முல்லைத்தீவில் தேவை 60 வைத்தியர்கள் ஆனால் 27 வைத்தியர்களுடனே இயங்குகிறோம்

முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் நிலவும் மருத்துவர்கள் பற்றாக்குறை காரணமாக ஏற்பட்ட நெருக்கடி நிலமை தொடர்பான  அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் முல்லைத்தீவு மாவட்ட பொது வைத்தியசாலை கிளையினர்  ஊடக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

முல்லைத்தீவு மாவட்ட பொது வைத்தியசாலைக்கு நியமிக்கப்பட வேண்டிய மொத்த வைத்தியர்களின் எண்ணிக்கை ஆகக் குறைந்தது 60 ஆகும். ஆனால் எமது வைத்தியசாலை இதில் அரைவாசிக்கும் குறைவான வைத்தியர்களுடனேயே இயங்கி வருகின்றது. தற்போது 27 வைத்தியர்களே வைத்தியசாலையின் அனைத்துப் பிரிவுகளிலும் கடமையில் உள்ளனர்.

அதுவும் ஒரு மருத்துவரே 2 பொது மருத்துவ விடுதிகள்,2 பொது மருத்துவ சிகிச்சை கிளினிக்,அவசர சிகிச்சைப் பிரிவு மற்றும் கொரோனா தொற்று சந்தேகிக்கப்படும் நோயாளர்களை கவனிக்கும் இடைநிலைப் பிரிவு ஆகியவற்றிற்கான சேவைகளை வழங்குகின்றார். இதற்கு மேலதிகமாக வேறு சில பிரிவுகள் மருத்துவர்கள் இன்றி விசேட மருத்துவ நிபுணர்களால் மாத்திரம் சேவை வழங்கப்படுகின்றது.

135,000 சனத்தொகைக்குரிய வெளிநோயாளர் பிரிவினையும், 24 மணி நேர அவசர சிகிச்சைப் பிரிவினையும் 3 மருத்துவர்களே கவனிக்கிறார்கள். அத்துடன் மகப்பேறு மற்றும் பெண் நோயியில் சேவைகளைக் கவனிப்பதற்கு 2 மருத்துவர்களே உள்ளனர். எமது வைத்தியசாலை பற்றிய கடந்த வருட புள்ளி விபரங்கள் இவை,

1. வெளி நோயாளர் பிரிவு நோயாளர்கள்-85000
2. கிளினிக் நோயாளர்கள்-60000
3. விடுதிகளுக்கு அனுப்பப்பட்ட நோயாளர்கள் 21000

மேற்படி வைத்திய பற்றாக்குறைக்கு 20.09.2019 அன்றே மருத்துவ சேவைகள் பணிப்பாளரினால் (DGHS) யாழ் போதனா வைத்தியசாலை பணிப்பாளருக்கு குறைந்தது 4 உள்ளகப் பயிற்சி நிறைவு செய்து நியமனத்திற்காக காத்திருக்கும் வைத்தியர்களை மேற்படி நிலமைக்கு மாற்றுத் தீர்வாக முல்லைத்தீவு மாவட்ட பொது வைத்தியசாலைக்கு விடுவிக்குமாறு அறிவுறுத்தப்பட்டது.

ஆனால் அவ் அறிவுறுத்தல் முழுமையாக நடைமுறைப்படுத்தப்படவில்லை. அதாவது இரண்டு வார கால அடிப்படையில் இருவர் மட்டும்; சுழற்சி முறையில் விடுவிக்கப்பட்டு வந்தனர். ஆனால் அதுவும் ஒழுங்கான முறையில் நடைமுறைப்படுத்தப்படவில்லை.

இது தொடர்பாக நாங்கள் 26.02.2020 அன்று மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளருடன்  (PDHS)  தொடர்பு கொண்டதற்கிணங்க அவரினால் மருத்துவ சேவைகள் மேலதிக பணிப்பாளரிடம் (MS II)விடுவிக்கப்பட்ட வேண்டுகோளிற்கிணங்க சில உள்ளகப் பயிற்சியை நிறைவு செய்த வைத்தியர்களை விடுவிக்கப் பணிக்கப்பட்டது. அதன் பிரகாரம் வைத்தியர்கள் விடுவிக்கப்படவில்லை.

02.03.2020 அன்று சுகாதார அமைச்சின் அதிகாரிகளுக்கும் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தினருக்குமிடையில் நடைபெற்ற கூட்டத்தில் மேற்படி பிரச்சனைக்கு நிரந்தர தீர்வாக எடுக்கப்பட்ட முடிவுகளும் இன்னும் நடைமுறைப்படுத்தப்படவில்லை. இதனால் 19.07.2020 அன்று அரச மருத்துவ அதிகாரிகள் சங்க முல்லைத்தீவு மாவட்ட பொது வைத்தியசாலை கிளையினரால் இதன் தீவிரத்தன்மையை நன்கு ஆராய்ந்து தொடர் தொழிற்சங்க நடவடிக்கை மேற்கொள்வதாக தீர்மானிக்கப்பட்டது.

