இந்திய நலன்களுக்கு எதிராக வடக்கு கிழக்கை பயன்படுத்த இடமளியோம்- இந்தியத் துணைத் தூதுவரிடம் கஜேந்திரகுமார் தெரிவிப்பு

வடக்கு கிழக்கை பயன்படுத்த இடமளியோம்


இந்தியாவின் தேசிய பாதுகாப்பு மற்றும் இந்தியாவின் தேசிய நலன் சார்ந்த விடயங்களுக்கு பாதகத்தினை ஏற்படுத்துகின்ற வகையிலே, வடக்கு கிழக்கை பயன்படுத்த இடமளியோம். இதற்கு தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி எக்காரணம் கொண்டும் ஒத்துழைக்காது என்பதுடன், அத்தகைய விடயங்களை எதிர்ப்போம் என யாழ்ப்பாணத்திற்கான விஜயத்தை மேற்கொண்டுள்ள புதிய இந்திய துணைத் தூதுவர் ராகேஷ் நடராஜ் ஜெயபாஸ்கரனிடம் தான் தெரிவித்துள்ளதாக, தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.

தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மற்றும், செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான செல்வராசா கஜேந்திரன் ஆகியோர், யாழ்ப்பாணத்திற்கான புதிய இந்திய துணைத் தூதுவர் ராகேஷ் நடராஜ் ஜெயபாஸ்கரனை இம்மாதம் முதலாந்திகதி சந்தித்துப் பேசியிருந்தனர். அப்போதே இவ்வாறு தான் தெரிவித்துள்ளாதாக கஜேந்திரகுமார் பொன்னம்பலம்  குறிப்பிட்டுள்ளார்.

அத்தோடு அண்மைக் காலங்களாக தூதுவரகங்களின் மட்டங்களில் தவறானதொரு அபிப்பிராயத்தினை ஏற்படுத்துகின்ற வகையிலே உரிமையையும், அபிவிருத்தியையும் வேறுபடுத்தி, அபிவிருத்தி இருந்தால் உரிமை இல்லை, உரிமை இருந்தால் அபிவிருத்தியில்லை என்ற கோணத்தில் சொல்ப்படுகின்ற கருத்தினை மறுத்து அது தொடர்பிலான விளங்கங்களையும், தாம் புதிய யாழிற்கான இந்தியத் துணைத்தூதுவரிடம் தெளிவுபடுத்தியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,

“யாழ்ப்பாணத்திற்கான புதிய இந்திய துணைத் தூதுவர் ராகேஷ் நடராஜ் ஜெயபாஸ்கரனை தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் செயலாளர் செல்வராசா கஜேந்திரனும் நானும் சந்தித்தோம்.

இந்தியாவின் தேசிய பாதுகாப்பு மற்றும் இந்தியாவின் தேசிய நலன் சார்ந்த விடயங்களுக்கு பாதகத்தினை ஏற்படுத்துகின்ற வகையிலே, வட கிழக்கு தமிழர் தாயக நிலப்பரப்பினை பயன்படுத்துவதற்கு தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி எக்காரணம் கொண்டும் ஒத்துழைக்காது என்பதுடன், அத்தகைய விடயங்களை எதிர்ப்போம் என்பதையும் சுட்டிக்காட்டியிருந்தோம்.

எம்மைப் பொறுத்தவரையிலே எங்களுடைய மண், தமிழர்களுடைய வட கிழக்கு தமிழ் தேச மண்ணாகும். அந்தவகையில் வட கிழக்கு பிராந்தியத்திலே இருக்கக்கூடிய சர்வதேச அரசியல் பூகோள சமநிலையைக் குழப்பி, அக் குழப்பத்தினைப் பயன்படுத்துவதற்கு நாங்கள் ஒத்துழைக்கப் போவதில்லை. அதிலே நாங்கள் தெளிவாக இருக்கின்றோம்.

அதேவேளை தமிழர்களுடைய இனப்பிரச்சினை விடயத்திற்கு தீர்வு என்ற வகையிலே இந்தியா தலையீடு செய்ததுடன், இலங்கை இந்திய ஒப்பந்தத்தில் தமிழர் தரப்பாக இந்தியா கைச்சாத்திட்டதாக கூறப்படுகின்றது. எனவே தமிழர்களுக்கு முழுமையானதோர் தீர்வு கிடைப்பதற்கு உரிய அழுத்தங்களையும், செயற்பாடுளையும் இந்தியா மேற்கொள்ளவேண்டும் என்ற விடயத்தினையும் வலியுறுத்தினோம்.

இந்த இனப்பிரச்சினை விடயத்திலே விசேடமாக 13ஆம் திருத்தம் என்னும் ஒற்றையாட்சிக்குள் இருக்கின்ற, தமிழர்களுடைய அரசியல் அபிலாசைகளை முற்று முழுதாக நிராகரிக்கின்ற கட்டமைப்பினை இந்தியா தீர்வாக வலியுறுததக்கூடாது என்ற விடயத்தினைத் தெளிவாகச் சொல்லியிருக்கின்றோம்.

இனப் பிரச்சினைத் தீர்விற்கு 13ஆம் திருத்தத்தினை ஆரம்பப் புள்ளியாகக்கூட பாவிக்க முடியாது என்ற விடயத்தினைச் சுட்டிக்காட்டியிருந்தோம்.
இது ஒரு புது விடயமல்ல இதற்கு முன்பு யாழ்ப்பாணத்திற்கான இந்தியத் துணைத்தூதுவராக இருந்த பாலச் சந்திரனுக்கும் மிக ஆழமாக இந்த விடயங்களை சுட்டிக்காட்டியிருக்கின்றோம். அதேபோல பல தூதுவர்களோடும் இந்த விடயங்களைப் பேசியிருக்கின்றோம்.

