குருந்துாா் சிங்கள மயமாக்கலின் பின்னணி என்ன?-அகிலன்

நாட்டின் பாரிய பொருளாதாரப் பிரச்சினை, அரசியல் பிரச்சினை, ஜெனிவாவில் சா்வதேசப் பிரச்சினை என மூன்று முனைகளில் நெருக்கடிகளை எதிா்கொண்டுள்ள நிலையிலும், குருந்துாா் மலையையும், திருகோணமலையையும் முழுமையாக சிங்கள மயமாக்கி – வடக்கு – கிழக்கு தமிழ் மக்களின் நிலப்பிரப்புத் தொடா்ச்சியைத் துண்டிப்பதற்கான செயற்பாடுகளை அரசாங்கம் தீவிரப்படுத்தியிருக்கின்றது.

தொல்பொருள் திணைக்களமும், பௌத்த மகாசங்கங்களும்தான் இதில் சம்பந்தப்பட்டிருப்பதாகக் காட்டிக்கொண்டாலும் கூட அரசாங்கத்தின் ஆசீா்வாதம் இல்லாமல் அவா்கள் களத்தில் இறங்கியிருக்கமாட்டாா்கள் என்பது அனைவருக்கும் தெரியும்! கூடவே படையினரும் பொலிஸாரும் அவா்களுக்கு சாா்பாக களத்தில் இறங்கியிருக்கின்றாா்கள்.

அரசாங்கத்தின் நிகழ்ச்சி நிரலில் இவைதான் இப்போது பிரதானமானதாக உள்ளது. நீதிமன்ற உத்தரவையும் மீறி இதற்கான செயற்பாடுகளை முன்னெடுப்பது என்பதில் அரசாங்கம் தீவிரமாக இருப்பதை குருந்துாா் மலைப் பகுதியில் தொடா்ச்சியாக இடம்பெறும் சம்பவங்கள் உறுதிப்படுத்துகின்றன.

நீதிமன்ற உத்தரவையும், தொல்பொருள் திணைக்களத்துக்குள்ள அதிகாரத்தையும் மீறி சட்டவிரோதமான முறையில் பௌத்த கோவிலை அமைத்த பிக்குகளும் அதிகாரிகளும், சுதந்திரமான இருக்க, அதற்கு எதிரான போராட்டத்தை சாத்வீகமான முறையில் முன்னெடுத்த தமிழ்க் கட்சிகளின் பிரதிநிதிகள் கைது செய்யப்பட்டிருக்கின்றாா்கள்.

இலங்கை பாரிய பொருளாதார நெருக்கடியை எதிா்கொண்டு அபிவிருத்தித் திட்டங்கள் பவற்றை முன்னெடுப்பதற்குக்கூட நிதி இல்லாதிருக்கும் நிலையில், முல்லைத்தீவு குருந்துாா்மலையிலும், திருகோணேஸ்வரம் பகுதியிலும் பாரிய கட்டுமாணப்பணிகளை முன்னெடுக்க பௌத்த பிக்குகளும், அவா்களுக்குப் பின்னணியிலிருந்து செயற்படும் அதிகாரிகளும் தயாராகியிருக்கின்றாா்கள். இதற்கு தொலை்பொருள் திணைக்களம் தனது வரம்பை மீறி அநுசரணைய வழங்கும் அதேவேளையில் அரசாங்கமும் சத்தமில்லாமல் தமது ஆதரவை வழங்கிவருகின்றது. அரசாங்கத்தின் மறைமுக ஆதரவு இல்லாமல் இவற்றை செய்ய முடியாது என்பது அனைவருக்கும் தெரியும்.

முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள குருந்துாா்மலை, தண்ணிடுறிப்பு, குமுழமுனை கிராமங்களில் தமிழ் மக்களுக்குச் சொந்தமான 632 ஏக்கா் காணியை தொல்பொருள் திணைக்களம் சுவீகரித்திருப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது. தமிழ் மக்களுடைய எதிா்ப்புக்களுக்கு மத்தியிலேயே இதற்கான நடவடிக்கைகள் தொல்பொருள் திணைக்களத்தினால் முன்னெடுக்கப்பட்டது. அதேவேளையில், நீதிமன்றக் கட்டளையை மீறி குருந்துாா்மலையில் பௌத்த கட்டுமானங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இங்கிருந்த இந்துக் அழிக்கப்பட்டே இந்த கட்டுமானப் பணியை தொல்பொருள் திணைக்களத்தின் ஆதரவுடன் பௌத்த பிக்குகள் முன்னெடுத்துவருகின்றாா்கள்.

குருந்துாா்மலைப் பகுதியில் பௌத்த சின்னங்கள் காணப்பட்டன எனக் கூறப்பட்டே இங்கு பௌத்த ஆலயம் ஒன்றை அமைப்பதற்கான முயற்சிகள் பௌத்த பிக்குகளால் முன்னெடுக்கப்பட்டது. இதற்கு தொல்பொருள் திணைக்களமும் முழுஅளவிலான ஆதரவை வழங்கிவருகின்றது. இதற்காக இந்த மலை உச்சியில் காணப்பட்ட இந்துக் கோவில் அழிக்கப்பட்டது. அங்கிருந்த சிவன் ஆலயத்தின் சின்னங்கள் காணாமல்போயிருந்தன. பாரிய பொருளாதார நெருக்கடிக்குள் நாடு சிக்கித் தவிக்கும் நிலையில், தென்பகுதியிலிருந்து சொகுசு பஸ்களில் வந்த பிக்குளே இவற்றை மேற்கொண்டாா்கள்.

தொல்பொருள் சட்டத்தின்படி இவ்வாறு செய்ய முடியுமா என யாழ்ப்பாணப் பல்கலைக்கழக பேராசிரியா் பரமுபுஷ்பரெத்தினத்திடம் கேட்டபோது இதற்கு அவா் விரிவாக விளக்கமளித்தாா். அவரது கருத்து இதுதான் –

“பாரிய பொருளாதார நெருக்கடி ஒன்றுக்குள் நாடு இருக்கும் நிலையில் இவ்வாறான ஒரு பௌத்த ஆலயத்தை மீளுருவாக்கம் செய்து புத்தர் சிலையை வைத்து வழிபட முற்படுவது சரியானதுதானா என்ற கேள்வி வருகின்ற போது – பாரிய பொருளாதார நெருக்கடியாக இருந்தாலும் சரி பொருளாதார செழிப்புள்ள காலமாக இருந்தாலும் சரி பௌத்த – சிங்கள மக்கள் வசிக்காத ஒரு இடத்தில் பௌத்தம் சார்ந்த ஒரு அழிபாடுகள் கண்டுபிடிக்கப்படுமானால் அவற்றை மீளக்கட்டி வழிபாட்டுக்குரியதாக அமைப்பதை ஏற்பதாக தொல்லியல் சட்டம் கூறவில்லை.

அநுராதபுரத்தில் 20 க்கும் மேற்பட்ட இந்து ஆலயங்களின் அழிபாடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அவை பெரும்பாலும் சைவ ஆலயங்கள், திராவிட கலை மரபில் கட்டப்பட்டவை. அந்த ஆலயங்களின் அழிபாடுகள் தேசிய மரபுரிமைச் சின்னங்களாகக் கருத்திற்கொண்டு பார்க்கப்பட்டதே தவிர, அவை மீள அமைக்கப்பட்டு வழிபாட்டுக்குரிய ஆலயங்களாக அமைக்கப்படவில்லை. அவற்றில் ஒரு காளிகோவிலைத் தவிர ஏனையவை எங்கிருந்தன என்பது கூட அடையாளங்காண முடியாதளவுக்கு அதனுடைய நிலைமை காணப்படுகின்றது.

