மலையக கட்சிகள் அறிக்கை விடுவதோடு நின்று விடக் கூடாது

அறிக்கை விடுவதோடு நின்று விடக் கூடாது

சமகாலத்தில் அரசாங்கத்திற்கு எதிரான போராட்டங்கள் வலுப்பெற்று வருகின்ற நிலையில் மலையக கட்சிகள்  அறிக்கை விடுவதோடு நின்று விடக் கூடாது. போராட்டங்களுக்கு தலைமை தாங்கி மக்களை வழிநடத்த வேண்டும்.

அத்தோடு  இப்போராட்டங்களில் கலந்து கொள்ளும் மலையக மக்கள் தமது அடையாளங்களை வெளிப்படுத்தும் வகையில் போராட்டங்களில் பங்கேற்க வேண்டும் என்று பேராதனைப் பல்கலைக்கழக பொருளியற்றுறை சிரேஷ்ட விரிவுரையாளர் பேராசிரியர் எஸ்.விஜயச்சந்திரன் தெரிவித்தார்.

அவர் இது குறித்து மேலும் கருத்து தெரிவிக்கையில்,

இன்று நாட்டில் நிலவும் மிகமோசமான பொருளாதார நெருக்கடியானது, மக்களை வீதியில் இறங்கி போராட வைத்திருக்கின்றது. ஜனநாயத்தின் மீது நம்பிக்கை வைத்து இளைஞர்கள் போராட முன்வந்திருப்பது முக்கியத்துவம் மிக்க ஒரு விடயமேயாகும். இளைஞர்களை அடிப்படையாகக் கொண்டு ஜே.வி.பி. இரண்டு ஆயுதப் போராட்டங்களில் ஈடுபட்டிருந்தது. 1970, 1989 களில் இத்தகைய போராட்டங்கள் இடம் பெற்றமையும் தெரிந்ததாகும். வடக்கு கிழக்கு இளைஞர்கள் பங்கேற்ற ஆயுதப் போராட்டங்களும் நடந்தேறியுள்ளன. இந்த நிலையில் இன, மத, மொழி பேதமின்றி சமகாலப் போராட்டத்தில் இளைஞர்கள் பங்கு கொண்டு வருகின்றமை ஒரு முன்மாதிரியான செயற்பாடேயாகும் என்பதனை மறுப்பதற்கில்லை. இளைஞர் விழிப்புணர்வு வரவேற்கத்தக்கதாகும்.

மலையக மக்களைப் பொறுத்தவரையில் அவர்கள் இந்தப் போராட்டத்தின் அங்கமாக செயற்பட வேண்டிய ஒரு தேவை காணப்படுகின்றது. மலையக மக்கள் இந்நாட்டில் அதிகமாகவே ஏமாற்றப்பட்டுள்ளார்கள். 1000 ரூபா  சம்பள உயர்வை பெற்றுக் கொடுப்பது தொடர்பில் அரசாங்கம் பொறுப்பற்ற முறையில் செயற்படுகின்றது. மானிய முறையில் கோதுமை மா வழங்குவதாக கூறிய அரசாங்கம், இதிலும் ஏமாற்று வித்தையையே மேற்கொண்டது. மலையக மக்கள் இன்றைய  அரசாங்கத்திற்கு வாக்களிக்கவில்லை என்பதை காரணங்காட்டி மலையக பகுதிக்கான அபிவிருத்தி திட்டங்கள் இடைநிறுத்தப்பட்டுள்ளன. மலையக மக்கள் இந்நாட்டில் தனித்துவமான ஒரு சமூகமாக வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில் ஏனைய சமூகங்கள் அனுபவிக்கும் சகல உரிமைகளையும் இம்மக்கள் பெற்றுக் கொள்ள வழியேற்படுத்திக் கொடுத்தல் வேண்டும்.

இலங்கையின் இன்றைய போராட்டம் ஒரு வர்க்க ரீதியான போராட்டமாக உருமாற்றம் பெற்றுள்ளது. தொழிலாளர்கள் என்ற ரீதியில் இப்போராட்டம் மிகவும் முக்கியத்துவம் மிக்கதாகும் என்பதையும் கூறியாதல் வேண்டும். இந்நிலையில் போராட்டங்களில் கலந்து கொள்ளும் மலையக மக்கள் தமது அடையாளங்களை வெளிப்படுத்தும் வகையில் போராட்டங்களில் பங்கேற்க வேண்டும்.

தற்போது முன்னெடுக்கப்படும் போராட்டங்களில் மலையக மக்களும் ஒரு அங்கம் என்பதனை பிறர் புரிந்துகொள்ள இது உந்துசக்தியாகும். அத்தோடு போராட்டத்தின் மூலம் உரிய நன்மைகளைப் பெற்றுக் கொள்ளவும் இது வாய்ப்பளிக்குமெனலாம். இதேவேளை மலையக கட்சிகள் அறிக்கை விடுவதோடு நின்றுவிடாது, போராட்டங்களுக்கு தலைமை தாங்கி மக்களை வழிநடத்த வேண்டும்.

மேலும் அரசியல்வாதிகள் அடுத்து வரும் தேர்தலை மையப்படுத்தி காய் நகர்த்தல்களை மேற்கொள்வது பொருத்தமற்றதாகும். மக்கள் இப்போது அரசாங்கத்தின் மீது அதிருப்தியாக இருப்பதனால் மக்களுக்கு உரிய சேவையாற்றாது அடுத்த தேர்தலில்  இலகுவாக தாம் வென்று விடலாம் என்ற நோக்கில் மலையக அரசியல்வாதிகள் உள்ளிட்ட எவரும் செயற்படுதல் கூடாது. எதிர்கட்சியில் இருப்பவர்கள் சமூகத்திற்கு தேவையான சரியான அரசியலை முன்னெடுப்பார்களா? என்று சிந்தித்து மக்கள் வாக்களிக்க வேண்டும்.

மலையக சமூகத்தின் பலதரப்பட்ட பிரச்சினைகளும் ஒன்றிணைக்கப்பட்டு இதற்கு போராட்டத்தின் ஊடாக தீர்வினைப் பெற்றுக் கொள்ளும் நோக்கில் காய் நகர்த்தல்கள் இடம்பெறுதல் வேண்டும். என்றார்.

Tamil News