தாய்வானுடன் முறையான வர்த்தக பேச்சுவார்த்தைகளைத் தொடங்குவதாக அமெரிக்கா அறிவிப்பு

அமெரிக்க பாராளுமன்ற பிரதிநிதிகள் சபை (கீழவை) தலைவர் நான்சி பெலோசியின் சர்ச்சைக்குரிய வருகைக்கு சில வாரங்களுக்குப் பிறகு, தாய்வானுடன் முறையான வர்த்தக பேச்சுவார்த்தைகளைத் தொடங்குவதாக அமெரிக்கா அறிவித்துள்ளது.

முதல் சுற்று பேச்சுவார்த்தை ஆரம்ப இலையுதிர்காலத்தில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்று அமெரிக்க வர்த்தக பிரதிநிதி அலுவலகம் தெரிவித்துள்ளது.

அவர்களின் கலந்துரையாடலில் வர்த்தக வசதி, டிஜிட்டல் வர்த்தகம் மற்றும் ஊழல் எதிர்ப்பு தரநிலைகள் பற்றிய பேச்சுக்கள் அடங்கும்.

பெலோசியின் வருகையைத் தொடர்ந்து அமெரிக்காவிற்கும் சீனாவிற்கும் இடையிலான உறவுகள் மேலும் மேலும் பதற்றமடைந்துள்ளன.

21ஆம் நூற்றாண்டு வர்த்தகத்திற்கான அமெரிக்க- தாய்வான் முன்முயற்சி ஜூன் மாதம் முதன்முதலில் வெளியிடப்பட்டது. இரு தரப்பினரும் இப்போது பேச்சுவார்த்தை ஆணையத்தில் ஒருமித்த கருத்தை அடைந்துவிட்டோம் என்று கூறுகின்றனர்.

‘நாங்கள் ஒரு லட்சிய அட்டவணையைத் தொடர திட்டமிட்டுள்ளோம். அது ஒரு நியாயமான, வளமான மற்றும் நெகிழ்ச்சியான 21ஆம் நூற்றாண்டின் பொருளாதாரத்தை உருவாக்க உதவும்’ என்று அமெரிக்காவின் துணை வர்த்தகப் பிரதிநிதி சாரா பியாஞ்சி ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.

அமெரிக்காவிற்கும் தாய்வானுக்கும் இடையிலான வர்த்தகம் 2020இல் கிட்டத்தட்ட 106 பில்லியன் அமெரிக்க டொலர்கள் மதிப்புடையதாக இருந்தது.