எனவே குருந்துாரில் பௌத்த எச்சங்கள் காணப்படுமானால் அவற்றை கண்டறிந்து ஆய்வு செய்து பாதுகாத்து ஒரு மரபுரிமைச் சின்னமாகக்கொள்ள வேண்டுமே தவிர, முன்னொருகாலத்தில் சிங்கள மக்கள் வாழ்ந்ததற்கான  ஒரு சின்னமாகக் கருத்திற்கொண்டு அதனை மீளக்கட்டி ஒரு ஆலயமாக மாற்றுவது தொல்லியல் நடைமுறையின் சட்டங்களுக்கு முரணானதாகவே பார்க்கப்பட வேண்டும்”  எனச் சொல்கின்றாா் பேராசிரியா் புஷ்பரெத்தினம்.

நீதிமன்ற உத்தரவின்டி இங்கு பௌத்த கோவில் ஒன்றை அமைக்க முடியாது. தமிழா் தரப்பில் தொடுக்கப்பட்ட வழக்கின்படி இங்கு எந்தவிதமான கட்டுமானங்களையும் செய்யக்கூடாது என முல்லைத்தீவு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இலங்கையில் பல இடங்களில் பண்பாட்டுச் சின்னங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. அவற்றில் பெரும்பாலானவை பௌத்த மதம் சார்ந்தவை. அதனால், அந்த இடங்களில் எல்லாம் பௌத்த ஆலயங்களை அமைத்தால் இலங்கை முழுவதும் சிங்கள மக்கள் வாழ்ந்ததன் அடையாளமாகத்தான் அது பார்க்கப்படும். ஆனால், தொல்லியல் திணைக்கள வழமையின்படி பௌத்த அல்லது இந்து மதம் சார்ந்த ஆதாரங்கள் காணப்படும் போது அதனை தேசிய மரபுரிமையாகக் கருத்திற்கொண்டு அவற்றை மரபுரிமைச் சின்னமாகப் பிரகடனம் செய்வது அல்லது அந்த சின்னங்களை இருக்கின்ற நிலையிலேயே பாதுகாப்பது என்பதுதான் நடைமுறை.

பொலநறுவையில் 12 க்கும் அதிகமான சைவ ஆலயங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. ஆனால், அவற்றில் எதனையுமே பழைய நிலைக்கு மறுசீரமைத்து வழிபாட்டுக்குரியதாக மாற்றவில்லை. பெரும்பாலும் அழிபடைந்தமையாலும், வழிபாட்டுக்குரிய ஆலயமாக இருந்தமையாலும் தமிழ் மக்கள் அதனை வழிபட்டுவருவதாலும் தொல்லியல் திணைக்களம் அதற்குத் தடையாக இருக்கவில்லை.

அதேபோலத்தான் குருந்துாரில் பௌத்த சின்னங்கள் சிங்கள மக்களுக்குரியதா, தமிழ் மக்களுக்குரியதா என்பது விரிவாக ஆராயப்படவேண்டிய விடயம். அது யாருக்குரியதாக இருந்தாலும் அந்த ஆலயத்தை மீளக்கட்டி ஒரு கோபுரம் அமைத்து ஒரு முழுமையான பௌத்த ஆலயமாக மாற்றுவது நீதிமன்றக் கட்டளைக்கு முரணானது. தொல்பொருள் திணைக்களம் பின்பற்றிவருகின்ற நடைமுறைகளுக்கும் முரணானதாகத்தான் அது உள்ளது.

தொல்லியல் திணைக்கம் இவ்வாறுதான் நடந்துகொள்ள வேண்டும் என்பது தொல்லியல் சட்டங்களில் தெளிவாகச் சொல்லப்பட்டுள்ளது. அதனைவிட நீதிமன்ற உத்தரவு ஒன்றும் உள்ளது. இவை இவ்வாறிருக்க இதற்கு முரணாக அரசாங்கம் செல்வதற்கு துணிந்தமைக்கு காரணம் என்ன?

இலங்கையின் வரலாற்றில் என்றுமே இல்லாதளவுக்கு ஒரு பொருளாதார சீரழிவு உருவாகியுள்ளது. ஒட்டுமொத்த இலங்கை மக்களையும் பாதிக்கின்ற ஒன்றகவே இந்த பொருளாதார வீழ்ச்சி காணப்படுகின்றது. இந்தப் பொருளாதார நெருக்கடிக்கு எதிராக தென்னிலங்கை மக்கள் போராடிய அளவிற்கு இதுவரை தமிழ் மக்கள் போராட முன்வரவில்லை என்ற ஒரு கருத்து உள்ளது. இந்தப் பொருளாதார நெருக்கடி ஒரு மாதத்திலோ அல்லது ஒரு வருடத்திலோ முடிவுக்கு வரும் என எவரும் எதிர்பார்க்க முடியாது.

