பேச்சுவார்த்தைக்கான பேச்சுவார்த்தைகள் நடைபெற்றுள்ளதாகத் தகவல் வெளியாகியிருக்கின்றது. ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் பேச்சாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமாகிய எம்.ஏ.சுமந்திரனுடன் இந்தப் பேச்சுவார்த்தைகளை நடத்தியுள்ளதாகத் தெரிகின்றது. இதில் பிரதமர் தினேஸ் குணவர்தனவும் கலந்து கொண்டதாகவும் கூறப்பட்டுள்ளது.
பேச்சுவார்த்தைகளுக்கான வரைபடம் குறித்து இந்தப் பேச்சுக்களில் கவனம் செலுத்தப்பட்டிருப்பதாகவும், அது தொடர்பில் சுமந்திரனுடைய கோரிக்கையை சாதகமாகப் பரிசீலிப்பதற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இணக்கம் தெரிவித்திருப்பது என்பது இந்தப் பேச்சுவார்த்தை குறித்த கூடுதல் தகவலாகும். இதன் மூலம் டிசம்பர் 13 ஆம் திகதி அனைத்தக் கட்சித் தலைவர்களுடனான பேச்சுக்களில் ஓர் இணக்கப்பாடு எட்டப்படலாம் என்று இந்தப் பூர்வாங்கப் பேச்சுக்களின் பின்னணியில் எதிர் பார்க்கப்படுகின்றது.
இது அரசியல் தீர்வு குறித்த பேச்சுவார்த்தைகள் பற்றிய ஆரம்ப நிகழ்வுகள் மாத்திரமே. இந்த ஆரம்ப நிகழ்வுகள் தொடர்ந்து முன்னேற்றப்பாதையில் செல்லுமா இல்லையா என்பது இப்போதைக்கு நிச்சயமாகத் தெரியவில்லை. அது முன்னேற்றகரமாக அமையுமா என்பது குறித்து எதிர்வு கூறுவதும் கடினம்.
ஏனெனில் அரசியலமைப்புச் சபைக்குரிய உறுப்பினர் தெரிவில் தமிழ்த்தேசிய கூட்டமைப்புக்கு உரிய இடத்தை வழங்குவதற்கு பேரின தீவிரவாத அரசியல்வாதிகள் எதிர்ப்பு தெரிவித்திருக்கின்றனர். அரச தரப்பு மற்றும் எதிர்க்கட்சித் தரப்புக்களுடன், அடுத்த நிலையில் உள்ள தமிழ்த்தேசிய கூட்டமைப்புக்கு ஓர் உறுப்புரிமை வழங்கப்பட வேண்டும் என்பது அரசியலமைப்புச் சபை தொடர்பிலான சட்டவிதி. அந்த விதியை மீறி தமிழ்த்தேசிய ,கூட்டமைப்புக்கு உறுப்புரிமை வழங்கப்படக் கூடாது என்று பொதுஜன பெரமுன கட்சியின் மூலம் நாடாளுமன்றத்திற்குத் தெரிவாகியுள்ள விமல் வீரவன்ச எதிர்ப்பு தெரிவித்துள்ளார். அவருடைய எதிர்ப்பை ஆட்சேபித்து, தமது உரிமையை நிலைநாட்டும் வகையில் தமிழ்த்தேசிய கூட்டமைப்பு இது விடயத்தை ஜனாதிபதியின் கவனத்திற்குக் கொண்டு வந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியிருக்கின்றது.
ஆரசியலமைப்பு உறுப்புரிமைக்கே எதிர்ப்பு தெரிவித்துள்ள விமல் வீரவன்ச உதய கம்மன்பில உள்ளிட்டவர்களும் பௌத்த மகா சங்கத்தினரும் தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் சமஸ்டி நிலைப்பாட்டின் அடிப்படையில் அரசியல் தீர்வு காணும் விடயத்தில் அமைதி காப்பார்கள் என்று எதிர்பார்க்க முடியாது. அரசியல் தீர்வுக்கான பேச்சுக்களில் தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் நிலைப்பாடு எந்த அளவுக்கு முக்கியத்துவம் பெறுமா என்பதும் கேள்விக்குரியதே.
தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் சமஸ்டி முறையிலான அரசியல் தீர்வென்பது நாட்டைத் துண்டாடுவதற்கான முதல் நகர்வு என்பதே பேரின அரசியல்வாதிகளின் நிலைப்பாடாகும். ஒற்றையாட்சியின் கீழ் மத்திய அரசு அதிகாரத்தில் மேலோங்கி இருக்கின்ற ஒரு நிலைப்பாட்டிலேயே அரசியல் தீர்வு காணப்பட வேண்டும் என்பது அவர்களது பௌத்த சிங்கள அரசியல் சித்தாந்தமாகும். ஆனால் உள்ளக சுயநிர்ணய உரிமையின் அடிப்படையில் இறைமையுடன் கூடிய நிலையிலான சமஸ்டி முறையிலான அரசியல் தீர்வு வேண்டும் என்பதே தமிழ்த்தரப்பின் நிலைப்பாடாக வெளிப்படுத்தப்பட்டிருக்கின்றது.
பேச்சுவார்த்தைக்கு முன்னர் இருதரப்பு நிலைப்பாடும் நேரெதிர் முரணுடையவையாகவே காணப்படுகின்றது. இந்த முரண்பாட்டைக் களைந்து அல்லது கடந்து இரு தரப்பினரும் ஒரு நேர்க்கோட்டில் ஒரு புள்ளியில் சந்தித்திக்கும்போது மட்டுமே பேச்சுவார்த்தைகள் வெற்றிபெற்றதாக அமையும். இரு தரப்பும் தங்களது நிலைப்பாட்டில் இருந்து திறந்த மனதுடன் ஓர் இணக்கப்பாட்டிற்கு வருவதிலேயே பேச்சுவார்த்தைகளின் முன்னேற்றமும் வெற்றியும் தங்கியிருக்கின்றது.
இதற்கிடையில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் டிசம்பர் 13 ஆம் திகதிய பேச்சுவார்த்தைக்கான பேச்சுவார்த்தையில் தமிழ்த்தரப்பைப் பிரதிநிதித்துவம் செய்து சுமந்திரன் கலந்து கொண்டிருந்தமை தமிழ்த்தேசிய கூட்டமைப்புக்குள் வாதப் பிரதிவாதங்களை ஏற்படுத்தலாம் என்ற எதிர்பார்ப்பும் நிலவுகின்றது. தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் பேச்சாளர் என்ற நிலைப்பாட்டைக் கடந்து தமிழ் மக்கள் தொடர்பிலான அரசியல் விடயங்களில் சமந்திரனே முன்னின்று செயற்படுகின்றார். தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் தலைவர் என்ற ரீதியில் நாடாளுமன்ற உறுப்பினர் ஆர்.சம்பந்தன் பங்குபற்ற வேண்டிய சந்திப்புக்கள், விடயங்களில் சுமந்திரனே முன்னின்று செயற்பட்டு வருகின்றார்.
இதனால் சுமந்திரனுடைய செயற்பாடுகள் தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளின் விமர்சனத்துக்கு ஆளாகியிருக்கின்றன. சுமந்திரன் சார்ந்துள்ள தமிழரசுக் கட்சிக்குள்ளேயும் அவரது இத்தகைய நடவடிக்கைகள் கேள்விக்குள்ளாக்கப்பட்டிருக்கின்றது. இந்த நிலையில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க முன்னெடுத்துள்ள அதிகரப் பகிர்வு மூலமான அரசியல் தீர்வுக்கான பேச்சுக்களில் ரணில் விக்கிரமசிங்க சுமந்திரனை முன்னிலைப்படுத்துவது தமிழ்த்தரப்புக்குள்ளேயே சலசலப்பை உருவாக்கலாம்.
