கறுப்பு யூலை கலவரமல்ல;இனப் படுகொலையின் இலக்கணம்-தமிழில் ஜெயந்திரன்

கறுப்பு யூலையின் போது நடைபெற்ற நிகழ்வுகள் ஒரு இனப் படுகொலையாகப் பார்க்கப்படவேண்டியதற்கான சட்டபூர்வமான வாதங்கள் இக்கட்டுரையின் முற்பகுதியில் தரப்படுகின்றன.

இரண்டாவது பகுதி இனப்படுகொலையில் அரசின் பொறுப்பை ஆய்வு செய்வதோடு இது ஒரு இனப்படுகொலையாக ஏற்றுக் கொள்ளப்படவேண்டும் என்பதையும் எடுத்துக் கூறுகின்றது.

மூன்றாவது பகுதி தமிழ் மக்கள் இதனை இனப்படுகொலையாகப் பார்க்கவேண்டியதன் அவசியத்தை எடுத்துரைப்ப தோடு தமிழினம் அதனை எப்படிப் பயன்படுத்தலாம் என்பதையும் ஆராய்கிறது.

இலங்கை அரசுக்கு எதிராக தமிழீழ விடுதலைப்புலிகள் மேற்கொண்ட ஆயுதப் போராட்டத்தினை முனைப்புப் பெறவைத்த ஒரு நிகழ்வாக கறுப்பு யூலை  என அழைக்கப்படுகின்ற 1983 யூலை  24-29 வரையிலான நாட்கள் கருதப் படுகின்றன.

இருப்பினும் 1948ம் ஆண்டில் சிறீலங்கா சுதந்திரம் அடைந்த காலப்பகுதியில் இருந்தே இனங்களுக்கிடையிலான முரண்பாடுகள் அங்கு அதிகரித்து வந்திருக்கின்றன. 1956ம் ஆண்டில் நடைமுறைப்படுத்தப்பட்ட ‘‘சிங்களம் மட்டும் சட்டம்‘‘, சிங்கள மொழியை மட்டும் ஒரேயொரு உத்தியோகபூர்வ  மொழியாக அங்கீகரித்த பொழுது, தமிழர்கள் அரச பதவிகளை வகிப்பதற்குத் தடை ஏற்படுத்தப்பட்டது.

கட்டமைப்பு ரீதியிலான இந்த வன்முறைக்கு அகிம்சை வழியில் தமிழர்கள் தமது எதிர்ப்பை வெளிப்படுத்திய பொழுது, கொழும்பிலும் கல்லோயாவிலும் அரசாங்கத்தின் ஆதரவோடு, தமிழ் மக்களுக்கு எதிரான வன்முறை கட்டவிழ்த்து விடப்பட்டது.

1958, 1977 ஆகிய வருடங்களில் ஏற்படுத்தப்பட்ட இனக்கலவரங்கள் மற்றும் தமிழ் மக்களின் வரலாற்றுச் சின்னமாகவும் மக்கள் சந்திக்கும் ஓர் இடமாகவும் விளங்கிய யாழ்ப்பாண பொதுநூலகம் எரிக்கப்பட்டது போன்ற கலாச்சார ரீதியிலான இனப்படுகொலை என்பவை, தமிழ் இளைஞர்கள் தனிநாட்டுக்கான போராட்டத்தை முன்னெடுக்க அவர்களை இட்டுச்சென்றன.Cartoon Sinhala Only கறுப்பு யூலை கலவரமல்ல;இனப் படுகொலையின் இலக்கணம்-தமிழில் ஜெயந்திரன்

தமிழீழ விடுதலைப்புலிகளால் பதின்மூன்று இராணுவ வீரர்கள் கொல்லப்பட்ட நிகழ்வுக்குப் பதிலடியாகவே ஒருவாரம் நீடித்த கறுப்பு யூலை முன்னெடுக்கப்பட்டது என்ற தவறான கண்ணோட்டம் பொதுவாகவே காணப்படுகின்றது.

உண்மையில் அன்று நிகழ்ந்தது  திடீரென கும்பல்கள் தாமாகவே ஏற்படுத்திய ஒரு நிகழ்வு அல்ல. அதற்கு மாறாக அது அன்றைய அரசின் ஆதரவில் திட்டமிட்ட முறையில் வேண்டுமென்றே முன்னெடுக்கப்பட்ட ஒரு இனப் படுகொலையாகும்.

