இணைப்புக்கு எதிராக எழும் பன்னாட்டு சமூகத்தின் குரல்கள்;மேற்குக்கரை இணைப்பு பிற்போடப்படுகிறது-தமிழில் ஜெயந்திரன்

ஏற்கனவே ஆக்கிரமிக்கப்பட்டிருக்கும் மேற்குக் கரையின் சில பகுதிகளை தமது நாட்டுடன் உத்தியோகபபூர்வமாக இணைப்பதற்கு ஏற்கனவே இஸ்ரேல் அரசு திட்டமிட்டிருந்தது. பல தரப்பினராலும் விமர்சிக்கப்பட்ட இச் செயற்பாடுகளை கடந்த புதன்கிழமையே ஆரம்பிப்பதற்கு தற்போதைய கூட்டணி அரசு தீர்மானித்திருந்தது. இருப்பினும் மேற்படி செயற்பாடுகள் பற்றிய அறிவிப்பு தற்போதைக்கு மேற்கொள்ளப்படமாட்டாது என அந்நாட்டின் வெளிவிவகார அமைச்சர் அண்மையில் தெரிவித்திருக்கிறார்.

இந்த இணைப்புத் திட்டங்கள் தொடர்பாக அமெரிக்காவுடன் தமது அரசு மேற்கொண்டுவரும் பேச்சுவார்த்தைகள் எதிர்வருகின்ற நாட்களில் தொடர்ந்து நடைபெறும் என்று இஸ்ரேல் நாட்டின் பிரதம மந்திரி நெத்தன்யாகு அறிவித்ததற்கு அடுத்த நாள் இச்செய்தி வெளியிடப்பட்டுள்ளது. சர்ச்சைக்குரிய இந்த விடயம் தொடர்பான விவாதத்தை யூலை முதலாம் திகதியே ஆரம்பிப்பதற்கு நெத்தன்யாகு ஏற்கனவே நாள் குறித்திருந்தார்.

அடுத்தடுத்து நடைபெற்ற மூன்று தேர்தல்கள் எந்த முடிவுகளையும் கொடுக்காத சூழலில்,நெத்தன்யாகுவின் வலதுசாரி லிக்குட் கட்சியுடன் இணைந்து ஆட்சியமைத்த மத்திய நீலம் வெள்ளைக் கட்சியின் உறுப்பினரான அஷ்கெனாசி, இஸ்ராயேலின் இராணுவ வானொலியில் இதைத் தெரிவித்தார்.

நேர்காணலை மேற்கொண்டவரால் தொடுக்கப்பட்ட ஏனைய வினாக்களுக்கான பதில்களை நெத்தன்யாகுவை வழங்குமாறு அஷ்கெனாசி பணித்ததிலிருந்து, பாலஸ்தீனர்களாலும் பன்னாட்டு சமூகத்தாலும் மிகக் கடுமையாக எதிர்க்கப்படும் ஒருதலைப்பட்சமான இந்த நகர்வுக்கான உரியநேரம் தொடர்பில் கூட்டணியில் பிளவுகள் ஏற்படுவதற்கான அறிகுறிகள் தென்படுகின்றன.

தற்போதைய கொரோனா வைரஸ் நெருக்கடி கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருப்படும் வரைக்கும் இந்த இணைப்பு தாமதிக்கப்படவேண்டும் என்று பாதுகாப்பு அமைச்சரும் இரண்டு வருடங்களுக்குப் பின்னர் பிரதம மந்திரிப் பதவியை ஏற்கவிருப்பவருமான பெனி கான்ட்ஸ் தெரிவித்தார். கூட்டணியில் எட்டப்பட்ட உடன்பாட்டுக்கமைய நீலம் வெள்ளைக் கட்சியின் தலைவரான கான்ட்ஸ், 2021ம் ஆண்டு நவம்பர் மாதத்தில் பிரதம மந்திரிக்கான பொறுப்பை ஏற்கவிருக்கிறார்.1223721492 இணைப்புக்கு எதிராக எழும் பன்னாட்டு சமூகத்தின் குரல்கள்;மேற்குக்கரை இணைப்பு பிற்போடப்படுகிறது-தமிழில் ஜெயந்திரன்

