சீன-ரஷ்ய- அரபுலக உறவில் இந்தியாவின் நிலை என்ன?- இதயச்சந்திரன்

சிரிய அதிபர் பசீர் அல் அசாத் ஐக்கிய அரபுக் குடியரசிற்கு (அபுதாபி) போகிறார். அரபுலகத்தில் சிரியா மீண்டும் இணைய வேண்டுமென்கிற சகோதரத்துவ வேண்டுகோளினை விடுக்கிறது ஐக்கிய அரபுக் குடியரசு.

அதுமட்டுமா…..ஈரான் அதிபர் சவூதி அரேபியாவிற்குப் பயணமாகிறார்.ஓமான் சுல்தான் விரைவில் ஈரான் செல்கிறார். யேமனில் மோதிக்கொள்ளும் குழுக்கள் கைதிகளை பரிமாறிக் கொள்கின்றன.

ஓமான் வளைகுடாவில் சீனா, ரஷ்யா, ஈரான் இணைந்து படைத்துறைப் பயிற்சியில் ஈடுபடுகின்றன. இந்த திடீர் அரவணைப்புகளுக்கும், கைகுலுக்களுக்கும் என்ன காரணம்?.இந்த மாற்றங்களின் பின்னணியில் சீனாவும், ரஷ்யாவும் செயற்படுகிறதா?. Petrodollar ஆதிக்கம் இனி ஆட்டங்காணுமா?.

ரஷ்யா மீதான மேற்குலகின் நிதி முடக்கம்(sanction), எரிசக்தி ஏற்றுமதியில் மட்டும் தங்கியிருக்கும் அரபுநாடுகளுக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளதா?.

உலகின் எரிசக்தி இறக்குமதியில் முதன்மை நாடாகக் கருதப்படும் சீனாவைப் பகைத்துக்கொள்ள இவர்கள் விரும்பவில்லையா?. இப்படிப் பல கேள்விகள் எழுகின்றன.

சீனாவின் எரிசக்தி பாதுகாப்பிற்கு (Energy security) ,மத்திய கிழக்கு நாடுகளோடு ரஷ்யாவும் இணைந்து கொண்டது இந்த மாற்றத்திற்கான பிறிதொரு காரணியாகக் கொள்ளலாமா?.

ஐந்து நாடுகளின் பொருண்மியக் கூட்டமைப்பான BRICS உடன் இணைவதற்கான முன்னோட்டமாக, இந்த ‘சடுதியான’ பக்கத்துவீட்டுப் பயணங்களைப் பார்க்கமுடியுமா?.

இவர்கள் கைகுலுக்கும் காரணங்களை அமெரிக்கா புரிந்தாலும், திரண்டுவரும் புதிய அணிகள் தற்காலிகமானதா? அல்லது உறுதியானதாக இருக்குமா? என்பதற்கப்பால், இத்தளத்தில் இந்தியா எந்தவகையில் தன்னை இணைத்துக் கொள்ளப்போகிறது என்பது குறித்தே அதிக அக்கறையோடு அமெரிக்கா கவனிக்கும்.

இந்தியாவானது ‘பிரிக்ஸ்’ கூட்டமைப்பில் இருந்தாலும், சீனா, ரஷ்யா மற்றும் அரபுலகம் என்ற கூட்டு உருவாக்க முனையும் பொது நாணயத்தையோ அல்லது பொருளாதாரக் கட்டமைப்பையோ அல்லது VOSTRO (இந்தியாவின்)போன்ற புதிய இருதரப்பு Payment Settlement முறைமையையோ இந்தியா ஏற்றுக்கொள்ள வாய்ப்புள்ளதா?.

ஆனாலும் நடைபெறும் ரஷ்ய- உக்ரேயின் போரும், பெரிய வங்கிகளின் தொடர் வீழ்ச்சியும், குறிப்பாக சுவிஸ் Credit Sussie இன் $17 பில்லியன் கடன்பத்திர சிக்கலும் இணைந்து, உலக பொருளாதார நிதிக் கட்டமைப்பில் நம்பிக்கையீனத்தை ஏற்படுத்துகிறது.

இவையாவும் சேர்ந்து, இருதுருவ பூகோள அரசியல் வடிவத்தை மீண்டும் உறுதிப்படுத்தும்.இதில் இந்தியாவின் நிலைப்பாடு சிக்கல் மிகுந்ததாக இருக்கும்.

G20 கூட்டமைப்பின் தலைமைப் பொறுப்பினை ஏற்ற இந்தியா, எதிர்வரும் நாட்களில் பல சவால்களை எதிர்கொள்ள வேண்டிவரும்.