கறுப்பு யூலையின் போதோ அன்றேல் அதற்குப் பின்னரான காலப்பகுதியிலோ தமிழ் மக்களுக்கு எதிராக இழைக்கப்பட்ட மாபெரும் கொடூரங்களுக்காக, தனிநபர்களோ அல்லது அரசோ இதுவரையில் எந்தவிதமான பொறுப்புக்கூறலுக்கும் உள்ளாக்கப்படவில்லை.

கறுப்பு யூலையை முன்னெடுத்ததில் அரசு கொண்டிருந்த பொறுப்பை உற்றுநோக்கும் போது,  கறுப்பு யூலை ஒரு இனப் படுகொலையே என நாங்கள் வாதிடுவதுடன் 2009 இல் மீண்டும் ஒரு இனப்படுகொலை அரங்கேற்றப்பட்டது என்பதை உறுதிப்படுத்துவதோடு சிறீலங்கா அரசு இதற்கான முழுப்பொறுப்பையும் ஏற்றுக்கொள்ள வேண்டும் எனக்கேட்கிறோம்.

கறுப்பு யூலையின் போது அரசினால் மேற்கொள்ளப்பட்ட இனப் படுகொலைக்கான சான்றுகள்

இனப்படுகொலை தொடர்பான பன்னாட்டு குற்றவியல் சட்டமும் நீதித்துறையும் தற்போது இருக்கும் வடிவத்தில் கறுப்பு யூலை நடைபெற்ற காலப்பகுதியில் இருக்கவில்லை. இனப்படுகொலை என்ற குற்றத்தினுள் உள்ளடக்கப்படும் விடயங்கள் எவை என நவீன பன்னாட்டுச் சட்டங்கள் வழிகாட்டுதல்களைக் கொண்டிருக்கின்ற படியால், நவீன பன்னாட்டுச் சட்டங்களில் அடிப்படையில் இதனை பகுப்பாய்வு செய்வது பொருத்தமானதாகவிருக்கும்.  ‘‘பாதுகாக்கப்பட்ட ஒரு குழுமத்தின் கணிசமான பகுதியை அழித்தொழிப்பது‘‘ இனப்படுகொலையின் ஒரு முக்கிய நோக்கமாகும்.

 1.அழித்தொழிக்கும் நோக்கம்

இனப்படுகொலையின் முக்கிய அடையாளங்கள் அத்தனையையும் கறுப்பு யூலை தன்னகத்தே கொண்டிருந்தது. இவற்றுள் இனப்படுகொலையை நிகழ்த்த வேண்டும் என்ற அந்தக் குறிப்பிட்ட நோக்கத்துக்கான சான்று முக்கியமானது. கறுப்பு யூலைக்கு முன்னர் நாட்டின் அதிபரின் கூற்றுக்களிலும் தமிழ் மக்களுக்கு எதிராக மிகவும் திட்டமிடப்பட்ட முறையில் நிகழ்த்தப்பட்ட தாக்குதல்களிலும் இந்த நோக்கம் இருப்பதை நாம் உய்த்துணரலாம்.

1983ம் ஆண்டு யூலை மாதம் 11ம் திகதி, அப்போதைய அதிபர் ஜே.ஆர் ஜெயவர்த்தனா பின்வருமாறு கூறினார்:

யாழ்ப்பாண (தமிழ்) மக்கள் என்ன நினைக்கின்றார்கள் என்பதைப்பற்றி நான் கவலைப்படவில்லைஇப்போது நாங்கள் அவர்களை எண்ணிப்பார்க்க முடியாது. அவர்களது உயிர்களைப் பற்றியோ அல்லது எங்களைப் பற்றி அவர்கள் என்ன நினைக்கின்றார்கள் என்பதைப்பற்றியோ எண்ணிப்பார்க்க முடியாது. பயங்கரவாதிகள் துடைத்தழிக்கப்படும் வரைக்கும் எங்களுக்கு நல்லது எதுவும் நடக்கப்போவதில்லை. அவ்வளவும் தான். குறிப்பிட்ட குடற்பகுதியை முற்றாக அகற்றினாலொழிய குடல் வளரி அழற்சியினால் பாதிக்கப்பட்ட ஒரு நோயாளியை குணமாக்க முடியாதுJR 1 கறுப்பு யூலை கலவரமல்ல;இனப் படுகொலையின் இலக்கணம்-தமிழில் ஜெயந்திரன்