இருப்பினும்,ஜெருசலேம் நகருக்கு வெளியேயுள்ள புறநகர்ப்பகுதியில் அமைந்துள்ள ஒரு சட்டவிரோத குடியிருப்பையாவது இணைப்பதன் மூலம் ஒரு அடையாள ரீதியான இணைப்பை எதிர்வரும் நாட்களில் நெத்தன்யாகு அறிவிக்கக்கூடும் என்று இஸ்ராயேல் ஊடகச் செய்திகள் கூறுகின்றன.

ஆக்கிரமிப்பை மேலும் உறுதிப்படுத்துதல்

இது இப்படியிருக்க,குறிப்பிட்ட திட்டத்துக்கு தங்கள் எதிர்ப்பைத் தெரிவிப்பதற்காக பாலஸ்தீனர்கள் காஸா நகரத்தில் ஒரு ஆர்ப்பாட்டத்தை மேற்கொள்வதற்காக ஒன்று திரள்வதையும் அன்று மாலை மேற்குக்கரையில் ஊர்வலங்களை நடத்தத் திட்டமிட்டிருப்பதையும் அவதானிக்க முடிகிறது.

பாலஸ்தீன உத்தியோகத்தர்களைப் பொறுத்தவரையில் “இணைப்பு என்ற விடயம் படிப்படியாக ஏற்பட்டாலென்ன, அல்லது வாரங்கள் மாதங்களாகத் தாமதப்படுத்தப்பட்டாலென்ன, அது நிச்சயமாக நடக்கும் ஒரு விடயம்” என்று றமல்லா என்று அழைக்கப்படும் பாலஸ்தீன அதிகார பீடத்திலிருந்து,அல்ஜசீராவின் செய்தியாளரான நீடா இப்ராஹிம்; கூறினார். இஸ்ரேல் மேற்கொள்ளும் ஆக்கிரமிப்பை மேலும் உறுதிப்படுத்தி அதனை நிறுவனமயப்படுத்தும் செயற்பாட்டில் இது இன்னொரு படி என்று அவர்கள் தெரிவித்தனர்.

”மத்திய கிழக்குத் திட்டம்” என்று டொனால்ட் ரம்பினால் அழைக்கப்படும் திட்டத்துடன் இணைந்து செல்லும் இச்செயற்பாட்டை, கடந்த புதன்கிழமையே ஆரம்பிப்பதற்கு நெத்தன்யாகு மிகவும் ஆர்வமாக இருந்தார்.ap.trump .netanyahu இணைப்புக்கு எதிராக எழும் பன்னாட்டு சமூகத்தின் குரல்கள்;மேற்குக்கரை இணைப்பு பிற்போடப்படுகிறது-தமிழில் ஜெயந்திரன்

ஜனவரி மாதத்தின் இறுதிப்பகுதியில் அறிவிக்கப்பட்டு, பாலஸ்தீனர்களால் எதிர்க்கப்படும் இத்திட்டம், பன்னாட்டுச்சட்டத்தில் ”சட்டவிரோதமானவை” என்று கருதப்படுகின்ற மேற்குக்கரையில் உள்ள யூத குடியேற்றங்களையும் ஏனைய பிரதேசங்களையும் இஸ்ரேலுடன் இணைப்பதற்கான ஒரு பாதையைத் திறந்திருக்கிறது.

பாலஸ்தீனத்தில் ஆங்காங்கே இருக்கின்ற ஒரு சில பகுதிகளை இணைத்து, இராணுவப் பிரசன்னம் அற்ற ஒரு பாலஸ்தீன தேசத்தை உருவாக்குவது மேற்படி திட்டத்தின் ஒரு பகுதியாகும்.

