தொல்லியல் திணைக்களம் இருக்கின்ற போது, தொல்லியல் செயலணி ஏன்?

319 Views

இலங்கையில் தொல்லியல் திணைக்களம் இருக்கின்ற போது, தொல்லியல் செயலணி என்பது எதற்காக அமைக்கப்பட்டது என்பது இன்னும் புரியாத பதிராகவே காணப்படுகின்றது என யாழ் பல்கலைக்கழகத்தின் தொல்லியல் வரலாற்றுத்துறை தலைவரும், மூத்த பேராசிரியருமான பரமு புஸ்பரத்தினம் கேள்வி எழுப்பியுள்ளார்.

இது தொடர்பில் அவர் இலக்கு ஊடகத்திற்கு மேலும் தெரிவித்துள்ளதாவது:

இலங்கையில் பிரித்தானியர் ஆட்சியிலிருந்து தொல்லியல் சார்ந்த ஆய்வுகளை மேற்கொள்ளவும், ஆவணப்படுத்தவும், பாதுகாக்கவும் சட்டங்கள் கொண்டு வரப்பட்டன. இந்தச் சட்டங்கள் 1949, 2011ஆகிய ஆண்டுகளில் மீண்டும் மாற்றப்பட்டு புதிய விடயங்கள் கொண்டு வரப்பட்டது. இந்தச் சட்டத்தின் பிரகாரம் இலங்கையிலுள்ள நூறு ஆண்டுகளுக்கு முற்பட்ட, மண்ணிற்குள் மறைந்திருக்கின்ற, மண்ணிற்கு வெளியே தெரிகின்ற மரபுரிமைச் சின்னங்களை கண்டறிந்து, ஆவணப்படுத்தி, பாதுகாப்பது அந்த தொல்லியல் சட்டத்தினது  முக்கிய நோக்கமாகும். இந்தச் சட்டத்திற்கு அமைவாக இலங்கையில் தொல்லியல் பணிப்பாளர் நாயகமும், அவருக்குக் கீழ் உதவிப் பணிப்பாளர்கள் என பலரும் பணியாற்றி வருகின்றார்கள். அந்த தொல்லியல் திணைக்களத்தின் கீழ் தொல்லியல் சின்னங்களைப் பாதுகாப்பதற்கு காவல் பிரிவும் உள்ளது.

எனவே இலங்கைப் பாராளுமன்றத்தில் இயற்றப்பட்ட தொல்லியல் சின்னங்களை பாதுகாக்கும் சட்டத்தின் பிரகாரம் இலங்கையின் தேசிய மரபுரிமைச் சின்னங்கள் சம்பந்தமான முடிவுகளை எடுக்கும் அதிகாரம் தொல்லியல் திணைக்களத்திற்கும், அதன் பணிப்பாளருக்கும், அவரின் கீழ் பணியாற்றும் பணியாற்றுபவர்களுக்கும் உரிய கடமையாக வரையறுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் தொல்லியல் திணைக்களம் இருக்கின்ற பொழுது, அதன் பணிப்பாளர் நாயகம், அதிகாரிகள், நிர்வாகிகள், உத்தியோகத்தர்களென பலர் கடமையாற்றி வருகின்ற நிலையில், மேலதிகமாக ஒரு தொல்லியல் செயலணி நிறுவப்பட்டிருப்பதன் நோக்கம் சரியாக எனக்கு இன்னும் புரியவில்லை. அதுவும் கிழக்கிலங்கையை மையப்படுத்தி அந்த செயலணி தமது நடவடிக்கைகளை எடுத்திருப்பதாக நான் அறிகின்றேன்.

அந்த செயலணியில் பாதுகாப்புப் பிரிவினரும், மதத் தலைவர்களும், தொல்லியல் சார்ந்த அறிஞர்களும் பங்கெடுப்பதாக பத்திரிகை வாயிலாக நான் அறிகின்றேன். தொல்லியல் திணைக்களம் இருக்கின்ற போது, தொல்லியல் செயலணி என்பது எதற்காக அமைக்கப்பட்டது என்பது இன்னும் புரியாத பதிராகவே காணப்படுகின்றது. இந்த செயலணி செய்யப் போகின்ற கடமைகள், திட்டங்கள் பற்றி இதுவரை எந்தவிதமான அறிவிப்பும் வராத நிலையில், இந்த செயலணி என்ன செய்கின்றது என்பதை அவர்களின் நடவடிக்கைகளைக் கொண்டே அவதானிக்க இருக்கின்றோம் என தெரிவித்துள்ளார்.

 

Leave a Reply