மேலும்

வடக்கில் நீங்கள் எவ்வளவு தூரம் அழுத்தத்தைக் கொடுக்கிறீர்களோ அவ்வளவுக்கு சிங்கள மக்கள் இங்கு மகிழ்ச்சியடைவார்கள். உண்மையில் தமிழ் மக்களை நான் எவ்வளவுக்கு பட்டினி போடுகிறேனோ அவ்வளவுக்கு சிங்கள மக்கள் மகிழ்ச்சியடைவார்கள்

யாழ்ப்பாண மக்கள்என்ற அடைமொழி ஈழத்தில் வாழும் எல்லா தமிழ் மக்களையும் குறிக்கும் (அல்லது இலங்கைத் தீவில் வாழும் தமிழர்களை). சிங்களக் கும்பல்களின் உதவியுடன் வடக்கில் இருக்கின்ற ஒரு நகரமான யாழ்ப்பாணத்தையும் அரசு இலக்கு வைக்கத் தவறவில்லை.

அப்போதைய அதிபர் ஜே.ஆர் ஜெயவர்த்தனாவின் நேர்காணல் ஒரு குறிப்பிட்ட இனத்தை முற்றாக விலக்கிவைக்கும் கொள்கையை வெளிப்படுத்துவதுடன் தமிழ் மக்களை பயங்கரவாதிகள் என அழைப்பதன் மூலம் அவர்களை இழிவுபடுத்துகின்ற ஒரு நிலைப்பாட்டைக் கொண்டிருக்கின்றது.

இவ்வாறான உத்திகள் இனப்படுகொலையைத் தோற்றுவிக்கும் ஆபத்தைக் கொண்டவையாகும். மேற்படி கூற்று, தமிழ் மக்களுக்கு எதிராக பெருமளவில் முன்னெடுக்கப்படும் வன்முறைகளை நியாயப்படுத்தவும் இப்படிப்பட்ட வன்முறைகளை முன்னெடுக்க சிங்கள-பௌத்த தேசியவாதிகளை தூண்டுவதற்கும் பயன்படுத்தப்படுகிறது.

கறுப்பு யூலை நடைபெற்றுக்கொண்டிருந்த அந்த நேரத்தில், சிறீலங்கா அரசு, வாக்காளர் பட்டியலை சிங்களக் கும்பல்களின் கைகளில் கொடுத்ததோடு மட்டுமன்றி சிறீலங்கா அரசுக்குச் சொந்தமான வாகனங்களில் கொழும்பு நகரமெங்கும் அவர்களைக் ஏற்றிச்சென்று தமிழர்களுக்கு எதிரான வன்முறைகளில் அவர்கள் ஈடுபட வழிவகுத்துக்கொடுத்தது.

தமிழ் மக்களுக்கு எதிரான மிகக் கொடூரமான வன்முறைகளை இந்தச் சிங்களக் கும்பல்கள் மேற்கொண்டிருந்தன. முழுக்க முழுக்க சிங்கள மக்களை தன்னகத்தே கொண்டிருந்த காவல்துறை, இராணுவம் மற்றும் பாதுகாப்புப் படைகளில் நிலவிய தமிழர்களுக்கு எதிரான உணர்வலைகளின் காரணமாக இந்த வன்முறைகள் மேற்கொள்ளப்பட்ட போது அவர்கள் எதுவுமே செய்யாமல் வெறுமனே கைகட்டிப் பார்த்துக்கொண்டிருந்தார்கள்.

சிலவேளைகளில் அவர்களே வன்முறைகளைத் தூண்டுபவர்களாகவும் விளங்கினார்கள். இந்தக் கொலையாளிகள், மிகவும் இழிவான, தகாத வார்த்தைகளால் தமிழ் மக்களை அவமானப்படுத்தி அவர்களின் ஆடைகளைக் களைந்ததுடன் அவர்களை நிர்வாணமாக்கி, அடித்துக்கொன்றார்கள். pogrom கறுப்பு யூலை கலவரமல்ல;இனப் படுகொலையின் இலக்கணம்-தமிழில் ஜெயந்திரன்

இந்தச் சிங்களக் கும்பல்கள் தமிழ் மக்களின் உயிர்களை அழித்தது மட்டுமன்றி தமிழர்களின் கடைகளையும் வீடுகளையும் இடித்தழித்தார்கள்.

