வலி.வடக்கு காணியை இம்மாத இறுதிக்குள் விடுவிக்க முடியும் : அமைச்சர் சந்திரசேகர்

யாழ்ப்பாணம் – வலி வடக்கு பகுதியில் விடுவிக்கப்படாத மக்களுடைய காணிகளின் ஒரு தொகுதியினை இம்மாத இறுதியில் விடுவிப்பதற்கான அனைத்து ஏற்பாடுகளும் இடம்பெற்று வருவதாக கடற்றொழில் அமைச்சரும் யாழ். மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு தலைவருமான இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.

அண்மையில் காணி விடுவிப்பு தொடர்பாக, பாதுகாப்பு உயர் அதிகாரிகளுக்கு ஜனாதிபதி உத்தரவு பிறப்பித்த நிலையில் காணி விடுவிப்பு இடம்பெறவுள்ள கால அளவு குறித்து ஊடகங்களுக்கு கருத்துரைத்த போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், காணி விடுவிப்பு தொடர்பில் தங்களது அரசாங்கம் ஏற்கனவே கூறிய வாக்குறுதியான மக்களின் காணி மக்களுக்கே என்ற நிலைப்பாட்டில் தொடர்ந்து பயணித்து வருவதாக கூறியுள்ளார்.

அண்மையில் ஜனாதிபதி அநுர தலைமையில் இடம்பெற்ற பாதுகாப்பு உயர் கூட்டத்தில் வலி.வடக்கு பகுதியிலுள்ள விடுவிக்கப்படாத காணிகள் தொடர்பாக நடவடிக்கை எடுப்பதற்கு பாதுகாப்பு உயர் அதிகாரிகளுக்கு உத்தரவு வழங்கியிருந்தார்.

அதன் அடிப்படையில் பாதுகாப்பு தரப்பினரிடம் உள்ள பொது மக்களின் காணிகளை படிப்படியாக விடுவிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

செப்டெம்பர் மாத இறுதி பகுதியில் வலி. வடக்கு பகுதியில் உள்ள ஒரு தொகுதி காணிகளை மக்களிடம் கையளிப்பதற்கு தேவையான நடவடிக்கைகள் இடம்பெற்று வருவதாக அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.

“எமது அரசாங்கம் பொறுப்பேற்றதன் பின் நாட்டில் ஊழல் கலாச்சாரம், போதை ஒழிப்பு போன்ற விடயங்களை கடந்த காலங்களை விட கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளோம்.

நாட்டை அழிவு பாதையில் கொண்டு சென்ற ஒரு கூட்டத்தை நாட்டு மக்கள் விரட்டியடித்துள்ள நிலையில் மீண்டும் அந்தக் கூட்டம் நாட்டை குழப்புவதற்கு எத்தனித்துக் கொண்டிருக்கிறது.

நாட்டை குழப்பும் நடவடிக்கையில் மக்களால் துரத்தப்பட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களும் அவர்களிடம் ஆசி பெற்ற போதைப் பொருள் பின்னணியில் செயற்படுபவர்களும் குழப்பம் விளைவிக்கும் செயற்பாடுகளை மேற்கொண்டு வருகின்றனர்” என்றும் அவர் தெரிவித்தார்.

தாங்கள் அவற்றை கண்டு அஞ்சப்போவதில்லை என்றும் மக்கள் அளித்த ஆணையை பொறுப்பேற்ற ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மக்களின் தோழராக எந்த சவாலையும் வெற்றி கொள்ளும் தலைவனாக செயற்பட்டு வருகிறார் என்றும் அவர் தெரிவித்தார்.

நாட்டு மக்கள் தெளிவாக இருக்க வேண்டும் ஆட்சி அதிகாரத்தை இழந்த கும்பல் நாட்டை மீண்டும் அதை பாதாளத்துக்கு கொண்டு செல்வதற்காக மக்களை இனவாத ரீதியாக தூண்டிவிடும் செயற்பாடுகளில் ஈடுபடுவார்கள். இந்த செயற்பாடுகளில் தமிழ் அரசியல்வாதிகளும் விதிவிலக்கு அல்ல என்று அமைச்சர் சந்திரசேகர் குறிப்பிட்டுள்ளார்.

“மக்களின் காணி விடுவிப்பு தொடர்பில் ஜனாதிபதி உத்தரவு வழங்கிய பின்னரும் தமது அரசியல் சுயலாபங்களுக்காக மக்களை அழைத்து போராட்டங்களை நடத்தி வருகிறார்கள்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பில் பங்கு பற்றிய நல்லாட்சி அரசாங்கத்தில் காணி விடுவிப்பு தொடர்பில் அப்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனாவுக்கு எதிராக போராட்டம் நடத்த முடியாது என கூறினார்கள்.

அவ்வாறு போராட்டம் நடாத்தினால் நல்லாட்சி அரசாங்கம் குழம்பி விடும் என கூறிய தமிழ் மக்களின் பிரதிநிதிகள் தற்போது காணி விடுவிப்பு தொடர்பில் கொழும்பு ஜனாதிபதி செயலகத்துக்கு முன்னால் தொடர் போராட்டம் நடாத்தப் போகிறோம் என கூறுகிறார்கள்” என்று கடற்றொழில் அமைச்சரும் யாழ். மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு தலைவருமான இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.