“குறுக்குவழி” சொற்பிரயோகம் தொடர்பில் வல்வெட்டித்துறை நகரசபை அமர்வில் கடும் குழப்பம்!

WhatsApp Image 2026 11 21 at 4.15.14 PM 2 "குறுக்குவழி" சொற்பிரயோகம் தொடர்பில் வல்வெட்டித்துறை நகரசபை அமர்வில் கடும் குழப்பம்!

கடந்த சபை அமர்வின் போது கொண்டுவரப்பட்ட பிரேரணையில் பயன்படுத்தப்பட்ட “குறுக்குவழி” சொற்பிரயோகம் தொடர்பில் வல்வெட்டித்துறை நகரசபை அமர்வில் கடும் குழப்பம் ஏற்பட்டதை தொடர்ந்து சபை நடவடிக்கை ஒத்திவைக்கப்பட்ட சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளது.

வல்வெட்டித்துறை நகரசபையின் 17 ஆவது சபை அமர்வு பதில் நகரபிதா நாகதம்பி பத்மநாதன் தலைமையில் நேற்று (20) வெள்ளிக்கிழமை காலை 9.30 மணிக்கு ஆரம்பமாகி இடம்பெற்றது.

நகரசபை மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்ற இவ் அமர்வில் நகரசபை செயலாளர் குணபாலசிங்கம் ராஜ்குமார் உள்ளிட்ட சபைக்கு தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்கள் பங்கேற்றிருந்தனர்.

சென்ற கூட்ட அறிக்கை ஆராயப்பட்ட போது கடந்த அமர்வில் தமிழரசு கட்சி உறுப்பினர் ஒருவரால் கொண்டுவரப்பட்ட பிரேரணையில் “குறுக்குவழியில்” என்ற சொற்பிரயோகம் பயன்படுத்தப்பட்டமை தொடர்பில் கடும் வாதப்பிரதி வாதங்கள் இடம்பெற்றிருந்தன. குறித்த சொற்பிரயோகம் தொடர்பில் சம்பந்தப்பட்ட உறுப்பினர் விளக்கமளிக்க வேண்டும் தமிழ்த் தேசிய பேரவை உறுப்பினர் வலியுறுத்திய போது தமிழரசு கட்சி மற்றும் தேசிய மக்கள் சக்தி உறுப்பினர்கள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டிருந்தனர். இதனால் சபை நடவடிக்கையினை இரண்டு நிமிடங்கள் ஒத்திவைத்து பதில் நகரபிதா வெளியேறியிருந்தார்.

பின்னர் மீளவும் சபை நடவடிக்கை ஆரம்பித்த போதும் அமளி தணியாத நிலையில் கடந்த சபை அமர்வின் போது குறித்த உறுப்பினரது குரல் பதிவு ஒலிபரப்பப்பட்டு விடயம் தெளிவுபடுத்தப்பட்டது. இது குறித்த வாதப்பிரதிவாதங்கள் காரணமாக சுமார் 45 நிமிட நேரம் சபையில் கடும் குழப்பம் நிலவியிருந்தது.

இதையடுத்து சபை நடவடிக்கை சுமூகமான நிலையில் முன்னெடுக்கப்பட்டு நிதிக்குழு அறிக்கை ஆராயப்பட்டு சபையின் அனுமதிக்கு சமர்ப்பிக்க வேண்டிய விடயங்கள் முன்வைக்கப்பட்டு கலந்துரையாடப்பட்டிருந்தது.

அண்மையில் உடல்நலக் குறைவு காரணமாக காலமான நகரபிதா எம்.கே. சிவாஜிலிங்கம் அவர்கள் சிறுநீரக மாற்று சத்திரசிகிச்சைக்கா மூன்று மாத சுகயீன விடுப்பு கோரியிருந்தார். இதன்காரணமாக உப நகரபிதா நா.பத்மநாதன் பதில் நகரபிதாவாக கடமைகளை பொறுப்பேற்று செயற்பட்டு வருகின்றார். மருத்துவ விடுப்பு கோரிக்கை காலம் கடந்தும் நகரபிதா விடயத்தில் தெளிவான தகவல்கள் இல்லாத நிலையில் அது தொடர்பில் ஆராய்ந்து உரிய நடவடிக்கையினை மேற்கொள்ள ஆளுநரை கோரும் பிரேரணை ஒன்று தமிழரசு கட்சி உறுப்பினரால் கடந்த சபை அமர்வில் கொண்டுவரப்பட்டு நிறைவேற்றப்பட்டிருந்தது. இதன்போது பதில் நகரபிதாவாக உப நகரபிதா கடமைகளை ஆற்றுவதற்கான சட்ட ஏற்பாடுகளின் ஊடாக குறுக்குவழியில் பதவியை தொடர்வதாக தமிழரசு கட்சி உறுப்பினர் குறிப்பிட்டிருந்தமையே மேற்படி குழப்பத்திற்கு காரணமாக அமைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.