காணாமல் ஆக்கப்பட்டவர்களின் விடயத்தில் பாதிக்கப்பட்டுள்ள குடும்பங்கள் தங்களது மூல ஆவணங்களை எவரிடமும் வழங்குவதைத் தவிர்க்குமாறும் காணாமல் போனோர் தொடர்பான அலுவலகம் கடுமையாக எச்சரித்துள்ளது.
பட்டியலில் இடம்பெற்றுள்ள 119 குடும்பத்தினர், காணாமல் போன ஆட்கள் பற்றிய அலுவலகத்திற்கு (OMP) நேற்று (16) காலை அழைக்கப்பட்ட நிலையில் இந்த விடயம் கூறப்பட்டுள்ளது.
இந்தச் சந்திப்பின்போது, பல தசாப்தங்களாகத் தமது உறவுகளைத் தொலைத்துவிட்டுத் தவிக்கும் குடும்பங்களின் துயரங்களும், OMP அலுவலகத்தின் ஊடாக முன்னெடுக்கப்பட்டு வரும் விசாரணைகளின் முன்னேற்றமும் வெளிப்படுத்தப்பட்டன.
“1990ஆம் ஆண்டு எட்டாம் மாதம் இரண்டாம் திகதி வீட்டிலிருந்து அழைத்துச் செல்லப்பட்டவர் அதன் பின்னர் திரும்பி வரவில்லை.
அவர் கிடைக்கும் வரை நாங்களும் பல இடங்களிலும் தேடித் திரிகிறோம். எந்தவொரு முடிவும் இல்லாமல் 36 வருடங்களாக எனது கணவரைக் காணவில்லை” என்று பாதிக்கப்பட்ட குடும்பத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் தனது துயரத்தைப் பகிர்ந்துகொண்டார்.
இந்த நிகழ்வு தொடர்பில் கருத்துத் தெரிவித்த காணாமல் போன ஆட்கள் பற்றிய அலுவலகத்தின் ஆணையாளர், சட்டத்தரணி வடிவேல் கிருஷ்ணமூர்த்தி, தமது அலுவலகத்திடம் சுமார் 25,000 பேரை உள்ளடக்கிய காணாமல் ஆக்கப்பட்டோரின் பட்டியல் இருப்பதாகக் குறிப்பிட்டார்.
இரட்டைப் பதிவுகள் உள்ளிட்ட விடயங்களைச் சரிபார்த்த பின்னர், தற்போது சுமார் 17,000 பேரின் தரவுகள் அலுவலகத்திடம் உள்ளதாகவும், இவர்களில் ஏறத்தாழ 11,000 பேருக்கு இதுவரை முதற்கட்ட விசாரணைகள் நடத்தப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
முதற்கட்ட விசாரணைகளின் பின்னர் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு இடைக்கால நிவாரணமாக 2 இலட்சம் ரூபா வழங்கப்படுவதுடன், காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு என்ன நடந்தது என்பதைக் கண்டறிவதற்கான மேலதிக விசாரணைகளும் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருவதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.
இதற்கிடையில், காணாமல் போன ஆட்கள் பற்றிய அலுவலகத்தைப் பிரதிநிதித்துவப்படுத்துவதாகக் கூறிக்கொண்டு சில நிறுவனங்களும் தனிநபர்களும் காணாமல் ஆக்கப்பட்டோரின் குடும்பங்களிடமிருந்து மூல ஆவணங்களைச் சேகரித்து வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இது தொடர்பில் OMP வெளியிட்டுள்ள அறிக்கையில், அலுவலகத்தின் பணிகளுக்காகப் பிறப்புச் சான்றிதழ்கள், காணாமல் ஆக்கப்பட்டவர்களின் புகைப்படங்கள் உள்ளிட்ட ஆவணங்களின் சான்றளிக்கப்பட்ட பிரதிகள் அல்லது நிழற்படப் பிரதிகள் மட்டுமே சேகரிக்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.



