இலங்கையின் உள்நாட்டுப் போர் நிறைவடைந்து 17 ஆண்டுகள் கடந்துள்ள நிலையில், ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையின் உயர்ஸ்தானிகர் வொல்கர் ரெக் (Volker Türk) வெளியிட்ட சமீபத்திய அறிக்கை, இலங்கையின் தற்போதைய மனித உரிமைச் சூழலை விவரிப்பதாக மனித உரிமைகள் கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.
அந்த அமைப்பு இன்று (07) விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
கடந்த கால மனித உரிமை மீறல்களுக்கு நீதி வழங்குவதாக உறுதியளித்து, ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் அரசாங்கம் 2024 செப்டெம்பரில் பதவியேற்றது.
“இருப்பினும், ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் உயர்ஸ்தானிகர் வெளியிட்ட அறிக்கை சுட்டிக்காட்டுவது போல, சில முக்கிய வழக்குகளில் முன்னேற்றம் காணப்பட்டாலும், 2009-இல் முடிவுக்கு வந்த தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரின்போது அனைத்துத் தரப்பினராலும் இழைக்கப்பட்ட சர்வதேச சட்டத்தின் கீழ் வரும் குற்றங்கள், கடுமையான மனித உரிமை மீறல்கள் மற்றும் சர்வதேச மனிதாபிமான சட்ட மீறல்கள் ஆகியவற்றுக்கு எந்தவித அங்கீகாரமோ அல்லது பொறுப்புக்கூறலோ இதுவரை ஏற்படவில்லை” என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சர்வதே மனித உரிமைகள் கண்காணிப்பகம் இதே போன்ற விடயத்தை சுட்டிக்காட்டி கடந்த முதலாம் திகதி அறிக்கை வெளியிட்டிருந்தது.
அந்த அறிக்கையையும் இன்றைய தினம் சுட்டிக்காட்டியுள்ள மனித உரிமைகள் கண்காணிப்பகம், மனித உரிமைப் பாதுகாவலர்கள், பத்திரிகையாளர்கள் மற்றும் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினரை அச்சுறுத்தவும் கைது செய்யவும் இலங்கை அரசாங்கம் இன்றும் அடக்குமுறைமிக்க ‘பயங்கரவாதத் தடுப்பு சட்டத்தை’ பயன்படுத்தி வருவதாக தெரிவித்துள்ளது.
குறிப்பாக வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் அரசு உளவுத்துறையின் கண்காணிப்புக்கும் விசாரணைகளுக்கும் இந்த சட்டம் பயன்படுத்தப்படுவதாக அதில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இலங்கை அரசாங்கம் நீண்ட காலமாக நிலுவையில் உள்ள சட்ட மற்றும் கட்டமைப்பு சீர்திருத்தங்களை அவசரமாக செயல்படுத்தவும், அடக்குமுறை சட்டங்களை ரத்து செய்யவும், பாதுகாப்புத் துறையில் விரிவான சீர்திருத்தங்களை மேற்கொள்ளவும், உண்மையான நல்லிணக்கத்தை நோக்கிய நடவடிக்கைகளை எடுக்கவும் வேண்டும்.
இல்லையெனில், தண்டனையிலிருந்து தப்பிக்கும் போக்கு மற்றும் பாதிக்கப்பட்டவர்களிடையே நிலவும் நம்பிக்கையின்மை ஆகியவை மேலும் வலுப்பெறும் அபாயம் உள்ளதாக மனித உரிமைகள் கண்காணிப்பகம் குறிப்பிட்டுள்ளது.
சர்வதேசக் குற்றங்களுக்கான பொறுப்புக்கூறல் விவகாரத்தில் இலங்கை அரசாங்கத்தின் செயல்பாடுகளை ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் உயர்ஸ்தானிகர் அலுவலகம் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் என்றும் அந்த அமைப்பு வலியுறுத்தியுள்ளது.



