இராணுவத்தினரின் பிடியில் உள்ள இடம்பெயர்ந்த மக்களுக்குச் சொந்தமான காணிகளை விடுவிப்பது தொடர்பில் அரசு அக்கறையற்ற போக்கையே கடைப்பிடித்து வருகின்றது.
அரசாங்கத்தின் இந்தப் போக்கு ஆக்கிரமிப்பு ரீதியிலானது. இடம்பெயர்ந்த மக்களின் அடிப்படை உரிமைகளை மீறுகின்ற செயலாகும். தமிழ் மக்களின் வாழ்வுரிமையை மீறியுள்ள இந்தச் செயல் மிகவும் பாரதூரமானது. சர்வாதிகாரப் போக்கிலானது. இனக்குரோத அடிப்படையில் இன அழிப்பு நடவடிக்கை என்று அதனைக் கூறினாலும் தவறில்லை.
தமிழ் மக்கள் காலம் காலமாகக் குடியிருந்த காணிகளையே இராணுவத்தினர் கைப்பற்றியிருக்கின்றனர். இந்தக் காணிகளை இழந்த குடும்பங்கள் குடியிருப்பதற்குத் துண்டு காணியின்றி அவலப்பட்டிருக்கின்றார்கள். மூன்று தசாப்தங்களாக இந்தத் துயர நிலைமைக்கு ஆளாகியுள்ள யாழ் வலிகாமம் பிரதேச மக்கள் உள்ளிட்டவர்களின் காணிப் பிரச்சினைக்குத் தீர்வு காணப்பட வேண்டியது அவசியம். அது அவசரமான ஒரு காரியமும்கூட.
யுத்த மோதல்கள் காரணமாகப் பாதுகாப்புக்காகவே மக்கள் தமது வாழ்விடங்களையும் குடியிருப்புக்களையும் விட்டு இடம்பெயர்ந்து பாதுகாப்பான இடங்களை நாடிச் சென்றிருந்தனர். அவர்கள் தாங்களாக விரும்பி இடம்பெயர்ந்து செல்லவில்லை. யுத்த மோதல்களே அவர்களை இடம்பெயரச் செய்தது. யுத்தம் என்பது தமிழ் இளைஞர்கள் தாங்களாக விரும்பி ஏற்றுக்கொண்டதல்ல. வேண்டுமென்றே அவர்கள் ஆயுதமேந்தி யுத்தத்தில் ஈடுபடவில்லை.
இயற்கை வழியிலான இறைமைசார் அரசியல் உரிமைகளை மறுத்து, தமிழ் மக்களை இரண்டாந்தரப் பிரஜைகளாக நடத்திய இனவாத ஆட்சியாளர்களுக்கு எதிராகவே அவர்கள் ஆயுதமேந்த நேர்ந்தது. தமிழ் மக்கள் தமக்குரியவற்றையே கேட்டார்கள். அதற்கான பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டார்கள். பேச்சுக்களின் அடிப்படையில் ஒப்பந்தங்களிலும் கைச்சாத்திட்டார்கள்.
பேச்சுக்களில் ஒப்புக்கொள்ளப்பட்ட உடன்பாட்டை ஆட்சியாளர்களே மீறினார்கள். ஒப்பந்தங்களை அவர்களே கிழித்தெறிந்தார்கள். அது போதாதென்று அவர்களே அதிகார பலத்தைப் பயன்படுத்தி காவல்துறையினரையும் இராணுவத்தினரையும் ,ஏவிவிட்டு தமிழ் மக்களைத் துன்புறுத்தினார்கள். அவர்களை சகட்டுமேனிக்குத் தாக்கினார்கள். இந்த நிலையில் இணைந்து வாழ்வது சாத்தியமில்லை என்ற காரணத்திற்காகவே தமிழ் மக்கள் தனிஈழுக் கோரிக்கையை முன்வைத்து தங்களது அரசியல் அபிலாசைகளை வெளிப்படுத்தினார்கள்.
ஆனாலும் பேரின ஆட்சியாளர்கள் தமிழ் மக்களுக்கு என்ன பிரச்சினை இருக்கின்றது என கேவலமாகக் கேள்வி கேட்டு அவர்களை உதாசீனப்படுத்தினார்களேயொழிய இனப்பிர்சசினைக்கு அரசியல் ரீதியில் தீர்வு காண முன்வரவில்லை. இந்த நாட்டின் சக பிரஜைகளாகிய தமிழ் மக்களையும் ஒன்றிணைத்துக் கொண்டு நாட்டை அபிவிருத்தி செய்யவும் நாட்டை முன்னேற்றப்பாதையில் கொண்டு செல்வதற்கும் அவர்கள் முனையவில்லை.
தமிழ் மக்களை அடக்கி ஒடுக்கி அவர்களது அரசியல் உரிமைகளை மறுத்து, அவர்களை அடிமைகளாக வைத்திருப்பதற்கான நடவடிக்கைகளிலேயே ஆட்சியாளர்கள் தொடர்ந்து ஈடுபட்டிருந்தார்கள்.
