யாழ்ப்பாணம் செம்மணிப் பகுதியில் படுகொலை செய்யப்பட்ட சுண்டுக்குளி பாடசாலை மாணவியான கிருஷாந்தி குமாரசுவாமி உள்ளிட்டவர்களின் 30ஆவது ஆண்டு நினைவேந்தல் இன்றைய தினம் (07) மாலை செம்மணி பகுதியில் இடம்பெற்றது.
இதன்போது செம்மணிப் பகுதியில் படுகொலை செய்யப்பட்ட, அங்கு புதைக்கப்பட்ட ஏனையவர்களும் நினைவு கூரப்பட்டு, அவர்களுக்கும் அஞ்சலி செலுத்தப்பட்டது.
1996 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 7ஆம் திகதி 18 வயதுடைய யாழ்ப்பாணம் சுண்டுக்குளி மகளிர் கல்லூரி மாணவி கிருஷாந்தி வீதியால் சென்று கொண்டிருந்த போது, செம்மணி பகுதியில் இராணுவத்தினரால் வழிமறித்து பாலியல் வன்கொடுமைக்குட்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டார்.
கிருஷாந்தியை, செம்மணி இராணுவ முகாமில் தடுத்து வைத்திருந்ததை பிரதேச மக்கள் அவதானித்து மாணவியின் தாயாரிடம் கூறியுள்ளனர்.
இதனையடுத்து, மாணவியின் தாயாரான ஆசிரியை குமாரசுவாமி இராசம்மா, உள்ளிட்டோர் கிருஷாந்தியை தேடி சென்று செம்மணி இராணுவ முகாமில் விசாரித்துள்ளனர்.
அதனையடுத்து மாணவியைத் தேடிச் சென்றவர்களையும் இராணுவத்தினர் படுகொலை செய்திருந்தனர்.
அன்றைய தினம் நள்ளிரவு கிருஷாந்தி உள்ளிட்ட படுகொலை செய்யப்பட்ட நால்வரின் உடல்களை செம்மணி பகுதியில் புதைத்தமை தெரியவந்தது
1998ஆம் ஆண்டு இலங்கை இராணுவத்தின் முன்னாள் லான்ஸ் கோப்ரல் சோமரத்ன ராஜபக்ச நீதிமன்றத்தில் வழங்கிய சாட்சியத்தின் மூலம் செம்மணியில் நூற்றுக்கணக்கான காணாமல் போன தமிழர்களின் உடல்கள் புதைக்கப்பட்டிருக்கலாம் என்ற தகவல் முதன்முதலில் வெளிச்சத்துக்கு வந்தது.
இந்த தகவல் வெளியான போதிலும், செம்மணி தொடர்பான விரிவான விசாரணைகள் மற்றும் அகழ்வாராய்ச்சிகள் பல்வேறு நிர்வாகத் தடைகள் மற்றும் தாமதங்களுக்கு உள்ளாகியதாக மனித உரிமை செயற்பாட்டாளர்கள் குற்றஞ்சாட்டி வருகின்றனர். கிருஷாந்தி குமாரசுவாமி படுகொலை தொடர்பான வழக்கு விசாரணைகளின்போதே சோமரத்ன ராஜபக்ச செம்மணி புதைகுழிகள் தொடர்பான தகவல்களை வெளியிட்டிருந்தார்.
1996 செப்டெம்பர் 7ஆம் திகதி யாழ்ப்பாணம் கைதடி பகுதியில் உள்ள இராணுவ சோதனைச் சாவடி அருகே கிருஷாந்தி குமாரசுவாமி பாதுகாப்புப் படையினரால் பாலியல் வன்முறைக்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்டதாக வழக்கு விசாரணைகளில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டது.
இந்தக் கொலைகள் தொடர்பான வழக்கில் 1998ஆம் ஆண்டு சோமரத்ன ராஜபக்ச உள்ளிட்ட ஐந்து இராணுவ சிப்பாய்கள் குற்றவாளிகளாகத் தீர்ப்பளிக்கப்பட்டனர்.



