துருக்கியில் ஒரு மாதத்தில் 9 ஆயிரத்துக்கும் அதிகமான ஆவணங்களற்ற குடியேறிகள் கைது 

துருக்கிக்குள் நுழைய முயன்ற 9,200 க்கும் மேற்பட்ட சட்டவிரோத குடியேறிகள் கைது செய்யப்பட்டுள்ளனர் என துருக்கி உள்துறை அமைச்சகத்தின் புலம்பெயர்வு மேலாண்மை இயக்குநரகம் தெரிவித்துள்ளது. 

“சட்டவிரோத புலம்பெயர்வுக்கு எதிரான துருக்கியின் நடவடிக்கை தொடரும். கடந்த ஜனவரி 1 முதல் 31 வரை மொத்தம் 9,284 குடியேறிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்,” என புலம்பெயர்வு இயக்குநரகம் குறிப்பிட்டுள்ளது. அதே சமயம் இக்காலக்கட்டத்தில், 10,520க்கும் அதிகமான குடியேறிகள் நாடுகடத்தப்பட்டிருக்கின்றனர்.

போர் மற்றும் அச்சுறுத்தல் காரணமாக சொந்த நாடுகளில் இருந்து வெளியேறி ஐரோப்பியாவில் தஞ்சமடைய முயலும் ஆயிரக்கணக்கான மக்களின் முக்கிய இணைப்புப் புள்ளியாக துருக்கி இருந்து வருகிறது. அந்த வகையில், துருக்கியில் நாள்தோறும் பல குடியேறிகள் தஞ்சமடைந்து வருகின்றனர்.

கடந்த 2016ம் ஆண்டு முதல் இதுவரை இவ்வாறு தஞ்சமடைந்த 4 இலட்சத்துக்கும் அதிகமான குடியேறிகள் நாடுகடத்தப்பட்டிருக்கின்றனர். ஐரோப்பியாவிலிருந்து இவ்வாறான குடியேறிகள் நாடுகடத்தப்படும் சதவீதம் 11 ஆக இருந்து வரும் நிலையில், துருக்கியின் நாடுகடத்தல் சதவீதம் 70 ஆக உள்ளது.

குறிப்பாக, கடந்த ஆண்டு மட்டும் 66,534 ஆப்கானியர்கள் நாடுகடத்தப்பட்டிருக்கின்றனர். அதே போல், பாகிஸ்தானைச் சேர்ந்த 12,385 பேர் நாடுகடத்தப்பட்டுள்ளனர்.