முல்லைத்தீவு-பாரதி சிறுவர் இல்ல சிறுமிகள் இருவர் தற்கொலை முயற்சி – சிறுமிகள் தப்பிச்சென்றுள்ளதாகவும் தகவல்

465 Views

சிறுமிகள் இருவர் தற்கொலை முயற்சி

பாரதி சிறுவர் இல்ல சிறுமிகள் இருவர் தற்கொலை முயற்சி

முல்லைத்தீவு மாவட்டம் முள்ளியவளை பகுதியில் இயங்கிவரும் பாரதி சிறுவர் இல்லத்தை சேர்ந்த சிறுமிகள் இருவர் அலரி விதை உட்கொண்டு தற்கொலைக்கு முயற்சித்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

முள்ளியவளையில் அமைந்துள்ள பாரதி சிறுவர் இல்லத்தில் ஆதரவற்ற சிறுமிகள் பராமரிக்கப்பட்டு வரும் நிலையில் அங்கிருந்த 13 மற்றும் 14 வயதுடைய சிறுமிகள் இருவரே அலரி விதை உட்கொண்டதை அடுத்து ஆபத்தான நிலையில் முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையில் நேற்று (14) சிகிச்சைககாக அனுமதிக்கப்பட்டிருந்தனர்.

குறித்த இரு சிறுமிகளும் தற்கொலைக்கு முயன்ற சம்பவத்தை அடுத்து, ஆதரவற்ற சிறுவர்களை வைத்து பாராமரித்து கல்வி புகட்டுகின்ற பெயரில் இயங்கிவரும் பாரதி சிறுவர் இல்லம் தொடர்பில் பெரும் கேள்வி எழுந்துள்ளது.

இதுதொடர்பில் மேலும் தகவல்களை அறிய முற்படுகையில், பாரதி சிறுவர் இல்லத்தில் இருந்து முல்லைத்தீவு, முள்ளியவளை கலைமகள் வித்தியாலயத்தில் கல்வி கற்றுவரும் இரு மாணவிகளே இவ்வாறு அலரிவிதை உட்கொண்டு தற்கொலைக்கு முயன்றுள்ளனர்.

முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் குறித்த சிறுமிகளிடம் முள்ளியவளை காவல்துறையினர் விசாரணை நடத்தியுள்ளனர். சிறுவர் இல்லத்தில் வசிக்கக்கூடிய நிலைமையில்லையென சிறுமிகள் தெரிவித்ததாக கூறப்படுகிறது. அத்துடன் இல்ல நிர்வாகத்தினர் தம்மை  திட்டுவதாகவும், இதை பொறுக்க முடியாமலேயே அவர்கள் அலரி விதை உட்கொண்டதாகவும் காவல்துறையினர் கூறியுள்ளனர்.

பாரதி சிறுவர் இல்லத்தில் கடமையாற்றும் பணியாளர்கள் மற்றும் நிர்வாகிகளால் துஸ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்படும் சம்பவங்கள் இடம்பெற்று வந்துள்ளதாகவும், அவ்வாறன துஸ்பிரயோகத்திற்கு உள்ளானதில் பாதிக்கப்பட்ட நிலையிலேயே குறித்த இரு சிறுமிகளும்  அலரி விதை உட்கொண்டு தற்கொலைக்கு முற்பட்டுள்ளதாகவும் அறிய முடிகிறது. இந்த பின்னணியிலேயே முன்னதாக சிறுமிகள் ஐவர் சிறுவர் இல்லத்தை விட்டு தப்பியோடியுள்ளதாகவும் தற்போது செய்திகள் வெளிவந்துள்ளன. இதனையடுத்து முள்ளியவளை  காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

இதேநேரம் இன்று (15) இடம்பெற்ற முல்லைத்தீவு மாவட்ட சிறுவர் அபிவிருத்திக் குழு கூட்டத்தில் இவ்விடயம் முக்கியமாக கலந்துரையாடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதன்போது முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையின் சட்ட வைத்திய நிபுணர் வைத்தியர் கே.வாசுதேவ குறித்த சம்பவத்தின் பின்புலங்கள் தொடர்பாக விளக்கமளித்திருந்தார். துறை சார் உத்தியோகத்தர்களின் செயற்பாடுகள் தொடர்பாகவும் ஆராயப்பட்டதைத் தொடர்ந்து இந்த வாரத்திற்குள் அனைவரையும் ஒன்றிணைத்து கலந்துரையாடலொன்றை மேற்கொள்வதாகவும் தீர்மானிக்கப் பட்டுள்ளது.

பாரதி சிறுவர் இல்லம் கே.பி. என அழைக்கப்படும் குமரன் பத்மநாதன் தலைமையில் இயங்கிவருகின்றது. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுடன் நெருங்கிய தொடர்பை கொண்ட நபராகவும் சிறிலங்கா இராணுவ புலனனாய்வாளர்கள் சகிதம் வலம் வருவதாலும் துறைசார்ந்த அதிகாரிகள் அங்கு சென்று கடமையாற்றுவதில்லை எனவும் குற்றம்சாட்டப்படுகிறது. இதன் காரணமாகவே சிறுமிகள் தற்கொலைக்கு முயற்சித்தமையும் தப்பியோடிய நிகழ்வும் இடம்பெற்றுள்ளதாக சமூக ஆர்வலர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

இனிமேலாவது அரச அதிகாரிகள் உரிய கண்காணிப்பினை மேற்கொண்டு அங்குள்ள ஏனைய சிறுமிகளின் பாதுகாப்பினை உறுதிப்படுத்த வேண்டும் எனவும் சமூக ஆர்வல்ரகள் மற்றும் பிரதேச மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Tamil News

Leave a Reply