தாம் கைது செய்யப்படுவதை தடுக்குமாறு உதய கம்மன்பில தாய்லாந்தில் இருந்து மனுதாக்கல்…

தற்போது தாய்லாந்தில் இருக்கும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில, தாம் குற்றப்புலனாய்வு திணைக்களத்தினால் கைது செய்யப்படுவதைத் தடுக்க உத்தரவிடக் கோரி தமது சட்டத்தரணி மூலம் மேன்முறையீட்டு நீதிமன்றில் ரிட் மனுவொன்றை தாக்கல் செய்துள்ளார்.

முன்னாள் கடற்படைத் தளபதி அட்மிரல் நிஷாந்த உலுகேதென்ன கைது செய்யப்பட்டமை தொடர்பாக பத்திரிகையொன்றுக்கு அவர் கருத்து வெளியிட்டிருந்தார். தமது கருத்துக்கள் 2007ஆம் ஆண்டின் 56ஆம் இலக்க சர்வதேச சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் உடன்படிக்கை சட்டத்தின் பிரிவு 3(1) மற்றும் தண்டனைச் சட்டக் கோவையின் பிரிவு 120 இன் கீழ் குற்றமாகுமா? என்பதைத் தீர்மானிக்க விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக குற்றப் புலனாய்வு திணைக்களம் கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்துக்கு கடந்த ஓகஸ்ட் 27ஆம் திகதி தெரிவித்தமையை ஊடகங்கள் மூலம் அறிந்துகொண்டதாக மனுதாரர் கூறுகிறார்.

விசாரணையின்றி தன்னைத் தடுத்து வைக்க சட்டம் தவறாகப் பயன்படுத்தப்படுவதாக அவர் கூறியுள்ளார்.
தமது கருத்துக்கள் எந்தவொரு இனக்குழுவையும் இலக்கு வைக்கவில்லை என்றும் விடுதலைப் புலிகளை குறிவைத்து தெரிவிக்கப்பட்டது என்றும் உதய கம்மன்பில குறிப்பிட்டுள்ளார். அத்துடன், தமது கருத்துக்கள் தொடர்பான குற்றப்புலனாய்வு திணைக்கள விசாரணைகள் அரசியல் பழிவாங்கலுக்கு சமமானது என்று முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில குற்றம் சாட்டியுள்ளார்.