இதன் பிரகாரம் எமது தாய் சங்கத்தின் ஒப்புதலுடன் குறைந்தது நிரந்தரமாக 4 உள்ளகப் பயிற்சி நிறைவு செய்து நியமனத்திற்காகக் காத்திருக்கும் வைத்தியர்களை யாழ் போதனா வைத்தியசாலையிலிருந்து எமது வைத்தியசாலைக்கு விடுவிக்கப்படும் வரை 21.07.2020 காலை 8.00 மணியிலிருந்து அனைத்து பொது மருத்துவ விடுதிக்கான அனுமதிகளை நிறுத்தும் அதே நேரம் மற்றைய விடுதிகளிலுள்ள பொது மருத்துவசேவை தேவைப்படும் நோயாளர்களுக்கான சேவைகளையும் அவசர சிகிச்சை தேவைப்படுவோரிற்கான உடனடியான சிகிச்சைகளை வழங்கிய பின் மேலதிக சிகிச்சைசைக்காக வேறு வைத்தியசாலைக்கு மாற்றுவதற்கும் தேவையான ஏற்பாடுகள் மேற் கொள்ளப்பட்டுள்ளன.

இந்த தொழிற்சங்கப் போராட்டம் சம்மந்தமாக 19.07.2020 அன்றே கௌரவ ஆளுநர்,மற்றும் மருத்துவ சேவைகள் பணிப்பாளர், மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர்,மாவட்ட சுகாதார சேவைகள் பணிப்பாளர், எமது வைத்தியசாலைப் பணிப்பாளர், எமது தாய் சங்க செயலாளர் மற்றும் எமது சங்க வட மாகாண ஒருங்கிணைப்பாளர் ஆகியோருக்கு கடிதம் மூலம் அறிவிக்கப்பட்டது. மேலும் எமது வைத்தியசாலை நோயாளர் நலன்புரிச் சங்கம் மற்றும் வைத்தியசாலை அபிவிருத்திக் குழுவினருடனும் கலந்துரையாடல்கள் மேற்கொள்ளப்பட்டது.

இந்த தொழிற்சங்கப் போராட்டத்தை தொடர்ந்து 24.07.2020 கடந்த வெள்ளிக்கிழமை அன்று மீண்டும் மருத்துவ சேவைகள் பணிப்பாளரினால் யாழ் போதனா வைத்தியசாலைப் பணிப்பாளருக்கு இறுதியாக உள்ளகப் பயிற்சி நிறைவு செய்த வைத்திய அணியிலிருந்து தகுதிப் பட்டியலின் கீழ் வரிசையிலுள்ள 4 வைத்தியர்களை முல்லை மாவட்ட பொது வைத்தியசாலைக்கு விடுவிக்குமாறு தெளிவாகப் பணிக்கபபட்டு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

இந்த அவசர நிலைமையிலும் இன்னும் 4 நாட்களாகியும் யாழ் போதனா வைத்தியசாலைப் பணிப்பாளரினால் அந்த நான்கு வைத்தியர்களும் இன்னமும் விடுவிக்கப்படவில்லை என்பதால் தான் நாம் இந்த ஊடக சந்திப்பை மேற்கொள்கின்றோம்.

இந்த வைத்தியர்கள் பற்றாக்குறைக்கு வைத்தியர்களின் மேற்படிப்பிற்கான விலகல், வைத்தியர்களின் பதவி விலகல் எனப் பல காரணங்கள் இருப்பினும் பிரதான காரணம் கடந்த சில வருடங்களாக உள்ளகப் பயிற்சி நிறைவு செய்த வைத்தியர்களுக்கான நியமனங்கள் வழங்கப்படாமை ஆகும். வட மாகாணத்தில் அதிகளவு வைத்தியர்கள் உள்ளகப் பயிற்சி நடைபெறும் வைத்தியசாலை யாழ் போதனா வைத்தியசாலை ஆகும்.

அங்கு தற்போது மேலதிகமாக மூன்று வைத்திய அணிகள் (62 வைத்தியர்கள்) உள்ளகப் பயிற்சி நிறைவு செய்துவிட்டு வைத்திய நியமனத்திற்காக காத்துக் கொண்டிருக்கிறார்கள். இவர்களில் மருத்துவ சேவைகள் பணிப்பாளரினால் குறிப்பிட்ட நான்கு வைத்தியர்களையாவது அவரின் வேண்டுகோளின் பின்னரும் கூட யாழ் போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் வைத்தியர்களை விடுவிக்காமல் இருப்பது நியாயமற்ற செயலாகும். அதுவும் இந்த மாவட்ட மக்களின் வலி நன்கு அறிந்து அவர்களுடன் தோளுக்கு தோள் நின்று உதவிய ஒருவரின் இந்த அசமந்தப் போக்கு எங்களுக்கு வேதனை அளிக்கின்றது.

அத்துடன் மீண்டும் இரண்டு வார அடிப்படையில் சுழற்சிமுறை வைத்தியர்களை அனுப்பும் பட்சத்தில் தொடர்ந்து இதே நெருக்கடி நிலையைச் சந்திக்க நேரிடும் என்பதன் அடிப்படையிலே முல்லைத்தீவு மாவட்ட பொது வைத்தியசாலையின் தடையின்றிய சிறந்த சேவைக்காக இந்த நான்கு வைத்தியர்களும் நிரந்தரமாக விடுவிக்கப்படும் வரை எமது தொழிற்சங்கப் போராட்டம் தொடரும் என்பதையும் தேவைப்படின் எமது தாய்ச் சங்கத்தின் ஒப்புதலுடன் முழுமையான வேலை நிறுத்தப் போராட்டத்திற்கு செல்ல வேண்டி ஏற்படும் என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கின்றோம்.

அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம்
முல்லைத்தீவு மாவட்ட பொது வைத்தியசாலைக் கிளை
28.07.2020