சி.ஐ.டி. விசாரணையின் போது மைத்திரி தெரிவித்ததும் தெரிவிக்காதவையும்

ஈஸ்டர் தாக்குதல் சூத்திரதாரிகள் தொடர்பில் தனக்கு தகவல் அளித்தவர் குறித்து எந்த விடயங்களையும் சி.ஐ.டியினருக்கு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வழங்கவில்லை என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சூத்திரதாரிகள் யார் என்பது தனக்கு தெரியும் என மைத்திரிபால சிறிசேன அண்மையில் கூறியிருந்தார். இந்த விடயம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதைத் தொடர்ந்து நேற்று முன்தினம் அவரிடம் சி.ஐ.டியினர் சுமார் 6 மணிநேரம் வாக்குமூலத்தை பதிவு செய்தனர்.

முன்வாசல் வழியாக வந்த சிறிசேன வழமையான கேள்விகளை எதிர்கொண்டார் என சி. ஐ. டி. வட்டாரங்களை மேற்கோள்காட்டி தகவல்கள் வெளியாகியுள்ளன. உதவி பொலிஸ் அத்தியட்சகர் ஒருவரின் கண்காணிப்பில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் விசாரணைகளை முன்னெடுத்தார். குறுக்கு விசாரணைகளும் நடைபெற்றன.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களின் முக்கிய சூத்திரதாரிகள் யார் என்பது மூன்று வாரங்களுக்கு முன்பே தனக்கு தெரியவந்ததாக விசாரணையின்போது தெரிவித்த மைத்திரிபால சிறிசேன, தனக்கு யார் அந்த விடயத்தைத் தெரிவித்தார் என்பதைக் கூறவில்லை. முன்னாள் ஜனாதிபதி தெரிவித்த விடயங்களை மீளாய்வு செய்வோம் என தெரிவித்துள்ள பொலிஸ் அதிகாரி ஒருவர் சட்டமா அதிபரின் உத்தரவின் படி அடுத்த கட்ட நடவடிக்கைகளை எடுப்போம்” என்று தெரிவித்தாா்.

இதனிடையே, முன்னாள் ஜனாதிபதி தெரிவித்த விடயங்களை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க சி. ஐ. டியினர் நடவடிக்கை
களை எடுத்துள்ளனர் என்றும் கூறப்படுகின்றது.