 “இனத்தையும் நாட்டையும் காப்பாற்றுவதற்காக கொஞ்சம் பெற்றோலையும் ஒயிலையும் தாருங்கள்

என்பது அந்த நேரத்தில் சிங்கள மக்களை தமிழ் மக்களுக்கெதிராக கிளர்ந்தெழச் செய்வதற்கு பயன்படுத்தப்பட்ட வார்த்தைகளாகும்.

இப்படிப்பட்ட விடயங்கள் இனப்படுகொலையைத் தூண்டுவதற்கும் அதனைச் செய்துமுடிப்பதற்குமான நோக்கம் இருப்பதை தெளிவாக எடுத்துக்காட்டுகிறது.

2.கணிசமான பகுதி

புவியியல் ரீதியாக ஒரு மட்டுப்படுத்தப்பட்ட பகுதியில் இனப்படுகொலை நிகழலாம் (ஜெலிசிச் வழக்கு மன்றம், பந்தி 83, சேர்பியாவுக்கு எதிராக பொஸ்னியா,  தீர்ப்பு,  2007, பந்தி. 199).

கணிசமான பகுதி என்பது, முழுக்குழுமத்துடன் ஒப்பிடும் போது பகுதியின் எண்ணிக்கை, விகிதாசாரம் மற்றும் முக்கியத்துவம், அப்பகுதிக்குள் பாதுகாக்கப்பட்ட குழுமத்தின் தலைமையின் பிரசன்னம் (கிறிஸ்ரிச் மேன்முறையீட்டு மன்று, பந்தி. 12) என்பவற்றை உள்ளடக்குகின்றது.

எண்ணிக்கை அளவும் விகிதாசாரமும்

 பொஸ்னியா ஹேர்சொகொவினாவில் வாழ்ந்த முஸ்லிம்களின் மொத்த எண்ணிக்கையில் 2.9 வீதத்தினரே, ஸ்றெபிறெனிற்சாவில் மேற்கொள்ளப்பட்ட இனப்படுகொலையின் போது அங்கு வாழ்ந்திருந்தார்கள் (எவ்.என் 27). இதற்கு மாறாக, கொழும்பில் இருந்த 187,456 தமிழர்களைப் பார்க்கும் போது கொழும்பு நகரத்தின் முழுச் சனத்தொகையின் 11 வீதத்தை அவர்கள் கொண்டிருந்தார்கள். அத்துடன் இலங்கைத் தமிழரின் முழுச்சனத்தொகையைப் பார்க்கும் போது அது 6.7 வீதமாகவும் இருந்தது. இலங்கைத் தீவு முழுவதும் வன்முறை பரவிய போது 6.7 க்கும் அதிக வீதமான மக்கள் இதனால் பாதிக்கப்பட்டார்கள்.

முக்கியத்துவம்

 தமிழ் மக்களை தெற்கிலிருந்து முழுமையாக வெளியேற்றுவது சிங்கள-பௌத்த இனவாத அரசை நிறுவுவதற்கும் பேணுவதற்கும் அவசியமாக இருந்தது. வன்முறை முக்கியமாக கொழும்பிலேயே மேற்கொள்ளப்பட்டிருந்தது. மிக மோசமாகப் பாதிக்கப்பட்ட பகுதிகளை உற்றுநோக்கும்போது தமிழ் மக்கள் மிக அதிகமாக வாழ்ந்த பகுதிகளிலும் தமிழ் மக்கள் அதிகமாக வாழ்ந்த நகரங்களிலுமே வன்முறை அதிகமாக மேற்கொள்ளப்பட்டிருந்தது.

