உக்ரைனின் எதிர்காலம் இனி நேட்டோவில்தான் உள்ளது-நேட்டோ மாநாட்டில் கருத்து

உக்ரைனின் எதிர்காலம் இனி நேட்டோவில்தான் உள்ளது என்று அந்த அமைப்பின் உச்சி மாநாட்டில் பங்கேற்ற உலக நாடுகளின் தலைவர்கள் உறுதியளித்துள்ளனர்.

ஐரோப்பிய நாடான லிதுவேனியாவில் உள்ள வில்னியஸ் நகரில் நேட்டோ அமைப்பு நாடுகளின் உச்சி மாநாடு நடந்தது. இதில், உக்ரைன் விவகாரம் முக்கியத்துவம் பெற்றிருந்தது. இது தொடர்பாக வெளியிடப்பட்ட கூட்டறிக்கையில், “உக்ரைனின் எதிர்காலம் நேட்டோ அணிக்குள்தான் உள்ளது. அணியில் உள்ள நாடுகள் நிபந்தனைகளை ஒப்புக்கொண்டு, அது நிறைவேற்றப்படும்போது உக்ரைனை அணியில் சேருவதற்கான அழைப்பு விடுக்கப்படும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், எம்மாதிரியான நிபந்தனை என்று அறிக்கையில் குறிப்பிடப்படவில்லை.

மேலும் “நேட்டோ அமைப்பில் உள்ள நாடுகளின் பாதுகாப்புக்கு சீனா ஒரு சவாலாக உள்ளது. ரஷ்யாவும், சீனாவும் சர்வதே ஒழுங்கை குறைக்கும் முயற்சிகளில் ஈடுபடுகின்றன. உக்ரைனில் அமைதியை விரும்புவதாக சீனா கூறியுள்ளது. ஆனால், பிப்ரவரி 2022-இல் தொடங்கிய ரஷ்யாவின் படையெடுப்பை சீனா இதுவரை கண்டிக்கவில்லை.

எங்கள் அணியில் புதிய உறுப்பினராக இணைந்துள்ள பின்லாந்தை நாங்கள் வரவேற்கிறோம். இது பின்லாந்துக்கும், நேட்டோவுக்கும் ஒரு வரலாற்று நிகழ்வாகும். பல ஆண்டுகளாக, நாம் நட்பு நாடுகளாக நெருக்கமாக பணியாற்றினோம். ஆனால், இப்போது நெருங்கிய நட்பு நாடாக மாறி இருக்கிறோம். இந்த இணைவு பின்லாந்தை பாதுகாப்பானதாகவும், நேட்டோவை வலுவானதாகவும் மாற்றி இருக்கிறது.

உக்ரைன் மீது நியாயமற்ற சட்ட விரோத நடவடிக்கையில் ஈடுபட்டதற்கு ரஷ்யா முழுப் பொறுப்பேற்க வேண்டும். ரஷ்யா சர்வதேச வீதிகளை மீறுவதை கடுமையாக கண்டிக்கிறோம்” என்று அந்த கூட்டறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.