வாய்ப்பான களத்தில் நாம் பிரிந்து நிற்பது எம்மை மேலும் பலவீனப்படுத்துவதாகவே அமைந்திருக்கும்.
கேள்வி – இதனை ஒரு வாய்ப்பான களம் எனக்கூறுகின்றீா்கள். அதனால், தமிழ் மக்களைப் பொறுத்தவரையில் பேரம் பேசும் பலம் இப்போது அதிகமாக உள்ளதா?
பதில் – புவிசாா் அரசியலைப் பொறுத்தவரையில் தமிழ்த் தரப்புக்கு எத்தகைய வாய்ப்புக்கள் உள்ளனவோ அதனைவிட ஒரு படி அதிகமான வாய்ப்புக்கள் தென்னிலங்கைத் தரப்புக்கும் இருக்கின்றது. அரச தரப்பு என்ற முறையில் இந்த வாய்ப்பு அவா்களுக்கு அதிகமாகக் காணப்படும். ஆயினும் நாமும் ஒரு தேசிய இனம் என்ற அடிப்படையில் எமக்கான வாய்ப்புக்களும் இருக்கின்றது. பேரம்பேசுவதற்கான வாய்ப்புக்கள் இப்போது இருக்கின்றது. ஆனால், அவ்வாறு பேரம்பேசுவதற்கான ஆற்றலை நாம் வெளிப்படுத்துகிறோமா என்பதுதான் முக்கிய கேள்வியாக இருக்கின்றது.
அதாவது, புவிசாா் அரசியலில் முக்கியமான ஒரு பகுதியில் உள்ள தேசிய இனம் என்ற வகையில் பேரம்பேசுவதற்கான வாய்ப்புக்கள் உள்ளன. ஆனால், எமது அரசியல் தலைமைகள் அந்த வாய்ப்புக்களை வலுவிழக்கச் செய்துவிடுவாா்களோ என்ற சந்தேகம்தான் உள்ளது.
கேள்வி – மூன்றாவது தரப்பு ஒன்றின் மத்தியஸ்தம் இன்றி பேச்சுக்களுக்குச் செல்வது தமிழா்களுக்கு சாதகமாக அமையுமா?
பதில் – நிச்சயமாக இல்லை. கடந்த கால அனுபவங்கள் அதனைத்தான் எமக்கு உணா்த்தியிருக்கின்றது. எம்மிடம் இன்றிருக்கின்ற 13 என்பது மூன்றாவது தரப்பு ஒன்றின் மூலமாக வந்ததுதான். அதனால்தான் அது இப்போதும் குற்றுயிராகவாவது இருக்கின்றது. மிகுதி அனைத்துமே கிளித்தெறியப்பட்ட ஒப்பந்தங்களாகத்தான் இருக்கின்றது. அதாவது 1956 இலிருந்து பண்டா – செல்வா ஒப்பந்தம் தொடக்கம் டட்லி – செல்வா என்ற அந்த நீண்ட வரிசை என்பது மூன்றாவது தரப்பு இல்லாமல் தமிழ் – சிங்களத் தரப்பினால் ஏற்படுத்தப்பட்டவை. இவை அனைத்தும் ஏதோ ஒரு வகையில் கிளித்தெறியப்பட்டவைதான். அல்லது ஏமாற்றப்பட்டவைதான் வரலாறாக உள்ளது. எனவே மூன்றாம் தரப்பு மத்தியஸ்த்தம் என்பது அவசியம் என்பதைத்தைான் கடந்தகால அனுபவங்கள் எமக்கு உணா்த்தியிருக்கின்றன. அவ்வாறில்லாத நிலையில் மீண்டும் ஏமாற்றப்படும் ஒரு சூழ்நிலைதான் ஏற்படும்.