அரசியல் உரிமைக்காக அரசியல் ரீதியிலான அர்ப்பணிப்புடன் ஆ,யுதமேந்திப் போராடிய தமிழ் இளைஞர்களின் தார்மீகக் கோபாவேசத்திற்கு அரச படைகளினால் ஈடுகொடுக்க முடியவில்லை. சகல வசதிகளையும் வளங்களையும் கொண்ருந்த அரச படைகள் தமிழ் இளைஞர்களின் தாக்குதல்களில் தடுமாறினார்கள். இந்த நிலையில் உலக வல்லரசுகளினதும் ஆயுத பலம் கொண்ட நாடுகளினதும் இராணுவ ரீதியிலான உதவிகளைக் கொண்டு விடுதலைப்புலிகளை இராணுவ ரீதியாக மௌனிக்கச் செய்து யுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வந்தார்கள்.
இந்த யுத்த வெற்றியை தமது சுய அரசியல் நலன்களுக்குப் பயன்படுத்திய ராஜபக்சக்கள், சிங்கள மக்களை இனத்துவ மதவெறி நிலையில் உசுப்பேத்தி, தமிழ் மக்களுக்கு எதிரான அரசியல் உளவியல் நிலையை வளர்த்தெடுத்துச் சென்றார்கள். அதன் விளைவாகவே 2019 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் கோட்டாபய ராஜபக்ச வரலாற்றுச் சாதனையாக 69 இலட்சம் சிங்கள பௌத்த மக்களின் வாக்குகளைப் பெற்று வெற்றியீட்டினார். யுத்தம் 2009 ஆம் ஆண்டு முடிவுக்கு வந்தது. ஆனால் இனவாத நோக்கிலான அந்த யுத்த வெற்றி பத்து வருடங்களின் பின்னர் கோட்டாபய ராஜபக்சவுக்கு தேர்தலில் அமோக வெற்றியை ஈட்டித் தந்தது.
ஆனால் ராஜபக்சக்களின் துரதிஸ்டம் யுத்த வெற்றி மற்றும் தேர்தலிலான அரசியல் வெற்றிக்குப் பின்னால் ஒளிந்திருந்து 2022 ஆம் ஆண்டு கோட்டாபய ராஜபக்சவின் மூன்று ஆண்டு ஆட்சிக்காலத்திலேயே நிறைவேற்றதிகார பலம் கொண்ட ஜனாதிபதி பதவியைக் கைவிட்டு துண்டைக் காணோம் துணியைக் காணோம் என்ற நிலையில் நாட்டைவிட்டு ஓடி மாலைதீவிலும் பின்னர் சிங்கப்பூரிலும் தஞ்சமடையச் செய்தது.
நாட்டின் அரசியல் புகட்டியுள்ள இந்த, மிகக் கசப்பான பாடத்தைக் கற்ற பின்னரும் ஆட்சியாளர்களாகிய பேரின அரசியல்வாதிகளும் அரசியல் தலைவர்களும் தமது இனவாத அடக்குமுறை ஆட்சி வழிப்போக்கில் இருந்து விலகுவதாகத் தெரியவில்லை. ராஜபக்சக்களின் பொறுப்பற்ற தீர்க்கதரிசனமற்ற ஆட்சிப் போக்கினால் நாட்டில் ஏற்பட்டுள்ள மோசமான பொருளாதார வீழ்ச்சி நிலையிலும் தமிழர்களுக்கு எதிரான இன, மத விரோதப் போக்கில் இருந்து அவர்கள் விலக முயற்சிக்க வில்லை.
நாட்டின் ஏற்றுமதி உற்பத்தி, விவசாய, கடல்சார் உற்பத்திகளை அதிகரித்து பொருளாதார நெருக்கடிக்குத் தீர்வு காண வேண்டிய பொறுப்புக்கள் ஆட்சியாளர்களையும் நாட்டு மக்களையும் பெரும் சுமையாக அழுத்திக் கொண்டிருக்கின்றன. ஆனால் அந்த மிக முக்கியமான தேசிய பொறுப்பை நிதானமானவும் மிகவும் பொறுப்போடும் கையாள்வதற்கு ஆட்சியாளர்கள் இன்னும் முன்வராத நிலைமையே காணப்படுகின்றது.
யுத்த காலத்தில் பாதுகாப்புக்காக இடம்பெயர்ந்து சென்ற மக்களுடைய காணிகளை மட்டுமல்லாமல் தமிழ் மக்களின் வாழ்வியல் ரீதியாக கேந்திர முக்கியத்துவம் மிக்க பிரதேசங்களையும், அங்கு வசித்த மக்களை ஆயுத முனையில் அச்சுறுத்தி வெளியேறச் செய்து இராணுவத்தினர் ஆக்கிரமித்தார்கள். அந்தக் காணிகளையும் அவர்கள் உரியவர்களிடம் கையளிக்க விரும்பாத போக்கிலேயே நடந்து கொண்டிருக்கின்றார்கள்.