உண்மையில் அரசியல் தீர்வுக்கான பேச்சுவார்த்தைகளில் தமிழ்த்தரப்பின் குரலாக அல்லது முக்கிய பிரதிநிதியாக சுமந்திரன் செயற்படுவதும், அரச தரப்பினர் அவரை முதன்மைப்படுத்திச் செயற்படுவதும் அரசியல் தீர்வு விடயத்தில் பேரின அரசியல் கொள்கையை தமிழ் மக்கள் மீது திணிப்பதற்கான ஓர் அரசியல் உத்தியாகவும் நோக்கப்படலாம். ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் அரசியல் தீர்வுக்கான முயற்சி அவரைப் பொறுத்தமட்டில் இதய சுத்தியான முயற்சியாக இருக்கலாம். ஆனால் நல்லாட்சி அரசாங்கத்தின் உருவாக்கம் மற்றும் அரசியல் தீர்வு தொடர்பில் அந்த அரசாங்கத்தின் செயற்பாடு என்பவற்றின் பின்னணியில் ரணில் விக்கரமசிஙகவின் பேச்சுவார்த்தை முயற்சியை தமிழ்த்தரப்பினர் சந்தேகக் கண்கொண்டு நோக்கினால் அதனைத் தவறு என்று கூற முடியாது.
இது ஒரு புறமிருக்க, பேச்சுவார்த்தைகளுக்கான முன்னாயத்தத்தில் தமிழ்த்தரப்பினர் தங்களுக்குள் ஓர் இணக்கப்பாட்டிற்கு வரவேண்டியது முக்கியம். அரச தரப்பினால் முன்மொழியப்பட்ட பேச்சுவார்த்தைகளில் தமிழ்த்தேசியக் கொள்கையைக் கொண்டுள்ள அரசியல் கட்சிகள் தங்களுக்குள் கூடிப்பேசி தீர்க்கமானதோர் அரசியல் நிலைப்பாட்டின் அடிப்படையில் பேச்சுக்களில் கலந்து கொள்ள வேண்டியது அவசியம். இதனை தமிழ்த் தரப்பு அரசியல்வாதிகள் ஒரு முன் நிபந்தனையாகக்கூட கருதி அதற்கான ஆயத்தங்களில் ஈடுபடலாம்.
பேச்சுவார்த்தைகளில் தமிழ்த் தரப்பில் முன்வைக்கப்படுகின்ற விடயங்கள் ஆணித்தரமாக இருத்தல் வேண்டும். அதுவும் ஒரே குரலில் உறுதியாக வெளிப்படுத்தப்படல் வேண்டும். பேச்சுவார்த்தைக்கு நம்பிக்கையளிக்கும் வகையில் சில விடயங்களைக் கவனத்திற்கொண்டு அரசு நடவடிக்கை எடுத்தல் அவசியம் என்பது வலியுறுத்தப்பட வேண்டும். அந்த விடயங்கள் என்ன என்பதும் ஒரே குரலில் உறுதியாகத் தெரிவிக்கப்பட வேண்டும்.
ஆனால் இத்தகைய ஒன்றுபட்ட நிலையைத் தமிழ்க்கட்சிகள் ஒன்றிணைந்து இன்னும் எட்டவில்லை என்பதே கவலைக்குரியது. இத்தகைய ஒன்றிணைவு இல்லாமையினாலேயே தமிழ்த்தரப்பை ஆட்சியாளர்களும் பேரின அரசியல்வாதிகளும் தாங்கள் விரும்பியவாறு ஆட்டிப்படைக்கின்றார்கள். நியாயமாகத் தீர்வு காணப்பட வேண்டிய சாதரரண விடயங்களைக் கூட தங்களுடைய அரசியல் நலன்களுக்குப் பயன்படுத்தும் வகையில் இழுத்தடித்து இழுத்தடித்து ஏமாற்றிக் கொண்டிருக்கின்றார்கள். அது மட்டுமல்லாமல் இனத்துவேசத்தின் அடிப்படையில் தமிழ் மக்களின் உரிமைகளையும் வாழ்வு நிலைகளையும் அடக்கி ஒடுக்குகின்றார்கள். ஆக்கிரமித்து ஆட்சி செய்கின்றார்கள்.
இத்தகைய அத்துமீறிய செயற்பாடுகளுக்கு எதிராக உறுதியாகக் குரல் கொடுக்கவோ அல்லது அழுத்தமான போராட்டங்களை முன்னெடுத்து, ஆட்சியாளர்களுக்கு நெருக்கடியைக் கொடுத்து பிரச்சினைகளுக்குத் தீர்வு காணவோ முடியாத நிலைமையில் தமிழ் அரசியல் தலைவர்களும் அரசியல்வாதிகளும் தத்தளித்துக் கொண்டிருக்கின்றார்கள்.