இந்தியாவில் தஞ்சமடைந்த இலங்கை அகதிகளை மீள அழைக்கும் அரசின் திட்டத்தை வரவேற்ற ஐ.நா!

இந்தியாவில் தஞ்சமடைந்த இலங்கை அகதிகள் தாமாக முன்வந்து மீண்டும் தாயகம் திரும்புவதை எளிதாக்கும் வகையில் குடியுரிமை நடைமுறைகளை இலங்கை அரசு தளர்த்தியுள்ளதை ஐக்கிய நாடுகள் சபை வரவேற்றுள்ளது.

1983 ஆம் ஆண்டில் ஏற்பட்ட இனக்கலவரம் மற்றும் அதைத் தொடர்ந்து நடைபெற்ற உள்நாட்டுப் போர் காரணமாக, ஆயிரக்கணக்கான இலங்கைத் தமிழர்கள் இந்தியாவில் குறிப்பாகத் தமிழ்நாட்டில் அகதிகளாக தஞ்சமடைந்தனர்.

இதனையடுத்து, 2002 ஆம் ஆண்டு முதல் 2022 ஆம் ஆண்டு வரையான காலப் பகுதியில் சுமார் 18 ஆயிரம் பேர் தாயகம் திரும்பிய போதிலும், 90 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தொடர்ந்தும் இந்தியாவில் வசித்து வருகின்றனர்.

இந்தநிலையில், போரின் போது முறையான கடவுச்சீட்டு அல்லது அனுமதி பெற்ற துறைமுகங்களைப் பயன்படுத்தாமல் இந்தியா சென்றவர்கள், தங்கள் இலங்கைச் சான்றை உறுதிப்படுத்தினால், தடையின்றி தாயகம் திரும்ப அனுமதிக்கப்படுவர் என்று இலங்கை அமைச்சரவை முடிவெடுத்துள்ளது.

இந்த முடிவை வரவேற்றுள்ள இலங்கைகான ஐக்கிய நாடுகளின் வதிவிடப்பிரதிநிதி மார்க்-ஆண்ட்ரே பிராஞ்ச் (Marc andrew french), அகதிகள் பாதுகாப்பாகவும் கண்ணியமாகவும் தாயகம் திரும்புவதற்கும், அவர்களின் மறுவாழ்வுக்கும் தேவையான உதவிகளைத் தொடர்ந்து வழங்கவுள்ளதாக உறுதியளித்துள்ளார்.