தலைமையின் பிரசன்னம்

நாட்டின் தலைநகரமாகவும் பொருண்மிய மையமாகவும் விளங்கிய கொழும்பு நகரத்தில், தமிழ் அரசியல்வாதிகள், வர்த்தகர்கள் எனப்பலர் இருந்தார்கள். இவர்களது உயிர்களும் உடைமைகளும் அழித்தொழிக்கப் பட்டன. தமது செயற்பாடுகளுக்காகச் சிறைவைக்கப்பட்டிருந்த தமிழின விடுதலையை பற்றிய தொலைநோக்குப் பார்வைகொண்டவர்களும் விடுதலைப் போராட்டத்தின் ஆதரவாளர்கள் பலரும் கொழும்பு வெலிக்கடைச் சிறையில் உச்சக்கட்ட பாதுகாப்புடன் வைக்கப்பட்டிருந்தார்கள். உண்மையில் அரசின் நேரடிக் கட்டுப்பாட்டில் அவர்கள் இருந்தார்கள். இரு வெவ்வேறு நாட்களில் 53 தமிழ் அரசியல் கைதிகளை படுகொலை செய்ய, சிங்களக் கைதிகளுக்கு சிங்களச் சிறைக்காவலர்கள் வசதிசெய்து கொடுத்திருந்தார்கள்.tt கறுப்பு யூலை கலவரமல்ல;இனப் படுகொலையின் இலக்கணம்-தமிழில் ஜெயந்திரன்

3.இனப்படுகொலைச் செயற்பாடுகள்

மேற்சொல்லப்பட்ட விசேட நோக்கத்துடன் அரச ஆதரவு பெற்ற சிங்களக் கும்பல்கள் மூன்று இனப்படுகொலைச் செயற்பாடுகளை முன்னெடுத்தன.

கொலைசெய்தல்

அரசினால் ஊக்குவிக்கப்பட்ட சிஙகளக் கும்பல்கள் எரித்தோ, அடித்தோ, அல்லது கத்திகளால் வெட்டியோ 3000 க்கும் மேற்பட்ட தமிழர்களைக் கொன்றார்கள். கொதித்துக் கொண்டிருந்த தார்ப்பீப்பாக்களுக்குள் சிறு தமிழ்ப்பிள்ளைகளை வீசியெறிந்தது மட்டுமன்றி, தமிழ்ப்பயணிகளால் நிரம்பிய பேருந்துகளிலும் ஏனைய வாகனங்களிலும் நெருப்பை பற்ற வைத்தார்கள். மருத்துவமனைகளில் சிங்கள இனத்தைச் சார்ந்த சுகாதாரப் பணியாளர்கள் தங்கள் பராமரிப்புக்குட்பட்ட தமிழ் நோயாளிகளை தாக்கிக் கொலைசெய்தார்கள்.

பாரதூரமான உடல், உளப் பாதிப்புகளை ஏற்படுத்துதல்

 கும்பல்களினால் மேற்கொள்ளப்பட்ட வன்முறைகளில் அடிக்கப்பட்டோ, எரிக்கப்பட்டோ உயிர் தப்பிய பல தமிழர்கள் தங்கள் உடல் அவயவங்களை இழந்திருக்கிறார்கள். அரசினால் ஊக்குவிக்கப்பட்ட இந்தக் கும்பல்களினால் குறைந்தது 500 பெண்களாவது பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டிருக்கிறார்கள். மேற்குறிப்பிடப்பட்ட கொடூரக் கொலைகளை தமது கண்களால் நேரடியாகப் பார்த்த தமிழ்மக்கள் பலர் ஆழமான உளப்பாதிப்புகளுக்கு உள்ளாகியிருக்கிறார்கள். பல தமிழ் மக்கள் தமது உறவுகளான பெண்கள் பாலியல் வன்புணர்வுக்கு அல்லது கூட்டுப் பாலியல் வன்புணர்வுக்கு உள்ளாக்கப்படுவதைப் பார்க்க நிர்ப்பந்திக்கப்பட்டார்கள்.

குறிக்கப்பட்ட குழுமத்துக்கு பௌதீக அழிவுகளை ஏற்படுத்துவதற்கான வாழ்க்கை நிலைமைகளை வேண்டுமென்றே உருவாக்குதல்