இந்த நிலையில் தென்னிலங்கையில் அரசுக்கு எதிராக எழுகின்ற இந்தப் போராட்டங்களில் இன, மத, மொழி வேறுபாடுகளைக் களைந்த நிலையில் இந்த நாட்டிலுள்ள அனைவரும் இணைந்து செயற்படவேண்டிய ஒரு நிலை நிச்சயமாக உருவாகும். அவ்வாறான போராட்டங்களை மழுங்கடிப்பதற்கு குருந்தலுாா் பௌத்த விகாரையை மீளக்கட்டும் செயற்பாடு இருக்கலாம் என விமா்சகா்கள் சிலா் குறிப்பிடுகின்றாா்கள்.

நாட்டின் பொருளாதாரம் சீரழிந்து போனாலும் பௌத்த மதத்துக்கு நாம் என்றும் துணையான முன்னுரிமை கொடுப்போம் என்ற ஒரு செய்தியை தீவிர சிங்கள – பௌத்த மக்களுக்குச் சொல்வதற்காகவும் இந்த முயற்சி அமைந்திருக்கலாம் என்ற கருத்தும் முன்வைக்கப்படுகின்றது.

இந்தப் பகுதியில் பௌத்த சின்னங்கள் சில காணப்பட்டதாகத் தெரிவித்தே இதனை ஒரு பௌத்த – சிங்கள மயப்படுத்துவதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்படுகின்றன.

குருந்தலூர்மலைக்கு அண்மையிலுள்ள கோவில் ஒன்றின் அத்திபாரத்திலிருந்து சமீபத்தில் கிடைத்த கல்வெட்டு ஒன்று தமிழர்கள் பொறித்த கல்வெட்டாக காணப்பட்டது. தமிழர்கள் பௌத்தத்துக்கு செய்த தொண்டு குறித்தாகவே இந்தக் கல்வெட்டுக்கள் இருந்தன. ஆகவே இந்த குறுந்தலூர் தொடர்பில் ஆழமாக ஆராயும்பொழுது அது தமிழர்களுக்கு உரியதா அவ்வது சிங்கள மக்களுக்குரியதா என்பதை உறுதிப்படுத்திக்கொள்ளலாம்.

எப்படியிருந்தாலும் இங்கு காணப்படும் பௌத்த எச்சங்கள் தேசிய மரபுரிமை அடையாளம். அதனை மரபுரிமை அடையாளமாகவே பாதுகாத்துக்கொள்ள வேண்டுமே தவிர நடைமுறைக்கு முரணாக இதனை ஒரு வழிபாட்டு ஆலயமாக மாற்ற முற்படுவது ஆகவே இருக்கும். குறிப்பிட்ட பகுதியில் ஆதிகாலத்தில் வாழ்ந்த தமிழ் மக்கள் பௌத்த மததத்தைப் பின்வற்றியவா்கள் என்பதற்கு பல ஆதாரங்கள் உள்ளன. வெறுமனே பௌத்த சின்னங்களை மட்டும் அடிப்படையாகக் கொண்டு இந்தப் பகுதியை சிங்களப் பகுதியாக மாற்றியமைக்கும் முயற்சிகள் சட்டவிரோதமானது மட்டுமன்றி, இனமுரண்பாட்டை மேலும் தீவிரப்படுத்தக்கூடியது ஒன்று!

இனங்களுக்கு இடையில் நல்லுறவை ஏற்படுத்துவதற்கான முயற்சிகளை முன்னெடுக்க வேண்டிய அரசாங்கம் முரண்பாடுகளைத் தீவிரப்படுத்துவதற்கான செயற்பாடுகளை முன்னெடுப்பது தமது அரசியல் இருப்பைப் பாதுகாத்துக்கொள்வதற்காகவே.