அக்னி பாதை திட்டத்திற்கு எதிர்ப்பு: இந்தியாவில் வன்முறைப் போராட்டங்களால் பதற்றம்

103 Views

இந்தியா-அக்னி பாதை திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பிஹாரில் இளைஞர்கள் நடத்தும் போராட்டம் பலபகுதிகளில் வன்முறையாக மாறியுள்ளது.

இராணுவம், கடற்படை, விமானப் படையில் 4 ஆண்டுகள் சேவையாற்ற வகை செய்யும் ‘அக்னி பாதை’ என்ற புதிய திட்டத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியது. இத்திட்டத்தின்படி, 17.5 முதல் 21 வயதுடைய இளைஞர்களும் இளம்பெண்களும் முப்படைகளில் சேரலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இத்திட்டத்திற்கு காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி எதிர்ப்பு தெரிவித்துள்ளார். அவர், தனது ட்விட்டர் பக்கத்தில் “இந்தியாவுக்கு இரண்டு பக்கங்களில் இருந்து அச்சுறுத்தல் நிலவும் சூழலில் அக்னி பாதை திட்டமானது நமது படைகளின் செயல்திறனை குறைக்கும். இராணுவத்தின் மாண்பு, பாரம்பரியம், வீரம் மற்றும் ஒழுக்கத்தை சமரசம் செய்யும் முயற்சிகளை பாஜக நிறுத்திக் கொள்ள வேண்டும்” என்று கூறியிருக்கிறார்.

“குறுகிய கால சேவை செய்தால், 4 ஆண்டுகளுக்குப் பின்னர் தங்களுக்கு என்ன வேலை கிடைக்கும். புதிதாக வேலை தேட மீண்டும் ஏதாவது படிக்க நேரிடும்“ என்று இளைஞர்கள் கூறுகின்றனர்.

ஓய்வு பெற்ற இராணுவ அதிகாரிகளோ செலவினங்களைக் கட்டுப்படுத்த இராணுவத்தில் சிக்கனம் காட்டக் கூடாது எனக் கூறுகின்றனர். அதேபோல், “குறுகிய கால சேவையில் ஈடுபடுவோர் முழு ஈடுபாட்டுடன் பணியாற்ற மாட்டார்கள். இது இராணுவத்துக்கு ஆபத்து“ என்றும் கூறியுள்ளனர். குறுகிய கால சேவையில் ஈடுபட்டுத் திரும்புவோர் கேங்ஸ்டர்களாக உருவாக வாய்ப்புள்ளது என்றும் எச்சரித்துள்ளனர்.

அத்துடன் நாடு முழுவதும் இராணுவத்தில் சேர விருப்பமுள்ள இளைஞர்கள் பலரும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். பிஹாரில் நேற்று முதலே பலமான எதிர்ப்பு கிளம்பத் தொடங்கியுள்ளது.

பிஹாரைத் தொடர்ந்து உத்தரப் பிரதேசம், மத்தியப் பிரதேசத்திலும் போராட்டம் வலுக்கும் சூழல் உருவாகியுள்ளது.

தமிழகத்திலும் வேலூரில் இளைஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். வேலூர், திருவண்ணாமலை பகுதிகளில் இருந்து இராணுவத்தில் சேர்வோர் எண்ணிக்கை அதிகமாக இருப்பது குறிப்பிடத்தக்கது.

Tamil News

Leave a Reply