ட்ரம்ப் நோபல் பரிசுக்கு தகுதியானவர். ஜப்பான் பிரதமர் ஆதரவு குரல்…

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்புக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்க ஜப்பானின் புதிய பிரதமர் சனே தகைச்சி ஆதரவு தெரிவித்துள்ளார்.

ஆசியாவிற்கான பயணத்தை மேற்கொண்டு வரும் ட்ரம்ப், மலேசியாவில் நடைபெற்ற ஆசியான் உச்சி மாநாட்டில் கலந்து கொண்டார். அங்கு, தாய்லாந்துக்கும் கம்போடியாவுக்கும் இடையே சமாதான ஒப்பந்தம் ஏற்பட அவர் மத்தியஸ்தம் வகித்தார். இதையடுத்து, இரு நாடுகளுக்குமிடையே ஒப்பந்தம் கைச்சாத்தானது.

இதனைத் தொடர்ந்து ஜப்பான் சென்ற ட்ரம்ப், அந்நாட்டின் புதிய பிரதமர் சனே தகைச்சியைச் சந்தித்து பேசசு நடத்தினார்.

இதன்போது டொனால்ட் ட்ரம்ப்புக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட வேண்டும் என்பதை ஜப்பான் ஆதரிப்பதாக சனே தகைச்சி கூறியதாக வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ள செய்திகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இது தொடர்பாக ஜப்பான் தனியாக அறிக்கை வெளியிடும் எனவும் எதிர்பார்க்கப்படுவதாகக் கூறப்படுகிறது.

ட்ரம்ப்புடனான சந்திப்பின்போது கருத்து வெளியிட்ட தகைச்சி, “தாய்லாந்துக்கும் கம்போடியாவுக்கும் இடையே போர் நிறுத்த ஒப்பந்தத்தை உறுதி செய்வதில் ட்ரம்ப் வெற்றி பெற்றுள்ளார். மேலும், மத்தியக் கிழக்கில் ஏற்பட்டுள்ள ஒப்பந்தம் ஒரு வரலாற்றுச் சாதனையாகும்” என தெரிவித்துள்ளார்.

ஜப்பான் பயணத்தைத் தொடர்ந்து ட்ரம்ப், தென் கொரியா செல்கிறார். அங்கு நடைபெற இருக்கும் ஆசியா – பசுபிக் பொருளாதார ஒத்துழைப்பு உச்சி மாநாட்டிலும் கலந்து கொள்ளும் அவர், உச்சி மாநாட்டி இடையே சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங்கை சந்தித்து பேச்சு நடத்தவுள்ளார்.

2025-ம் ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசு வெனிசுலா நாட்டில் ஜனநாயகம் மலர தொடர்ந்து போராடி வரும் அந்நாட்டின் எதிர்க்கட்சித் தலைவரான மரியா கொரினா மச்சாடோவுக்கு அறிவிக்கப்பட்டது. எனினும், அதற்கு முன்பு வரை அந்த விருதுக்காக ட்ரம்ப் தொடர்ந்து போராடினார்.

இந்தியா – பாகிஸ்தான் இடையேயான போர், தாய்லாந்து – கம்போடியா இடையிலான போர், இஸ்ரேல் – காசா இடையேயான போர் உட்பட 8 போர்களை தான் முடிவுக்குக் கொண்டு வந்ததாக ட்ரம்ப் தொடர்ந்து கூறி வந்தார்.

ட்ரம்ப்புக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட வேண்டும் என இஸ்ரேல், பாகிஸ்தான், கம்போடியா, தாய்லாந்து போன்ற நாடுகளின் தலைவர்கள் வெளிப்படையாக தெரிவித்தனர். இவர்களின் வரிசையில் ஜப்பான் பிரதமரும் இணைந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.