மாகாணசபைத் தேர்தல்களை தாமதமின்றி விரைவாக நடாத்தவேண்டும் – தமிழரசுக்கட்சி தீர்மானம்

தமிழரசுக்கட்சியின் செயற்குழுக்கூட்டத்தில் மாகாணசபைத் தேர்தல்களை இயலுமானவரை விரைவாக நடாத்தவேண்டும் என்ற தீர்மானம் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது. 

இலங்கை தமிழரசுக்கட்சியின் செயற்குழுக்கூட்டம் ஞாயிற்றுக்கிழமை (19) மன்னாரில் நடைபெற்றது. இதன்போது கட்சியின் உள்ளக விவகாரங்கள், மாகாணசபைத் தேர்தல்கள், உள்ளுராட்சிமன்றத் தேர்தல்கள், தமிழரசுக்கட்சியின் மாநாடு உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடப் பட்டுள்ளது.

குறிப்பாக பழைய முறையிலேனும் மாகாணசபைத்தேர்தல் உடனடியாக நடாத்தப்படவேண்டும் என்ற தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

தமிழரசுக்கட்சியின் யாழ்மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறிதரனால் இத்தீர்மானம் முன்மொழியப்பட்டுள்ளது.

அம்முன்மொழிவில் கடந்த 2013 ஆம் ஆண்டு செப்டெம்பர் 21 ஆம் திகதி நடைபெற்ற வடக்கு, மத்திய மற்றும் வடமேல் மாகாணசபைகளுக்கான தேர்தல்களின் அடிப்படையில் ஜனநாயக ரீதியாக மக்கள் ஆணையுடன் அமைக்கப்பட்ட மாகாணசபைகளின் செயல்நிலைக்காலம் கடந்த 2018 ஆம் ஆண்டு ஒக்டோபர் 23 ஆம் திகதியுடன் நிறைவடைந்து சுமார் நான்கரை ஆண்டுகள் கடந்த பின்னரும்கூட, இதுவரையில் மாகாணசபைத்தேர்தலை நடாத்துவதற்கான எந்தவொரு முயற்சியும் அரசதரப்பினரால் முன்னெடுக்கப்படவில்லை என்று சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அதுமாத்திரமன்றி ‘எமது அடிப்படை உரித்துக்களை சட்டரீதியாக நிலைநிறுத்துவதற்குரிய ஆகக்குறைந்த அதிகாரங்களைக் கொண்டிருக்கும் மாகாணசபைகளும் செயற்படாத சமகாலச்சூழலின் தீவிரத்தன்மையை உணர்ந்து, மாகாணசபைத் தேர்தலை நடாத்தக்கோரியோ அல்லது அதற்குரிய நடவடிக்கைகளை முன்னெடுக்கக்கோரியோ இதுவரை எமது கட்சி சார்பாக எவ்வித எழுத்தங்களும் பிரயோகிக்கப்படவில்லை என்ற பொதுநிலைப்பாடு பலராலும் வெளிப்படுத்தப்பட்டுவருகின்றது’ என்றும் அம்முன்மொழிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறானதொரு பின்னணியில் இயலுமானவரை விரைவாக மாகாணசபைத்தேர்தலை நடாத்துவதற்குரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவேண்டுமெனக்கோரி சமர்ப்பிக்கப்பட்ட அம்முன்மொழிவு கட்சிக்கூட்டத்தில் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது.

மேலும் இதன்போது கட்சியின் உள்ளக விவகாரங்கள் குறித்துக் கலந்துரையாடப்பட்டதுடன், தமிழரசுக்கட்சியின் மாநாட்டை எதிர்வரும் மேமாதம் நடாத்துவதற்கும் இணக்கம் காணப்பட்டுள்ளது.

Leave a Reply