ஜனாதிபதி சிறிசேன இராணுவ முகாமில் உணவு உண்ண அழைத்தபோது நான் மறுத்து விட்டேன்

ஜனாதிபதி சிறிசேன என்னை கிளிநொச்சி இராணுவ முகாமில் மதிய உணவு உண்ண அழைத்த போது ,நான் அங்கு செல்ல மறுத்து விட்டேன். கொள்கையில் பற்று உள்ளவர்கள் சில விடயங்களை செய்ய மாட்டார்கள். சுயநலனுக்காக வழி தவற மாட்டார்கள் என வடமாகாண முன்னாள் முதலமைச்சரும், தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தலைவருமான நீதியரசர் க.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.

தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தேர்தல் பிரச்சார கூட்டம் நேற்று மாலை 5.45 மணியளவில் மன்னார் பொது விளையாட்டு மைதானத்தில் மன்னார் நகர சபை உறுப்பினர் எஸ்.ஆர்.குமரேஸ் தலைமையில் இடம் பெற்றது.

இதன் போது உரையாற்றுகையில்,

நானும் சந்தர்ப்பவாதியாக மாறி சிங்கள மக்கள் மற்றும் அரசியல்வாதிகளுடன் ஏற்கனவே இருந்த தொடர்புகள் காரணமாக நான் பிறந்து வளர்ந்தது கொழும்பில் அவர்களுடன் இருந்த தொடர்புகள் காரணமாக அரசாங்கத்துடன் இணைந்து அவர்களுக்கு ஏற்ப தாளம் போட்டு இருந்தால் அல்லது அவர்களை நெல்சன் மண்டேலாவிற்கு ஒப்பாக போற்றி துதி பாடி இருந்தால் எமது மாகாண சபைக்கு பல மடங்கு நிதியை அவர்கள் ஒதுக்கி இருப்பார்கள்.

பல செயல்திட்டங்களை வடக்கு மாகாணத்தில் முன்னெடுக்க அனுமதி வழங்கிய இருப்பார்கள்.ஆனால் அவ்வாறு செய்திருந்தால் தமிழ் மக்களின் பல தசாப்த கால உரிமைப் போராட்டங்களுக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தி இருப்பேன். பெரும் துரோகத்தை அதனால் நான் இழைத்திருப்பேன்.

அதனால் தான் நான் அத்தகைய தவறை செய்யவில்லை. தமிழ் தேசிய கூட்டமைப்புடன் மட்டுமல்ல அப்போதைய பிரதமர் ஜனாதிபதியுடன் நான் பல தடவைகள் எமது கொள்கைகள் காரணமாக நான் முறண்பட நேர்ந்தது.

நாங்கள் இருவரும் பயணித்துக் கொண்டிருக்கும் போது,  ஜனாதிபதி சிறிசேன என்னை கிளிநொச்சி இராணுவ முகாமில் மதிய உணவு உண்ண அழைத்த வேளை, ”நான் இராணுவத்தினரை வடக்கில் இருந்து வெளியே அனுப்ப வேண்டும் என்று கூறி வருகின்றேன்.நான் அப்படி அவர்கள் முகாமில் சென்று சாப்பிடுவது” என்று கேட்டு அங்கு செல்ல மறுத்து விட்டேன். கொள்கையில் பற்று உள்ளவர்கள் சில விடயங்களை செய்ய மாட்டார்கள். சுயநலனுக்காக வழி தவற மாட்டார்கள்.

அவ்வாறு இல்லாமல் சுய நன்மைக்காக கூட்டமைப்பு பாதை மாறியதால் தான் எமது தேசிய கூட்டணி உருவாகியது.எனவே நாங்கள் பிரிய வேண்டி வந்தமைக்கு காரணம் தமிழ் தேசியக் கூட்டமைப்பினரின் சுயநலம் சார்ந்த கொள்கைகள் நடவடிக்கைகள் தான்.

கொள்கை வழி பயணத்தில் நாம் தொடரந்து செல்வோம். எமக்கு பின்பும் இந்த கட்சி நீடித்து நிலைத்து நிற்கும் என்று எதிர் பார்க்கின்றோம்.

தாம் நினைத்தபடி அரசுக்கு முண்டு கொடுப்பதும் அரசில் இருந்து கிடைக்கப் பெறும் அற்ப சொற்ப சலுகைகளுக்காக தமது கொள்கையிலிருந்து விலகி தம்மை பொருளாதார ரீதியாக வலுப்படுத்துகின்றதுமான தம் சார்பான பொருளாதார ரீதியாக வலுப்படுத்துகின்றதுமான ஒரு கூட்டமாக கூட்டமைப்பில் உள்ளவர்கள் இப்பொழுது மாறிவிட்டார்கள் என்கிறார்.

இதேவேளை முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான சுரேஸ் பிரேமச்சந்திரன்,சிவசக்தி ஆனந்தன் முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் சிவாஜிலிங்கம் மற்றும் சட்டத்தரணி சிறிகாந்தா ஆகியோர் உரை நிகழ்த்தினர்.