மிக நீண்ட காலமாக நிறுத்தி வைக்கப்பட்டிருக்கின்ற இஸ்ரேல் நாட்டுடனான பேச்சுவார்த்தையை மீளவும் புதுப்பிப்பதற்குத் தாம் தயாராக இருப்பதாக அறிவிக்கும் பாலஸ்தீனத் தலைவர்கள்,டொனால் ரம்ப் முன்மொழிந்திருக்கும் விடயங்களின் அடிப்படையில் தாம் பேசத்தயாரில்லை எனத் தெரிவித்திருக்கிறார்கள்.

“அமெரிக்காவும் இஸ்ரேலும் இணைந்து தற்போது தயாரித்திருக்கும் திட்டத்தைப்பற்றிய பேச்சுவார்த்தை நடைபெறும் மேசையில் நிச்சயமாக நாங்கள் இருக்க மாட்டோம்” என்று பாலஸ்தீன விடுதலை இயக்கத்தின் நிறைவேற்றுக் குழுவின் செயலாளர் நாயகமான சாயெப் எரெகாட் தெரிவித்தார்.

“நெத்தன்யாகு முன்வைக்கும் இத்திட்டம் சமாதானத்துக்கான ஒரு திட்டம் அல்ல. மாறாக இது ஒரு இணைப்புத்திட்டம்,இது நிறவெறித்தன்மையைக் கொண்டது. இப்படிப்பட்ட எந்தப் பேச்சுவார்த்தையிலும் நாங்கள் கலந்துகொள்ள மாட்டோம்” என அவர் மேலும் தெரிவித்தார்.

மேற்குக் கரைப் பகுதியை இஸ்ராயேலுடன் இணைப்பது ஒரு போர்ப்பிரகடனத்துக்கு இணையானது என முற்றுகையிடப்பட்டிருக்கும் காஸா பிரதேசத்தில் நிர்வாகத்தை மேற்கொள்ளும் ஹமாஸ் தெரிவித்திருக்கிறது.

குறிப்பிட்ட மேற்குக் கரைப்பிரதேசங்களை இஸ்ராயேலுடன் இணைக்கும் இத்திட்டத்தின் காரணமாக பாலஸ்தீன மக்கள், தங்களது மிக முக்கியமான விவசாய நிலங்களையும் விசேடமாக ஜோர்தான் பள்ளத்தாக்குப் பிரதேசத்தை உள்ளடக்கிய தங்களது நீர் வளங்களையும் முற்றாக இழக்கும் நிலைக்குத் தள்ளப்படுவார்கள். அத்தோடு சமாதானத்துக்கான நிலம் என்னும் அடிப்படையைக்கொண்டு அரபு – இஸ்ரேல் முரண்பாட்டுக்கான தீர்வாக முன்வைக்கப்படுகின்ற இரு தேசக்கொள்கையின் சாத்தியத்தன்மையையும் இது முற்றாகவே அழித்துவிடும்.

அதே வேளையில், மேற்குக்கரையில் கடந்த பல வருடங்களாக உண்மையில் நடந்துகொண்டிருக்கும் விடயங்களைப் பார்க்கும் போது இணைப்பு என்பது ஏற்கனவே நடந்துவிட்ட ஒரு விடயத்தை பேச்சளவில் அறிவிக்கும் ஒரு விடயம் மட்டுமே என்று பாலஸ்தீனர்களில் பலர் வாதிடுகின்றனர்.24c7d8738b434657a268f4364db64576 18 இணைப்புக்கு எதிராக எழும் பன்னாட்டு சமூகத்தின் குரல்கள்;மேற்குக்கரை இணைப்பு பிற்போடப்படுகிறது-தமிழில் ஜெயந்திரன்

