சுதந்திர ஊடக குரலும் நீதிக்கான குரலும் நசுக்கப்படுகின்றன-அருட்தந்தை மா.சத்திவேல்

சுதந்திர ஊடக குரலும் நீதிக்கான குரலும்

பயங்கரவாத தடுப்புச் சட்டம் திருத்தமென போலி நாடகம் அரங்கேற்றப்பட்டு கொண்டிருக்கும்  நிலையில், சுதந்திர ஊடக குரலும் நீதிக்கான குரலும் நசுக்கும் படலம் மீண்டும் ஆரம்பிக் கப்பட்டிருக்கின்றமை இருண்ட எதிர்காலத்தையே எடுத்தி யம்புகின்றது என அருட்தந்தை மா.சத்திவேல் தெரிவித்துள்ளார்.

அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பின் இணைப்பாளர் அருட்தந்தை மா.சத்திவேல்,   வெளியிட்டுள்ள  அறிக்கையில்  இவ்வாறு தெரிவிக்கப் பட்டுள்ளது.

குறித்த அறிக்கையில்,

கடந்த வருடம் ஜெனிவா மனித உரிமை பேரவை கூட்டத் தொடர் ஆரம்பிக்கவிருந்த கால கட்டத்தில் சிறைச்சாலை இராஜாங்க அமைச்சராக இருந்த லொகான்ரத்வத்தை அனுராதபுரம் சிறைச்சாலைக்கு குடிபோதையில் பிரவேசித்து துப்பாக்கியை நெற்றியில் வைத்து அரசியல் கைதிகளுக்கு கொலை அச்சுறுத்தல் விடுத்தார். குறித்த சம்பவத்திற்கு இதுநாள் வரை நீதி கிட்டவில்லை. அன்று நீட்டிய துப்பாக்கி தமிழ் அரசியல் கைதிகளுக்கு நேராக  மட்டுமல்ல தமிழர்களின் அரசியலுக்கும் ஐ.நா மனித உரிமை பேரவைக்கும் எதிரானது என்றே நாம் குறிப்பிட்டோம்.

இம்மாதம் 28ஆம் திகதி மீண்டும் ஜெனிவா மனித உரிமை பேரவை கூட்டத் தொடர் ஆரம்பிக்கின்ற சூழ்நிலையில்,   சிங்கள சுதந்திர ஊடகவியலாளர் ஒருவரின் வீடு தாக்கப்பட்டு துப்பாக்கி சூடும் நடாத்தப்பட்டுள்ளது.  அதே தினத்தில் 2019 உயிர்ப்பு ஞாயிறு குண்டு தாக்குதல் தொடர்பாக நீதி கேட்ட ஒருவர் வெள்ளை வேனில்  வந்தவர்களினால்  கைது செய்யப்பட்டுள்ளார். இதனை அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பு வன்மையாக கண்டிக்கிறது.

அடுத்தடுத்து நடந்த இரண்டு சம்பவங்களும் முழு நாட்டையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது. ஊடக சுதந்திரம், நீதிக்கான பேச்சு சுதந்திரம் பறிக்கப்பட்டதன் அடையாளமாகவே இதனை பார்க்க வேண்டும்.

தமிழரின் அரசியல் உரிமைக்காக போராடியவர்களை பயங்கரவாத தடை சட்டத்தை பயன்படுத்தி பயங்கரவாதிகளாக்கப்பட்டு சிறைகளில் விடுதலை இன்றி நீண்ட காம் வாடுகின்றனர்.

2019 ஞாயிறு உயிர்ப்பு தின குண்டுத் தாக்குதலை தொடர்ந்து 300க்கும் அதிகமானோர் கைது செய்யப்பட்டு பல்வேறு சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளனர். புலனாய்வுப் பிரிவினரின் விசாரணையிலும் பலர் உள்ளனர். இவர்களில் பல அப்பாவிகளும் உள்ளதாக கூறப்படுகின்றது.

நாட்டில் அன்னிய செலவாணி போதுமான அளவு கையிருப்பில் இன்மையால் உலக நாடுகளிடம் கையேந்தும் நிலைக்கு நாட்டை கொண்டு சென்ற ஆட்சியாளர்களும் அரசியல்வாதிகளும் தற்போது மனித உரிமை மீது கை வைத்து அடக்குமுறையை கட்டவிழ்த்து விடுவதன் மூலம் ஜிஎஸ்பி இழக்கும் நிலைக்கும் தள்ளப்படலாம்.

நாட்டு மக்களை பொருளாதார நெருக்கடியில் இருந்து மீட்பதோ, மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுகள் இருந்து நாட்டை காப்பதோ ஆட்சியாளர்களின் நோக்கமல்ல. தமது ஆட்சியை தக்க வைக்க வேண்டும்.

யுத்த குற்றச்சாட்டுகளில் இருந்து தம்மை விடுவித்துக் கொள்ள வேண்டும் எனும் குறுகிய அரசியல் நோக்கம் மட்டுமே தற்போதைய ஆட்சியாளர்கள் நிலவுகின்றது என்பதை நடக்கும் சம்பவங்கள் வெளிப்படுத்துகின்றன.

மனிதகுலம் ஏற்காத யுத்தக் குற்றங்களை மூடிமறைக்க தொடர்ந்து போராடும் ஆட்சியாளர்கள் யுத்த குற்றங்களோடு தொடர்புடையவர்களாக அடையாளம் காணப் பட்டவர்களை உயர் பதவிகளில் அமர்த்தி பாதுகாக்கும் நிலையில் நாட்டில் மனித உரிமை என்பது இருளுக்குள் தள்ளபடுகின்றது என்பதே உண்மை.

தமிழர்களுக்கு பரிகார நீதியை பெற்றுக்கொடுக்க தாமதிக்கும் ஒவ்வொரு நிமிடமும் இலங்கையில் மனித உரிமைக்கு அச்சுறுத்தல் என்பதையே ஐநா உணரவேண்டும்.

Tamil News