எதிர்வரும் மாதம் அமெரிக்காவில் இடம்பெறவுள்ள இடைக்கால தேர்தலில் தற்போதைய பைடன் தலைமையிலான ஜனநாயகக் கட்சி தோல்வியடைந்தால் உக்ரைன் போருக்கு அமெரிக்கா வழங்கும் ஆயுத உதவிகள் நிறுத்தப்படலாம் என உக்ரைன் அச்சமடைந்துள்ளது.
அடுத்த தவணைக்கான அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்களை தயார் செய்வதற்காக இடைக்கால தேர்தல் எதிர்வரும் மாதம் 8 ஆம் நாள் இடம்பெறவுள்ளது.
எதிர்வரும் தேர்தலில் உள்ளூர் விவகாரங்களான பொருளாதார நெருக்கடி, கருக்கலைப்பு, குடிவரவு தொடர்பான பிரச்சனைகளும், எதிர்வரும் இரண்டு வருடங்களுக்கான வெளிவிவகாரக் கொள்கை ஆகியவை முக்கிய விவாதக் கருத்துக்களாக உள்ளன. அதிலும் குறிப்பாக உக்ரைன் மற்றும் சீனா தொடர்பான அமெரிக்காவின் நிலைப்பாடு முக்கிய இடத்தைப் பெறும் என தெரிவிக்கப்படுகின்றது.
குடியரசுக் கட்சியினரில் பலர் உக்ரைனுக்கான நிதி மற்றும் ஆயுத உதவிகள் தொடர்பில் எதிர் வாதங்களை கொண்டுள்ளனர். எனவே அவர்கள் இந்த தேர்தலில் வெற்றி பெற்றால் அது பைடனின் அடுத்த இரண்டு வருடகால நடைவடிக்கைகளில் பாதிப்பை ஏற்படுத்தும் என அமெரிக்க விவகாரங்களுக்கான சாதாம் ஹவுஸின் தலைவர் லெஸ்லி வின்ஸ்மூரி தெரிவித்துள்ளார்.
குடியரசுக்கட்சியின் வெற்றி என்பது முன்னாள் அரச தலைவர் டொனால்ட் டிறம்பின் செல்வாக்கை அதிகரிக்கும். அவர் எதிர்வரும் அரச தலைவர் போட்டியில் போட்டியிடவுள்ளார். உக்கிரைனுக்கான 40 பில்லியன் டொலர்கள் உதவி தொடர்பில் கடந்த மே மாதம் இடம்பெற்ற வாக்கெடுப்பில் குடியரசுக்கட்சியை சேர்ந்த 57 பேர் எதிராக வாக்களித்திருந்தனர்.