அரசினால் ஊக்குவிக்கப்பட்ட கும்பல்கள் தமிழ் மக்களின் 180,000 வீடுகளையும் 5000 கடைகளையும் கொள்ளையடித்து, எரித்து, அழித்தார்கள். இவற்றின் காரணமாக 180,000 பேர் தமது வீடுகளை இழந்ததோடு 300 மில்லியன் டொலர்கள் பெறுமதிவாய்ந்த பொருளாதார இழப்புக்களும் ஏற்படுத்தப்பட்டன (பார்க்கவும்: ஐசிசி குற்றங்களின் கூறுகள், சரத்து. 6 (சி) (4), எவ்என்.4). தமிழ் மருத்துவர்களின் மருந்தகங்கள், வீடுகள் என்பவை எரிக்கப்பட்டு, சில மருத்துவர்களும் கொல்லப்பட்டார்கள்.b கறுப்பு யூலை கலவரமல்ல;இனப் படுகொலையின் இலக்கணம்-தமிழில் ஜெயந்திரன்

தமிழ் மக்கள் மீது சிங்கள கலகக்காரர்களினால் மேற்கொள்ளப்பட்ட வன்முறைகள் தொடர்பாகக் கிடைக்கப்பட்ட சான்றுகள் அனைத்தும் மேற்படி செயற்பாடுகள் இனப்படுகொலைக்கான செயற்பாடுகளே என்ற முடிவுக்கு வரவேண்டியிருக்கிறது என்று 1983 டிசம்பரில் பன்னாட்டு நீதிபதிகள் ஆணையத்தினால் வெளியிடப்பட்ட அறிக்கை சுட்டிக்காட்டுவது இங்கே குறிப்பிடத்தக்கதாகும்.

இனப்படுகொலைக்கு அரசே பொறுப்பு

விசேடமாக குற்றங்கள் தொடர்பாக தனிநபர்களை விசாரித்து, பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்தி அவர்களுக்கு எதிராக வழக்குத் தொடுப்பதற்கான அரசியல் உறுதிப்பாடு ஒரு அரசிடம் இல்லாத பட்சத்தில், அந்த குறிப்பிட்ட அரசே இனப்படுகொலைக்கான பொறுப்பை ஏற்கவேண்டும் என்பது ஒரு முக்கியமான சட்டரீதியான பொறுப்புக் கூறலாகப் பார்க்கப்படுகிறது.

இனப்படுகொலை உண்மையில் நடைபெற்றது என்பதை ஏற்றுக்கொள்வதில் பல நோக்கங்கள் அடங்கி யிருக்கின்றன. பன்னாட்டுச் செயற்பாடுகளை அது முடுக்கி விடும் அதே நேரத்தில், பாதிக்கப்பட்டவர்களுக்கும் அவர்களது வாரிசுகளுக்கும் பாதிப்புகளிலிருந்து விடுபடுவதற்கான நிவாரணத்தை வழங்குகிறது.

இனப்படுகொலையிலிருந்து உயிர்தப்பியவர்கள் பல பரம்பரைகளாக கலாச்சாரப் பாதிப்புக்கு உள்ளாகக்கூடிய ஆபத்து இருக்கிற படியால், இந்த நிவாரணம் முக்கியத்துவம் பெறுகிறது. துரதிட்டவசமாக, உலகத் தலைவர்கள், பொதுவாக அரசியல் காரணங்களுக்காகவோ அல்லது இனப்படுகொலை மாநாடு இது தொடர்பாக அவர்களுக்கு சுட்டும் பொறுப்புகளுக்குப் பயந்தோ, ஒரு மக்கள் கூட்டத்தின் மீது இழைக்கப்படும் குற்றத்தை இனப்படுகொலை என அடையாளம் காண்பதைத் தவிர்த்துக் கொள்கிறார்கள்.

இனப்படுகொலை மாநாட்டின் அடிப்படையில், மியன்மாருக்கு எதிராக பன்னாட்டு நீதிமன்றில் காம்பியா ஒரு வழக்கைத் தொடுத்ததிலிருந்து, சட்டபூர்வமான இனப்படுகொலை அறிவிப்பு மீண்டும் பன்னாட்டுத் தலையங்கங்களில் இடம்பிடிக்கத் தொடங்கியிருக்கிறது.

இனப்படுகொலை மாநாட்டை மீறும் அரசுகள் மீது தொடுக்கப்படும் மூன்றாவது வழக்கு இதுவாகும். முதல் இரண்டு வழக்குகளும் சேர்பியாவுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்டவை. ”சேர்பியாவுக்கு எதிராக பொஸ்னியா” (2007) என்ற வழக்கு, ஸ்றெபிறெனிற்சாவில் நிகழ்த்தப்பட்ட கொடூரங்களை இனப்படுகொலையாக அடையாளப்படுத்தியது.

