இலங்கைக்கு உதவுவதாக அமெரிக்கா, ஜப்பான் கருத்து – பிரதமர்

சர்வதேசம் இலங்கையின் இக்கட்டான நிலைமை தொடர்பில் அவதானம் செலுத்தியுள்ளது. அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் வெள்ளை மாளிகையில் இடம்பெற்ற கலந்துரையாடலொன்றின் போது இலங்கைக்கு உதவுவதாக அந்நாட்டிலுள்ள இலங்கை தூதுவரிடம் தெரிவித்துள்ளார். 

இதேபோன்று இலங்கையுடனான நட்புறவை மீண்டும் கட்டியெழுப்ப இணக்கம் தெரிவித்துள்ள அந்நாட்டு வெளிநாட்டலுவல்கள் அமைச்சின் பணிப்பாளர் நாயகம் அடுத்த மாதம் நாட்டுக்கு விஜயம் செய்யவுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

அத்தோடு கடன் மறுசீரமைத்தல் தொடர்பான சர்வதேச ஆலோசகர்கள் நாட்டுக்கு விஜயம் செய்துள்ளதாகவும், எனவே இந்த செயற்பாடுகளை இம்மாத இறுதிக்குள் நிறைவு செய்ய முடியும் என எதிர்பார்ப்பதாகவும் குறிப்பிட்டுள்ள பிரதமர், எதிர்வரும் 4 மாதங்களுக்கு எரிபொருளைப் பெற்றுக் கொள்வதற்காக இந்தியாவுடன் புதிய கடன் திட்ட ஒப்பந்தத்தில் கையெழுத்திட முயற்சிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

விசேட அறிவித்தலொன்றை வெளியிட்டு இதனைத் தெரிவித்துள்ள பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அவ் அறிவித்தலில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது,

கடன் மறுசீரமைப்பிற்கான சர்வதேச ஆலோசகர்கள் விஜயம்

ஏற்கனவே நாம் பெற்றுக் கொண்டுள்ள கடன்களை மீள செலுத்தும் காலத்தை மறுசீரமைக்க வேண்டியுள்ளது. எமக்கு அந்த அனுபவம் இல்லை என்பதால் லாசாட் மற்றும் கிளிஃப்ர்ட் சான்ஸ் ஆகிய இரு நிறுவனங்களிலிருந்து ஆலோசகர்கள் கிடைக்கப் பெற்றுள்ளனர். அவர்கள் செவ்வாயன்று நாட்டுக்கு வியஜம் செய்துள்ளனர். எனவே இம்மாத இறுதிக்குள் இந்த வேலைத்திட்டங்களை நிறைவுசெய்ய முடியும் என்று எதிர்பார்க்கின்றோம்.

இலங்கைக்கு உதவுவதாக பைடன் உறுதி

அமெரிக்க இராஜாங்க செயலாளர் அன்டனி ஜே பிலிங்கனுடனான உரையாடலின் போது அவர் எமக்கு உதவுவதாக உறுதியளித்தார். அமெரிக்காவின் வெள்ளை மாளிகையில் தூதுவர்களுடன் கலந்துரையாடலொன்று இடம்பெற்றுள்ளது.

இதன்போது அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் இலங்கைக்கு ஒத்துழைப்புக்களை வழங்குவதாக அமெரிக்காவிற்கான எம் நாட்டு தூதுவரிடம் தெரிவித்துள்ளார். அமெரிக்கா எம்முடன் இணைவது மகிழ்ச்சியளிப்பதோடு , அவர்களுக்கு நாம் நன்றியையும் தெரிவித்துக் கொள்கின்றோம்.

ஜப்பான் வெளிநாட்டலுவல்கள் அமைச்சின் பணிப்பாளர் நாயகம் நாட்டுக்கு விஜயம்

ஜப்பானுடனான நட்புறவில் சில பிரச்சினைகள் காணப்பட்டாலும் தற்போது அவர்களுடனும் பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. நான் அவர்களுடன் தொடர்புகளைப் பேணி வருகின்றேன். அந்நாட்டுக்கான இலங்கை தூதுவர் ஜப்பான் வெளிநாட்டலுவல்கள் அமைச்சரை சந்தித்த போது இலங்கையுடனான தொடர்புகளை மீளக் கட்டியெழுப்ப வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதே போன்று இந்த பிராந்தியத்திற்கு பொறுப்பான ஜப்பான் வெளிநாட்டலுவல்கள் அமைச்சின் பணிப்பாளர் நாயகம் எமது வெளிநாட்டலுவல்கள் அமைச்சின் செயலாளரிடம், அடுத்த மாதம் இலங்கைக் விஜயம் செய்ய எதிர்பார்த்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

உலக உணவு திட்டம்

உலக உணவு திட்டத்தின் தலைவர் டேவிட் பீஸ்லியுடன் கடந்த 10 ஆம் திகதி இடம்பெற்ற கலந்துரையாடலின் போது இலங்கையின் நிலைவரம் தொடர்பில் உணர்வதாகவும், அடுத்த மாதம் அவரும் நாட்டுக்கு விஜயம் செய்ய எதிர்பார்த்துள்ளதாகவும் குறிப்பிட்டார். இவை சிறந்த அறிகுறிகளாகும்.

