இலங்கையில் சுகாதார அவசர நிலையை பிரகடனப்படுத்துமாறு GMO கோரிக்கை

சுகாதார அவசர நிலையை பிரகடனப்படுத்துமாறு

கோட்டா அரசின் மிக மோசமான ஆட்சியின் காரணமாக இலங்கை சந்தித்துள்ள மிகப்பெரும் பொருளாதார நெருக்கடியை அடுத்து தற்போது சுகாதார கட்டமைப்புகள் சீர்குலைந்துள்ள நிலையில் சுகாதார அவசர நிலையை பிரகடனப்படுத்துமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் சுகாதார அவசரநிலையை பிரகடனப்படுத்துமாறு அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் சுகாதார அமைச்சின் செயலாளரிடம் கோரிக்கை விடுத்துள்ளது. பொருளாதார நெருக்கடி காரணமாக ஏற்பட்டுள்ள அத்தியாவசிய மருந்துகள் மற்றும் உபகரணங்கள் பற்றாக்குறை காரணமாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் ஏற்கனவே மருத்துவ அவசர நிலையை பிரகடனப்படுத்தியுள்ளது.

இவ்வாறான நிலையில் அரசாங்கமும் சுகாதார அவசர நிலையை பிரகடனப்படுத்த வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதேவேளை, உயிர் வாழும் உரிமை, சுகாதார சேவையை தடையின்றிப் பெறும் உரிமை மற்றும் கருத்துச் சுதந்திரம் உள்ளிட்ட மக்களின் அடிப்படை உரிமைகளை நிலைநாட்டுவதற்கு தற்போதைய அரசாங்கம் தவறி விட்டதாக அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் கடந்த சில நாட்களுக்கு முன் தெரிவித்திருந்தது.

நாட்டில் அத்தியாவசிய மருந்துகள், உபகரணங்கள் மற்றும் சத்திரசிகிச்சைக்கான பொருட்கள் இல்லாத நிலையில் அத்தியாவசிய சுகாதார சேவைகளை தொடர்ந்து வழங்கு சாத்தியமற்றது அரச மருத்துவ அதிகாரிகள் சங்க செயலாளர் டாக்டர் ஷெனால் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

இதற்கிடையே தற்போதைய நெருக்கடியின் காரணமாக அரசாங்க வைத்தியசாலைகளில் 40 விதமான மருந்துகளின் பற்றாக்குறை காணப்படுவதாக எச்சரிக்கப்பட்டுள்ளது. அத்துடன், 60 விதமான மருந்துகளின் கையிருப்பு இன்னும் ஒரு வாரத்துக்கு தேவையான அளவிலேயே உள்ளதாகவும் மருத்துவத் துறையினர் எச்சரித்துள்ளனர்.

கிளினிக் நோயாளிகள், நீரிழிவு நோயாளிகள் மற்றும் இதய நோயாளிகளுக்கு தேவையான மருந்துகளுக்கு கடும் பற்றாக்குறை உள்ளது. அதே நேரத்தில் மருத்துவ உபகரணங்களும் பற்றாக்குறையாக உள்ளன எனவும் அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

இந்தியா, சீனா, பாகிஸ்தான் மற்றும் பங்களாதேஷ் போன்ற ஆசிய நாடுகளிலிருந்து இலங்கை மருந்துப் பொருட்களை அதிகம் இறக்குமதி செய்கிறது. இந்நிலையில் அந்நியச் செலாவணி நெருக்கடி காரணமாக, மருந்துப் பொருட்களின் இறக்குமதி தடைப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Tamil News