அதே நேரத்தில் சேர்பியாவுக்கு எதிராக குறோசியாவால் மேற்கொள்ளப்பட்ட வழக்கு எந்தவித இனப்படுகொலை முடிவுக்கும் வரவில்லை. இதிலே கவனத்தில் கொள்ளப்படவேண்டிய விடயம் என்னவென்றால், மியன்மாருக்கு எதிராக காம்பியா வழக்கைத் தொடுக்க முன்னரே, பன்னாட்டு நீதிமன்றின் முன் இனப்படுகொலை வழக்கை தொடுக்க புலம்பெயர் அமைப்புக்கள் சில சிந்திக்கத் தொடங்கியிருந்தது இங்கே கவனத்தில் கொள்ளப்படவேண்டிய விடயமாகும். இது நான்காவது இனப்படுகொலை வழக்காக அமையக்கூடிய சாத்தியம் இருக்கிறது.

மேற்கொள்ளப்பட்டது இனப்படுகொலை என்பதை தமிழ் மக்கள் முதலில் ஏற்றுக்கொள்ள வேண்டும்.

நடந்தவை இனப்படுகொலையே என்பதைத் தமிழ் மக்கள் ஏற்றுக்கொள்வது மிகவும் அவசியமாகும். ஏனென்றால் கறுப்பு யூலையில் நடைபெற்றவை தமிழ் மக்களுக்கு எதிராக முதலும் கடைசியுமாக நடந்த இனப்படுகொலை அல்ல. ஆயுதப் போராட்டம் ஆரம்பிக்கப்பட முன்னர் கூட 1956, 1958, 1977ம் ஆண்டுகளில் தமிழ் மக்களுக்கு எதிரான வன்முறை அரசினால் கட்டவிழ்த்துவிடப்பட்டிருந்தது.

அத்துடன் 2009 மே மாதத்தில் ஆயுதப்போராட்டம் மௌனிக்கப்பட்டபோது, மேற்கொள்ளப்பட்ட இனப்படுகொலை, மனித குலத்துக்கெதிரான குற்றங்கள், போர்க்குற்றங்கள் போன்ற குற்றச்சாட்டுகள் இன்னும் விசாரிக்கப்படாமலேயே இருக்கின்றன. காலங்காலமாக நாட்டை ஆட்சிசெய்த வெவ்வேறு கட்சிகளும் தலைவர்களும் மேற்கொள்ளப்பட்ட வன்முறைகளுக்கு பொறுப்பாளிகளாக இருக்கிறார்கள்.

உண்மையில் இவை ஒரு குறிப்பிட்ட தனிநபரையோ அன்றி அரசியல் கட்சியையோ சுட்டாது சிறீலங்கா அரசுக்குரிய பொறுப்பையே சுட்டிக்காட்டுகின்றன. சித்திரவதை, பாலியல்வன்முறை தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கும் வலிந்து காணாமல் ஆக்கப்படும் செயற்பாடுகள், தொடரும் இராணுவமயமாக்கல் என்பன வடகிழக்கில் வாழும் தமிழ் மக்களைத் தொடர்ச்சியான பாதிப்புகளுக்கு உள்ளாக்கிக் கொண்டேயிருக்கின்றன.

சிறீலங்காவில் வரலாற்று ரீதியாகவும் அண்மைக்காலங்களிலும் தமிழ் மக்களுக்கு எதிராக நிகழ்த்தப்பட்ட அட்டூழியங்களுக்கு குற்றவியல் ரீதியாகவும் அரசுக்கு இருக்கின்ற பொறுப்பு தொடர்பாகவும் அரசைப் பொறுப்புக்கூறலுக்கு உள்ளாக்குவதில் சர்வதேச நாடுகள் தோல்வியடைந்ததன் காரணத்தினால், தமிழ் மக்களுக்கு எதிராக சிறீலங்கா அரசும் ஏனைய குற்றவாளிகளும் தொடர்ந்தும் எவ்வித தயக்கமுமின்றி குற்றமிழைப்தற்கான சூழல் தொடர்ந்துகொண்டிருக்கிறது.