வலிகாமம் வடக்கில் பலாலி இராணுவ தளத்தைப் பாதுகாப்பதற்காக தமிழ் மக்களின் செல்வம் கொழிக்கும் பூமியாகிய 6500 ஏக்கர் அளவிலான காணிகளை இராணுவத்தினர் அடாத்தாகக் கைப்பற்றி அங்கு நிரந்தரமாக நிலைகொண்டார்கள். யுத்தம் முடிவுக்கு வந்ததையடுத்து. வேண்டா வெறுப்போடு கிள்ளி கிள்ளி கொடுத்ததைப் போன்று சிறிய சிறிய அளவிலான காணிகளை உரியவர்கள் மீள்குடியேறி வசிப்பதற்காக அரசாங்கம் விடுவித்தது. இந்த வகையில் இன்னும் 3500 ஏக்கர் காணிகள் விடுவிக்கப்பட வேண்டியுள்ளது என்று வலிவடக்கு மீள்குடியேற்றத்துக்கான அமைப்பின் தலைவர் அ.குணபாலசிங்கம் தெரிவித்தார்.
எஞ்சியுள்ள இந்தக் காணிகளில் பலாலி ஆரோக்கியமாதா ஆலயத்தைச் சூழ்ந்த பிரதேசத்தில் வசித்த 70 குடும்பங்களின் 13 ஏக்கர் காணிகள் விடுவிக்கப்படும் என்றதோர் அறிவித்தல் வெளியாகியது. ஆனால் அந்தக் காணிகள் அடையாளப்படுத்தப்படவில்லை. அதிகாரபூர்வமாக அரசு அதனை அறிவிக்கவும் இல்லை. இந்த நிலையில் வலிகாமம் வடக்கில் விடுவிக்கப்பட வேண்டிய 3500 காணிகளில் 1674 ஏக்கர் காணிகளை இராணுவத்திற்கென நிரந்தரப் பாவனைக்காக சுவீகரிப்பதற்கான உத்தரவிட்டு தெல்லிப்பழை பிரதேச செயலாளருக்கு காணி அமைச்சின் மேலதிக செயலாளர் கடிதம் அனுப்பியுள்ளார்.
காணி சுவிகரிப்புக்கான இந்த நடவடிக்கை பற்றிய தகவல்கள் கசிந்ததையடுத்தே வடக்கு கிழக்குப் பல்கலைக்கழக மாணவர்கள் கலந்து கொண்ட எதிர்ப்புப் போராட்டம் நவம்பர் 2 ஆம் திகதி தெல்லிப்பழை பிரதேச செயலகத்தின் எதிரில் நடத்தப்பட்டது. முன்னதாக இந்தப் போராட்டத்தில் கலந்து கொண்ட மாணவர்கள், பொதுமக்கள், காணிகளை இழந்தோர், வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் கலந்து கொண்ட பேரணியொன்றும் யாழ் பல்கலைக்கழத்தில் இருந்து புறப்பட்டது. போராட்டத்தின்போது தங்களது காணிகளில் இருந்து இராணுவம் வெளியேற வேண்டும், எங்கள் நிலம் எங்களுக்கு வேண்டும் என்பது உள்ளிட்ட கோஷங்களை போராட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்கள் எழுப்பினர். போராட்டத்தின் முடிவில் மகஜர் ஒன்றும் தெல்லிப்பழை பிரதேச செயலாளரிடம் கையளிக்கப்பட்டது.
யுத்தம் முடிந்துவிட்டது. நாட்டில் பயங்கரவாதம் இல்லையென்று அரசாங்கமே கூறியிருக்கின்றது. இந்த நிலையில் பொதுமக்களிடம் இருந்து யுத்தகால இராணுவத் தேவைக்காகக் கையகப்படுத்திய பிரதேசங்களை இடம்பெயர்ந்த மக்களிடம் கையளித்து அவர்களை அங்கு மீள்குடியேற செய்யாமல் அவர்களை நட்டாற்றில் ஆட்சியாளர்கள் கைவிட்டிருக்கின்றார்கள்.
யுத்தம் முடிவுக்கு வந்த பின்னரும் அந்தக் காணிகளை அரசாங்கம் உரிமையாளர்களிடம் கையளிக்காமல் இராணுவத்தை நிலைநிறுத்தி வைத்துக் கொண்டிருக்கின்றது. நாட்டில் ஜனநாயகம் நிலவுகின்றது. மக்களின் உரிமைகள் மதிக்கப்படுகின்றன என அரசாங்கத்தினால் வெளிப்படுத்தப்படுகின்ற நிலைமைகளுக்கு இது நேர்மாறானது.
தமிழ்ப்பிரதேசங்களின் மீது பேரின அரசு மேற்கொண்டுள்ள அப்பட்டமான இராணுவ ஆக்கிரமிப்பு என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை. அத்துடன் தமிழ் மக்கள் மீது மேற்கொள்ளப்பட்டுள்ள சர்வாதிகார ஆட்சியின் வெளிப்பாடு என்பதிலும் சந்தேகமில்லை.