“காணாமல் ஆக்கப்பட்டோருக்கு என்ன நடந்தது” என்பதை அரசாங்கம் சர்வதேசத்திடம் கூற வேண்டும்!

சர்வதேச நியமங்களை மதித்து வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான சர்வதேச தின நிகழ்வை நினைவு கூரும் அரசாங்கம் உள்நாட்டு மக்கள் கோருகின்ற சர்வதேச பொறிமுறையை நடைமுறைப்படுத்திவிட்டு காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு என்ன நடந்தது என்பதை வெளிப்படுத்த வேண்டும் என்று காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் வலியுறுத்தியுள்ளனர்.

“நீங்கள் விடுவித்த ஆட்கள் பற்றிய தகவல்களைத் தாருங்கள். அது தான் ஒரு சர்வதேச காணாமல் ஆக்கப்பட்ட தினத்தில் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கு அரசு செய்கின்ற நியாயமான செயலாக இருக்கும்” என்றும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

மன்னாரில் ஏற்பாடு செய்திருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் அவர்கள் இந்த விடயத்தை வலியுறுத்தியுள்ளனர்.

இதன்போது காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் கருத்து தெரிவிக்கையில், “ஒரு நாட்டில் சர்வதேச நெறிமுறைகளை நாங்கள் பின்பற்ற மாட்டோம் என்கிற ஒரு அரசாங்கம், சர்வதேச வலிந்து காணாமல் போனோர் தினத்தை ஏன் நடத்துகிறது? அவர்களுடைய சட்ட திட்டங்கள், நடைமுறைகள் எமது நாட்டிற்கு தேவைப்படாது” என்று குறிப்பிட்டுள்ளனர்.

காணாமல் போனோருக்கான அலுவலகம் என்பது காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளைத் தேடுகின்ற உறவுகளிடையே ஒரு தோல்வி அடைந்த ஒரு நெறிமுறையை முன்வைத்து வருகின்றது.

வலிந்து ஒவ்வொரு மாவட்டத்திலும் நஷ்டஈடு தருகிறோம் என்று கூறி, குறிப்பிட்ட தொகையை கொடுத்து பிரச்சினையை முடிக்கப் பார்க்கிறார்கள் என்றும் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.

காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் கேட்பது நஷ்டஈடு அல்ல.

காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை மீண்டும் ஒப்படைக்க வேண்டும்.

அவ்வாறு இல்லாவிட்டால் அவர்களை கடத்தி காணாமல் ஆக்கி, படுகொலை செய்து விட்டோம் என்பதை சர்வதேசத்திடம் ஒத்துக் கொள்ள வேண்டுமெனவும் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் தெரிவித்துள்ளனர்.