இலங்கையில் அதிகரித்துவரும் பெண்களுக்கு எதிரான ஒடுக்குமுறை: ஐ.நா கவலை

இலங்கையில் அதிகரித்துவரும் பாலியல் வன்முறைகள் மற்றும் பாலின அடிப்படையிலான ஏனைய ஒடுக்குமுறைகள் தீவிர கரிசனையைத் தோற்றுவித்திருப்பதாக சுட்டிக்காட்டியிருக்கும் பெண்களுக்கு எதிரான ஒடுக்குமுறைகளை முடிவுக்குக்கொண்டுவருவதற்கான ஐக்கிய நாடுகள் குழு, நாட்டில் இயங்கிவரும் பெண்கள் அமைப்புக்கள் மற்றும் பெண் மனித உரிமைகள் செயற்பாட்டாளர்கள் உள்ளடங்கலாக அரச சார்பற்ற அமைப்புக்களுக்கு எதிராக அதிகரித்துவரும் மட்டுப்பாடுகள் குறித்தும் கவலை வெளியிட்டுள்ளது.

பெண்களுக்கு எதிரான ஒடுக்குமுறைகளை முடிவுக்குக்கொண்டுவருவதற்கான ஐக்கிய நாடுகள் குழுவினால் இலங்கையின் சமகால நிலைவரம் தொடர்பான 9 ஆவது காலாந்தர மீளாய்வு கடந்த 13 ஆம் திகதி முன்னெடுக்கப்பட்டது.

அம்மீளாய்வின்போது கண்டறியப்பட்ட விடயங்களை உள்ளடக்கிய 20 பக்க அறிக்கை பெண்களுக்கு எதிரான ஒடுக்குமுறைகளை முடிவுக்குக்கொண்டுவருவதற்கான ஐக்கிய நாடுகள் குழுவினால் நேற்று திங்கட்கிழமை (24) வெளியிடப்பட்டுள்ளது.

அவ்வறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ள முக்கிய விடயங்கள் வருமாறு:

இலங்கை அரசாங்கத்தினால் 37 ஆம் இலக்க பெண்கள் வலுவூட்டல் சட்டம் மற்றும் பாலியல் இலஞ்சத்தை குற்றமாக வரையறுத்திருக்கும் 9 ஆம் இலக்க ஊழல் ஒழிப்பு சட்டம் என்பன கொண்டுவரப்பட்டமை வரவேற்கத்தக்க அடைவுகளாகும்.

இருப்பினும் அதிகரித்துவரும் பாலியல் வன்முறைகள் மற்றும் பாலின அடிப்படையிலான ஏனைய ஒடுக்குமுறைகள் தீவிர கரிசனையைத் தோற்றுவித்திருக்கின்றன.

அநேக சந்தர்ப்பங்களில் ஐந்துக்கு ஒன்று என்ற விகிதாசாரத்தில் பெண்கள் அவர்களது நெருங்கிய துணைவரினால் பாலியல் ரீதியான துன்புறுத்தல்களுக்கு உள்ளாக்கப்படுகின்றனர். அத்தோடு திருமணத்தின் பின்னரான வன்புணர்வு மற்றும் நெருங்கிய துணைவரால் நிகழ்த்தப்படும் வன்முறைகள் என்பன குற்றமாக்கப்படாமையும் மிகுந்த கரிசனைக்குரிய விடயமாகும்.

இந்நிலையில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறைகள் உள்ளடங்கலாக சகலவிதமான குற்றங்கள் தொடர்பிலும் பொதுமக்கள் மத்தியில் போதிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கு அவசியமான நடவடிக்கைகளை இலங்கை அரசாங்கம் முன்னெடுக்கவேண்டும்.

அத்தோடு பெண்களுக்கு எதிரான பாலின அடிப்படையிலான வன்முறைச் சம்பவங்கள் தொடர்பில் செயற்திறன்மிக்க விதத்தில் விசாரணைகளை முன்னெடுக்கக்கூடியவாறு சட்ட அமுலாக்கம் மற்றும் நீதிக்கட்டமைப்பின் இயலுமையை வலுப்படுத்தவேண்டும்.

அதேவேளை நாட்டில் இயங்கிவரும் பெண்கள் அமைப்புக்கள் மற்றும் பெண் மனித உரிமைகள் செயற்பாட்டாளர்கள் உள்ளடங்கலாக அரச சார்பற்ற அமைப்புக்களுக்கு எதிராக அதிகரித்துவரும் மட்டுப்பாடுகள் தொடர்பில் மிகுந்த கவலையடைகின்றோம்.

இந்நிலையில் குறிப்பாக உள்நாட்டு மோதல்களால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் இயங்கிவரும் பெண்ணுரிமை அமைப்புக்களுக்கான நிதியளித்தல் மீது விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் மற்றும் தடைகளை நீக்குவதற்கும் அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவேண்டும்.

மேலும் அரச சார்பற்ற அமைப்புக்களைக் கட்டாயமாகப் பதிவுசெய்தல் தொடர்பான வழிகாட்டல் மற்றும் அதற்கு பாதுகாப்பு அமைச்சின் அனுமதியைக் கோரல் என்பவற்றை அரசாங்கம் முடிவுறுத்தவேண்டும் என அக்காலாந்தர மீளாய்வு அறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.