மேலும் தற்போது மிகப் பிழையானதொரு கருத்துருவாக்கம் உலாவுவதை அவதானிக்க முடிகின்றது. அது தமிழ் தேசிய மட்டத்தில் இருக்கக்கூடிய ஒரு சில தரப்புக்களும் திட்டமிட்டு செய்யக்கூடிய விடயமாகவிருக்கின்றது.

அது என்னவெனில் உரிமை சார்ந்து பேசக்கூடிய தரப்புக்கள் அபிவிருத்தியைப் பற்றிப் பேசுவதில்லை என்று கூறப்படுகின்றது. அதாவது அபிவிருத்தி என்பது வேறு, உரிமை என்பது வேறு என்ற கோணத்திலே ஒரு பொய்ப் பிரச்சாரத்தினை மேற்கொள்கின்ற வகையிலே இந்த கருத்துருவாக்கம் பலமாதங்களாக உலவி வருகின்றது.

விசேடமாக கடந்த பாராளுமன்றத் தேர்தலை எடுத்துக்கொண்டால், அதிலே அங்கஜன் இராமநாதன் போன்றவர்கள், கிழக்கில் பிள்ளையான் போன்றவர்கள் அபிவிருத்தி என்ற பெயரிலே, தமிழர் தாயகப் பகுதிகளில் திட்டமிட்டு சிங்களக்குடியேற்றங்களை ஏற்படுத்துவதற்குரிய அத்திவாரங்களை இடுகின்ற நடவடிக்கைகளை மேற்கொள்கின்றனர். என்ற விடயங்களைச் சுட்டிக்காட்டியிருந்தோம்.

அத்தோடு இது அபிவிருத்தி அல்ல என்ற விடயத்தினையும் மிகத் தெளிவாகக் கூறியிருக்கின்றோம். மாறாக இது சிங்கள மயப்படுத்தலுடைய முக்கியமான அங்கம் என்பதையும் தெளிவுபடுத்தியுள்ளோம். அபிவிருத்தி என்பது, வடகிழக்குத் தமிழர் தாயக நிலப்பரப்பில், தமிழ் மக்களுடைய பொருளாதாரத்தினை முதற்கட்டமாகப் பாதுகாத்து, அதனைப் பலப்படுத்தி, அந்தப் பொருளாதாரத்தினூடாக புதுப்புது வேலைத்திட்டங்களை முன்னெடுக்கக்கூடிய வாய்ப்புகளை ஏற்படுத்திக்கொடுப்பதுதான் அபிவிருத்தியாகும்.

பொருளாதார ரீதியாக மிகப் பலவீனமானதொரு நிலப்பரப்பாக வட கிழக்குப் பகுதிகள் காணப்படுகின்றன. இங்கு வீதிகளை அமைத்தவுடனே தெற்கிலிருந்து சிங்களமக்கள் வருகைதந்து வடக்கு கிழக்கிலுள்ள வளங்களை சூறையாடுவதற்குரிய நிலையினை உருவாக்குவது அபிவிருத்தி அல்ல என்ற விடயங்களையும் நாங்கள் தெளிவாக விளங்கிக்கொள்ளவேண்டும்.

குறிப்பாக தூதுவரகங்களின் மட்டங்களில் தவறானதொரு அபிப்பிராயத்தினை ஏற்படுத்துகின்ற வகையிலே உரிமையையும், அபிவிருத்தியையும் வேறுபடுத்தி, அபிவிருத்தி இருந்தால் உரிமை இல்லை, உரிமை இருந்தால் அபிவிருத்தியில்லை என்ற கோணத்தில் சொல்ப்படுகின்ற இந்தக் கருத்துருவாக்கத்தினை மறுதலித்து நாங்கள் எங்களுடைய கருத்துக்களை முன்வைத்தோம்.

ஆகவே எங்களுடைய மக்களும் இதனைச் சரியாகப் புரிந்துகொள்ளவேண்டும்.
தமிழ்தேசம் அங்கீகரிக்கப்பட்ட அபிவிருத்தி இல்லாமல், அபிவிருத்தி என்ற பெயரில் இடம்பெறுகின்ற ஏனைய அனைத்து விடயங்களும், தமிழ்தேசத்தைக் கரைப்பதற்காகத் திட்டமிட்டு முன்னெடுக்கப்படுகின்ற நடவடிக்கையாகப் பார்க்கவேண்டுமே தவிர வேறு எதுவுமில்லை என்பதையும் நாம் சுட்டிக்காட்டியிருந்தோம்.

தமிழ்த் தேசத்தினுடைய இதயமே, தமிழ்த் தேசத்தினுடைய அபிவிருத்திதான். ஆகவே தமிழ்த் தேசத்தினையும், தமிழ்த் தேசத்தினுடைய உரிமையையும், தமிழ்த்தேசத்தினுடைய அங்கீகாரத்தினையும், அபிவிருத்தியையும் பிரித்துப்பார்க்க முடியாது. அவை ஒரு நாணயத்தினுடைய இரு பக்கங்கள் போன்றவை. இவற்றை எங்களுடைய மக்களும் தெளிவாக விளங்கிக்கொள்ளவேண்டும்”  என்றார்

ilakku-weekly-epaper-150-october-03-2021