இலங்கையில் இருந்து காணாமல் போயுள்ள பல பில்லியன் டொலர்கள் எங்கே? சம்பிக்க ரணவக்க தலைமையில் அமெரிக்க தூதரகத்தில் மனு

காணாமல் போயுள்ள பல பில்லியன் டொலர்கள்

இலங்கையிலிருந்து கடத்தப்பட்ட 19.9 பில்லியன் டொலர்கள் தொடர்பிலும், ராஜபக்சக்களின் குடும்பங்கள் மற்றும் உறவினர்கள் அமெரிக்காவில் வைத்துள்ள பெரும் சொத்துக்கள் தொடர்பிலும் விசாரணை நடத்தி இலங்கைக்கு சொந்தமான சொத்துக்களை திரும்ப வழங்க நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தி அமெரிக்க தூதரகத்திடம் மனுவொன்று கையளிக்கப்பட்டுள்ளது.

பாட்டலி சம்பிக்க ரணவக்க தலைமையில் கொள்ளுப்பிட்டி பகுதியில் போராட்டம் ஒன்றை ஏற்பாடு செய்திருந்ததுடன், கொள்ளுப்பிட்டி புகையிரத நிலையத்தில் இருந்து பேரணியாக அமெரிக்க தூதரகத்தை அடைந்த குழுவினர் அமெரிக்க தூதரகத்திடம் மனு ஒன்றையும் கையளித்துள்ளனர்.

குறித்த மனுவில், உலகளாவிய நிதி ஒருமைப்பாட்டு அறிக்கையின்படி 2005 மற்றும் 2013 க்கு இடையில் 19.9 பில்லியன் டொலர்கள் இலங்கையிலிருந்து கடத்தப்பட்டதாக மனுவில் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இதன் விளைவாக, ஒவ்வொரு ஆண்டும் 1.9 பில்லியன் டொலர்கள் இலங்கையில் இருந்து வெளியேற்றப்படுகின்றன, மேலும் அப்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கம் மற்றும் ராஜபக்சக்களின் குடும்பங்கள் மற்றும் உறவினர்கள் அமெரிக்காவில் பெரும் சொத்துக்களை வைத்துள்ளனர்.

அவர்கள் எப்படி சொத்து வாங்கினார்கள் என்பது குறித்து விசாரணை செய்து இந்தச் சொத்துக்கள் இலங்கையில் இருந்து திருடப்பட்ட செல்வத்தின் மூலம் சம்பாதித்தவை என்பது உறுதியானால், அந்த சொத்துக்களை தடை செய்து இலங்கைக்கு செல்வத்தை திரும்ப வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனை தொடர்ந்து நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க, “இன்று இந்த நாட்டில் உள்ள பிரச்சினை, வாரத்திற்கு சில டொலர்கள் கொஞ்சம் எண்ணையைக் கேட்டுத் தீர்க்கும் பிரச்சினையல்ல. 2014ல் இந்த குடும்பம் நாட்டின் சொத்துக்களை கொள்ளையடித்தது என்று சொன்னோம், ஆனால் பின்னர் எங்களை துரோகிகள் என்று குற்றம் சாட்டினார்கள். ஆனால் இன்று ராஜபக்சக்களால் கொள்ளையடிக்கப்பட்ட சொத்துக்களை எமது நாட்டுக்கு வழங்க வேண்டும் என்பதே முழு நாட்டின் கோரிக்கையாக உள்ளது.

நாட்டு மக்களின் பிள்ளைகளின் சொத்துக்களை அபகரித்துவிட்டு, அமெரிக்காவுக்கு தப்பிச் சென்று சுகமாக வாழ ராஜபக்சக்களை அனுமதிக்க முடியாது. நாட்டின் சொத்தை கொள்ளையடித்தவர்கள் தற்போது நாட்டை விட்டு வெளியேறி வருகின்றனர். ஜனாதிபதியும் பிரதமரும் வெளியேற முடியாது என்கிறார்கள். ஆனால் நாடாளுமன்றம் அரசியலமைப்பு ரீதியாக அவற்றை நீக்க முடியும்.நாடாளுமன்றத்தினால் ஜனாதிபதியை வீட்டுக்கு அனுப்ப முடியும்.

19வது திருத்தம் போன்றவற்றின் மூலம் ஜனாதிபதியின் அதிகாரங்களை துண்டித்து பதவி நீக்கும் தீர்மானம் கொண்டு வந்து உச்ச நீதிமன்றத்தில் விசாரணை செய்து தண்டிக்க வேண்டும். குடும்ப பேதமின்றி கல்வியில் சிறந்து விளங்கும் இந்த நாட்டில் உள்ள அனைத்து திறமையான தொழில் வல்லுநர்கள், நிர்வாகிகள் மற்றும் பிறரை இந்த நாட்டைக் கைப்பற்ற அழைக்கிறோம்.

அமைச்சர்களின் அதிகாரங்களை நாடாளுமன்றம் எடுத்துக்கொள்ளலாம். ராஜபக்சக்களை வெளியேற்றி இந்த நாட்டை நடத்துவதற்கு கண்காணிப்புக் குழுக்களை உருவாக்கி பல அமைச்சுக்களில் இணையுமாறு இரு தரப்பினரையும் நாங்கள் அழைக்கிறோம் என்றும் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.

Tamil News