சீனாவின் உதவிகள்

ஆசிய உட்கட்டமைப்பு முதலீட்டு வங்கி எமது வேலைத்திட்டங்களுக்கான நிதியை வழங்குவதாக பீஜிங்கிலுள்ள இலங்கை தூதுவரிடம் தெரிவித்துள்ளது. அத்தோடு சீன தூதுவரிடமும் கலந்துரையாடல்களை முன்னெடுப்பதற்கு தீர்மானித்துள்ளேன்.

இந்தியா

இந்தியாவிடமிருந்து தற்போதும் உதவிகள் கிடைக்கப் பெறுகின்றன. இந்தியாவிடமிருந்து எரிபொருளுக்காக மேலும் 500 மில்லியன் டொலர் கடனைப் பெற்றுக் கொள்ள எதிர்பார்க்கின்றோம். இது குறித்த ஒப்பந்தத்தில் கையெழுத்திடல் உள்ளிட்ட செயற்பாடுகளை துரிதமாக நிறைவு செய்வதற்காக இலங்கையிலுள்ள உயர்ஸ்தானிகர் இந்தியாவிற்கு செல்லவுள்ளார்.

சர்வதேசம்

இவ்வாறு சர்வதேசத்தின் உதவிகளைப் பெற்றுக் கொள்வதற்காக அந்த நாடுகளிலுள்ள இலங்கை தூதுவர்கள் , அந்நாடுகளை பிரதிநிதித்துவப்படுத்தும் இலங்கைக்கான தூதுவர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கின்றேன். அதே போன்று ஐரோப்பிய ஒன்றியம், ஐக்கிய நாடுகள் சபை, ரஷ்யா உள்ளிட்ட பல நாடுகளுடன் பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்க எதிர்பார்த்துள்ளோம். ஐக்கிய நாடுகள் சபை இது தொடர்பில் விசேட அறிவித்தல் விடுத்துள்ளமைக்கு நன்றி தெரிவிக்கின்றோம்.

சர்வதேசம் இலங்கை தொடர்பில் அவதானம் செலுத்தியுள்ளது. எமது உதவ தயாராக உள்ளன. எவ்வாறிருப்பினும் அந்த உதவிகளைப் பெற்றுக் கொள்வதற்காக எம்மால் ஏற்படுத்திக் கொள்ளப்பட்ட இந்த பொருளாதார நெருக்கடிகளை தீர்ப்பதற்கான வேலைத்திட்டங்களை முன்வைக்க வேண்டியுள்ளது. ஏனையோர் எமக்கு உதவ முன்னர் நாமே எமக்கு உதவ வேண்டும்.

நான் ஏற்கனவே தெரிவித்ததைப் போன்று எரிபொருள் தொடர்பில் இந்த மூன்று வாரங்கள் மிகவும் நெருக்கடி மிக்கதாக அமையும். இந்த கஷ்ட நிலைமையானது இன்று நாட்டில் காணப்படும் எரிபொருள் மற்றும் எரிவாயுவைப் பெற்றுக் கொள்வதற்காக காணப்படும் வரிசைகள் மூலம் தெளிவாகத் தெரிகிறது.

எரிவாயு

தற்போது எரிவாயு கப்பலொன்று நாட்டுக்கு வருகை தந்துள்ளது. 3500 மெட்ரிக் தொன் சமையல் எரிவாயு குறித்த கப்பலில் காணப்படுகிறது. எனினும் இந்த எரிவாயு வைத்தியசாலைகள், ஹோட்டல்கள் உள்ளிட்டவற்றுக்கே வழங்கப்படும். எனினும் இதன் பின்னர் வரும் கப்பலின் ஊடாக 4 மாதங்களுக்கு தேவையான எரிவாயுவைப் பெற்றுக் கொள்ள முடியும். தற்போதுள்ள நிலைமையில் அதனைப் பெற்றுக் கொள்வதற்கு இன்னும் 14 நாட்கள் செல்லும். எவ்வாறிருப்பினும் அதற்கு முன்னர் ஒரு கப்பலையேனும் வரவழைப்பதற்கு முயற்சிக்கின்றோம். அது தொடர்பான கலந்துரையாடல்கள் இடம்பெற்று வருகின்றன.

