செங்கலடி பிரதேச செயலகத்தில் பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் ஆரம்பிக்கப்படுவதற்கு முன்னர், மயிலத்தமடு – மாதவணை பண்ணையாளர்கள் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பதாதைகளை ஏந்தியவாறு போராட்டத்தில் ஈடுபட்ட பண்ணையாளர்கள், தமது கால்நடைகள் தொடர்ச்சியாக தாக்கப்பட்டு கொள்ளையிடப்படுவதாகவும், தமது பாரம்பரிய மேய்ச்சல் நிலங்கள் பிற இனத்தவரால் அபகரிக்கப்படுவதாகவும் குற்றஞ்சாட்டினர்.
தமது பிரச்சினைகளுக்கு நிரந்தரத் தீர்வு வழங்குமாறும் அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.
சம்பவ இடத்துக்கு வருகை தந்த பாராளுமன்ற உறுப்பினர்களான வைத்தியர் இ.சிறிநாத் மற்றும் ஞா.சிறிநேசன் ஆகியோர், குறித்த பிரச்சினை தொடர்பில் ஜனாதிபதியுடன் நேரடியாகக் கலந்துரையாடி தீர்வைப் பெற்றுத் தருவதாக உறுதியளித்தனர்.
இதையடுத்து பண்ணையாளர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். தொடர்ந்து தேசிய மக்கள் சக்தியின் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் பிரதேச ஒருங்கிணைப்புக் குழுத் தலைவருமான கந்தசாமி பிரபு தலைமையில் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் நடைபெற்றது.
இதில் பாராளுமன்ற உறுப்பினர்கள், உள்ளூராட்சி மன்றங்களின் தலைவர்கள் மற்றும் அரச, அரச சார்பற்ற நிறுவனங்களின் அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். கூட்டத்தில் கல்வி, சுகாதாரம், வீடமைப்பு உள்ளிட்ட அடிப்படை வசதிகளை மேம்படுத்துவது தொடர்பில் ஆராயப்பட்டது.
அத்துடன், செங்கலடி பிரதேசத்தில் இடம்பெறும் சட்டவிரோத மணல் அகழ்வு, ஏறாவூர் நகர சபையால் அகற்றப்படும் குப்பைகள் மற்றும் விலங்கு கழிவுகளால் மக்கள் எதிர்நோக்கும் பாதிப்புகள் குறித்தும் கவனம் செலுத்தப்பட்டது.
மேலும், விவசாயிகள் மற்றும் கால்நடை வளர்ப்பாளர்கள் முன்வைத்த பிரச்சினைகள் தொடர்பிலும் ஆராயப்பட்டதுடன், எதிர்வரும் மழைக்காலத்தில் பொதுமக்கள் எதிர்நோக்கும் அசௌகரியங்களைத் தவிர்ப்பதற்கான முன்னேற்பாடுகள் குறித்தும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டன.