இனப்படுகொலைக்கான சான்றுகளை அழிப்பதில் பாதுகாப்புப் படைகள் ஏற்கனவே ஈடுபட்டுக்கொண்டிருப்பதை நிரூபிப்பதற்கு போதிய ஆவணங்கள் கிடைத்திருக்கின்றன. சான்றுகளைப் பாதுகாக்கும் விடயத்தைப் பொறுத்த வரையில் புலம்பெயர் தமிழ் அமைப்புக்கள் பல்வேறு சாத்தியப்பாடுகளைப் பரிசீலனை செய்துவருகின்றன.

சிறீலங்காவில் தமிழ் மக்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட வன்முறைகள் பன்னாட்டு நீதிமன்றில் இனப்படுகொலை என அடையாளப்படுத்தப்படுவதற்கு முன்னர் மியன்மாருக்கு பன்னாட்டு நீதிமன்று கட்டளையிட்டது போன்று, சிறீலங்காவிலும் இனப்படுகொலைக்கான சான்றுகளை அழிக்கக்கூடாது என்று அந்த நீதிமன்று முன்னேற்பாடாகக் கட்டளையிடக்கூடிய சாத்தியக்கூறுகள் இருக்கின்றன.  சான்றுகளைப் பாதுகாப்பதற்கு அப்படிப்பட்ட ஒரு கட்டளை உதவலாம்.

குறைந்த பட்சமாக ஆயுதப் போராட்டம் முடிவுக்கு வந்தபோது ஐக்கிய நாடுகள் தாபனம் ( ஐநாவின் நீதித்துறையின் மூலமாக) இழைத்த தவறுக்கான பரிகாரத்தைத் தேடுவதற்கு மேற்படி தாபனத்துக்கு ஒரு வாய்ப்பைக் கொடுக்கலாம் (பந்தி 80). இதனை முன்னெடுத்துச் செல்வதற்கான ஒரு அரசைத் தேடிக்கண்டுபிடிப்பது இதில் முதற்படியாகும்.

தென்னாசியாவுக்கு வெளியே தமிழ் ஈழத்தைச் சேர்ந்த மக்கள் அதிகமாக வாழ்கின்ற கனடா மற்றும் இலங்கைத்தீவின் காலனித்துவ ஆட்சியாளராக விளங்கிய நெதர்லாந்து போன்ற நாடுகள் மியன்மாருக்கு எதிரான காம்பியாவின் வழக்குக்கு தங்கள் ஆதரவை அளிக்கும் எண்ணத்தை  வெளிப்படையாகத் தெரிவித்திருக்கின்றன. ஆனால் தற்போதைய சூழலில் இனப்படுகொலைக்கான நீதியைத் தேடுகின்ற தமிழ் மக்களுக்கு அப்படிப்பட்ட ஆதரவு எதுவும் இதுவரை கிடைக்கவில்லை.

முடிவுரை

 தமிழ் ஈழத்தைச் சேர்ந்த மக்கள், இரண்டு இனப்படுகொலைக்கு முகம் கொடுத்திருக்கிறார்கள்:

ஒன்று 1983 இல் நடைபெற்று கறுப்பு யூலை மற்றையது 2009 முள்ளிவாய்க்காலில் நடைபெற்ற படுகொலை. இனப்படுகொலைக்கான இக்குற்றச்சாட்டுகள் சரியான விதத்தில் அணுகப்பட்டு,  ஏற்றுக்கொள்ளப்படவேண்டும்.

றோகிங்யா மக்களைப்போலவே,  காலங்காலமாக தமிழ் மக்களுக்கு எதிராக சிறீலங்கா அரசினால் மேற்கொள்ளப்பட்டுவரும் ஒழுங்கமைக்கப்பட்ட வன்முறைகளுக்கான நீதியும் அந்த மக்களுக்குக் கிடைத்தாக வேண்டும். றோகிங்யா மக்களுக்கு நீதிவழங்க முனைகின்ற பன்னாட்டுச் சமூகம் இன்றும் இனப்படுகொலைக்கு உள்ளாகியிருக்கும் தமிழீழ மக்களுக்கான நீதியையும் வழங்க தயங்காது முன்வரவேண்டும்.

 

நன்றி- countercurrents.org

https://countercurrents.org/2018/07/black-july-1983-genocide-of-tamils-in-sri-lanka/