எரிபொருள்

உண்மையில் எரிபொருளை தடையின்றி வழங்குவதற்கே தீர்மானித்தோம். எவ்வாறிருப்பினும் தற்போதுள்ள கேள்வியில் 50 சதவீதத்தை மாத்திரமே தடையின்றி வழங்க முடியும். அதிலும் மின் உற்பத்தி , போக்குவரத்து உள்ளிட்ட அத்தியாவசிய சேவைகளுக்கு முன்னுரிமையளித்து எரிபொருளை வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. தற்போதுள்ள எரிபொருள் கையிருப்பினை எதிர்வரும் 7 நாட்களுக்கு போதுமானதாகும்.

எனினும் அதற்கு முன்னர் இன்று வியாழக்கிழமை 40,000 மெட்ரிக் தொன் எரிபொருள் கப்பலொன்று நாட்டு வரவுள்ளது. இது தவிர மேலும் இரு பெற்றோல் மற்றும் டீசல் கப்பல்கள் வரவழைக்கப்பட்டுள்ளன. அதற்கமைய இம்மாத இறுதிவரை உரிய முறையில் கப்பல்கள் வரவழைக்கப்பட்டுள்ளன. அடுத்த மாதத்தில் இரு கப்பல்களை வரவழைப்பதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றோம்.

இந்தியாவுடன் புதிய கடன் திட்ட ஒப்பந்தம்

அதன் பின்னர் இந்தியாவுடன் புதிய கடன் திட்ட ஒப்பந்தமொன்றில் கையெழுத்திட்டு 4 மாதங்களுக்கு தேவையான எரிபொருள் பெற்றுக் கொள்ளப்படவுள்ளது. எவ்வாறிருப்பினும் இவை அனைத்தையும் நூற்றுக்கு 50 சதவீதம் என்ற அடிப்படையிலேயே வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

வருட இறுதிக்குள் ரூபா தட்டுப்பாட்டுக்கு தீர்வு

இவற்றைப் பெற்றுக் கொள்வதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்கும் போது பல சிக்கல்களை எதிர்கொள்ள வேண்டியுள்ளது. எரிபொருள் கப்பல்களுக்கு செலுத்துவதற்கான டொலரைத் தேட வேண்டியேற்பட்டது. டொலரைப் பெற்றுக் கொண்டதன் பின்னர் இலங்கை வங்கியில் ரூபாவும் காணப்படவில்லை.

இவ்வாறான பின்னணியிலேயே பணத்தை அச்சிடுவதற்கு அமைச்சரவையில் அனுமதியைப் பெற்றுக் கொண்டேன். இதுவே எமது பொருளாதார நிலைமையாகும். இது ஒரு உதாரணம் மாத்திரமேயாகும். எமக்கு ரூபா வருமானம் கிடையாது. புதிய வரி அறவீட்டு முறைமைகள் ஊடாக இவ்வருட இறுதிக்குள் ரூபா தட்டுப்பாட்டுக்கு தீர்வு காண முடியும் என்று எதிர்பார்க்கின்றோம்.

டொலர் பிரச்சினை

இதே போன்று டொலர் பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்காக சர்வதேச நாணய நிதியத்துடன் பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. கடந்த 7 ஆம் திகதி சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவ பணிப்பாளருடன் உரையாடினேன். அதற்கமைய எமக்கான வேலைத்திட்டங்களை துரிதமாக செய்து கொடுப்பதாக அவர் உறுதியளித்தார். அத்தோடு 20 ஆம் திகதி சர்வதேச நாணய நிதியக்குழுவொன்றை நாட்டுக்கு அனுப்புவதாகவும் கூறினார்.

கஷ்டங்கள், குறைபாடுகள் தற்போது காணப்படலாம். எனினும் மேற்குறிப்பிடப்பட்டவாறு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டு நிதியைப் பெற்றுக் கொண்டதன் பின்னர் பொருளாதாரத்தை வழமைக்கு கொண்டு வர முடியும். அதுவரையில் உங்கள் அனைவருக்கும் மோசமான காலமே காணப்படும் என்பதை நான் அறிவேன்.

பிரச்சினைகள் தோற்றம் பெறும். எனினும் அவற்றை எதிர்கொண்டு தாங்கிக் கொள்வதற்கு உங்கள் அனைவருக்கும் நன்றி கூறுகின்றேன். உடனடியாக இந்த பிரச்சினைகளை தீர்க்க முடியாததையிட்டு கவலை தெரிவித்துக் கொள்கின்றேன். எவ்வாறேனும் பிரச்சினைகளை தீர்ப்பதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்து வருவதாக நான் மீண்டும் தெரிவித்துக் கொள்கின்றேன் என்றார்.

Tamil News