மீண்டும் இலவச கோவிட்-19 பரிசோதனை பொருட்களை வழங்கும் அமெரிக்கா

அமெரிக்காவில் தற்போது ஏற்பட்டுள்ள குளிர்கால பருவநிலை மாற்றத்தால் கொரோனோ வைரஸின் பரவல் அதிகமாகும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளதை தொடர்ந்து மீண்டும் இலவச பரிசோதனை பொருட்களை அமெரிக்கா அரசு மக்களுக்கு வழங்க தீர்மானித்துள்ளது.

இதன் அடிப்படையில் ஒரு குடும்பம் நான்கு பரிசோதனை கருவிகளை இலவசமாக பெறமுடியும். இலவசமாக கோவிட்-19 பரிசோதனை பொருட்கள் வழங்குவதை கடந்த செப்ரம்பர் மாதம் நிறுத்தியிருந்த அமெரிக்கா கடந்த வியாழக்கிழமை (15) அதனை மீண்டும் ஆரம்பித்துள்ளது.

குளிர்காலத்தில் கோவிட்-19 இன் தொற்று அதிகரித்து வருவதாலும், வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பதாலும் அமெரிக்கா இந்த முடிவை மேற்கொண்டுள்ளது. கடந்த ஜனவரி மாதத்தில் இருந்து 600 மில்லியன் பரிசோதனை பொருட்களை அமெரிக்கா இலவசமாக விநியோகம் செய்தபோதும், நிதி நெருக்கடி காரணமாக அதனை கடந்த செப்ரம்பர் மாதம் நிறுத்தியிருந்தது.

நத்தார் பண்டிகையின் போது மக்கள் அதிகமாக கூடுவதால் கோவிட்-19 நோயின் தாக்கம் அதிகரிக்கலாம் என அமெரிக்காவின் நிர்வாக அதிகாரி தெரிவித்துள்ளார். சில நகரங்களில் மீண்டும் முகக்கவசங்களும் கட்டாயமாக்கப்பட்டுள்ளன.