நாட்டின் அரசியலமைப்புக்கு அமைவாக அரசாங்கத்தினால் பல்வேறு நடவடிக்கைகள் முன்னெடுப்பு-ஐ.நாவில் இலங்கை சுட்டிக்காட்டு

நல்லிணக்கம் மற்றும் பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்துவதை இலக்காகக்கொண்டு நாட்டின் அரசியலமைப்புக்கு அமைவாக அரசாங்கத்தினால் பல்வேறு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டிருப்பதாக ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் அமர்வில் இலங்கை சுட்டிக்காட்டியுள்ளது.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 53 ஆவது கூட்டத்தொடர் கடந்த திங்கட்கிழமை ஆரம்பமான நிலையில், நேற்று புதன்கிழமை கூடிய மூன்றாம் நாள் அமர்வில் மனித உரிமைகள் பதில் உயர்ஸ்தானிகர் நாடா அல்-நஷீஃப் இலங்கையின் மனித உரிமைகள் நிலைவரம் தொடர்பான தனது வாய்மொழிமூல அறிக்கையை வாசித்தார்.

அவ்வறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்ட விடயங்களுக்குப் பதிலளிக்கும் வகையிலும், மனித உரிமைகளை வலுப்படுத்துவதை முன்னிறுத்தி இலங்கையால் முன்னெடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்துத் தெளிவுபடுத்தும் வகையிலும் பதில் உரையாற்றியபோதே ஜெனிவாவுக்கான இலங்கையின் நிரந்தர வதிவிடப்பிரதிநிதி ஹிமாலி அருணதிலக மேற்குறிப்பிட்ட விடயங்கள் தொடர்பில் சுட்டிக்காட்டினார்.

இலங்கை தீவிர சமூக, பொருளாதார நெருக்கடிக்கு முகங்கொடுத்திருக்கும் தற்போதைய சூழ்நிலையில், சர்வதேச நாணய நிதியத்துடனான இணக்கப்பாடு எட்டப்பட்டமை உள்ளடங்கலாக பொருளாதார மீட்சியை முன்னிறுத்திய நடவடிக்கைகள் இலங்கை அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்டுவருவதாகவும், நல்லிணக்கம் மற்றும் பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்துவதை இலக்காகக்கொண்டு நாட்டின் அரசியலமைப்புக்கு அமைவாகப் பல்வேறு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டிருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.