கடந்த சில வருடங்களாக நடைபெற்றுவருகின்ற அதிகரிக்கப்பட்ட குடியிருப்புக் கட்டுமானங்களும் அதே வேளையில் ”யூத குடியேறிகளுக்கு மாத்திரம்” என வரையறுக்கப்பட்டு இஸ்ராயேல் நாட்டுடன் இணைக்கும் நோக்குடன் ஏற்படுத்தப்பட்ட வீதிகளும் ஆங்காங்கே ஒன்றோடொன்று தொடர்ச்சியற்ற விதத்தில் உருவாக்கப்பட்ட மாநகரங்கள், நகரங்கள், கிராமங்கள் என்பவற்றை பாலஸ்தீனத்தில் தோற்றுவித்திருக்கிறது.

இணைப்புக்கு எதிராக எழும் பன்னாட்டுச் சமூகத்தின் குரல்கள்

”டொனால்ட் ரம்ப்”திட்டத்தின் ஒரு பகுதியான உடனடி இணைப்புக்கு அமெரிக்கா தனது மறைமுக ஆதரவை அளித்துள்ள போதிலும், பன்னாட்டு சமூகத்தின் பெரும்பகுதி இந்த இணைப்புக்கு முற்றிலும் எதிராகக் குரல்கொடுத்திருக்கிறது.

இஸ்ரேல் அரசினால் திட்டமிடப்பட்டுள்ள இந்த இணைப்பு,பன்னாட்டுச் சட்டத்தை மீறுவது மட்டுமன்றி,இஸ்ரேல் தேசத்துக்கு அருகில் ஒரு சுதந்திர பாலஸ்தீன தேசத்தை தாபிக்கும் சாத்தியத்தை கேள்விக்குறிக்குள்ளாக்கும் என்றும் ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகம்,ஐரோப்பிய ஒன்றியம்,முக்கிய அரபு நாடுகள் ஆகியோர் ஒருமித்துக் குரல்கொடுத்துள்ளனர்.

இணைப்பு ஒரு ”மிகப் பாரிய ஒரு மோதலைத்” தூண்டிவிடும் என்று இஸ்ரேலுடன் இராஜதந்திர உறவுகளைப் பேணுகின்ற இரு அரபு நாடுகளில் ஒன்றான ஜோர்தான் எச்சரித்திருப்பதோடு அப்படி இணைப்பு நடைபெறும் பட்சத்தில் இஸ்ரேலுடன் 1994ம் ஆண்டில் தாம் ஏற்படுத்திய சமாதான ஒப்பந்தை மீள்பரிசீலனை செய்ய வேண்டிய சூழல் உருவாகலாம் எனவும் அறிவித்திருக்கிறது.

இஸ்ரேல் நடைமுறைப்படுத்த உத்தேசிக்கும் இணைப்புக்கும் அதன் ”காட்டுச் சட்ட மனப்பாங்குக்கும்” எதிராக மிகக் கடுமையான நடவடிக்கையை எடுக்க வேண்டும் என்று மனித உரிமைகளுக்காக போராடுகின்ற குழுக்களில் ஒன்றான பன்னாட்டு மன்னிப்புச் சபை பன்னாட்டுச் சமூகத்தைக் கோரியிருக்கிறது.

“பன்னாட்டுச் சமூகத்தில் அங்கம் வகிப்போர் பன்னாட்டுச் சட்டத்தை அமுல்நடத்தி, ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையின் எந்தவொரு பகுதியையும் இஸ்ரேலுடன் இணைக்கும் செயற்பாடு முற்றிலும் செல்லுபடியற்றது என்பதை பகிரங்கமாக அறிவிக்க வேண்டும்” என்று மத்திய கிழக்கு மற்றும் வட ஆபிரிக்க பிராந்தியங்களுக்கான பன்னாட்டு மன்னிப்புச் சபையின் துணைப் பிராந்திய இயக்குநர் சாலே ஹிகாசி கூறியிருக்கிறார்.

நன்றி – அல்ஜசீரா

Leave a Reply