ஈரான் கப்பல் மூழ்கியதற்கு நீர்மூழ்கி தாக்குதல் காரணமா? : இலங்கை கடற்படை மறுப்பு

ஈரான் கப்பல் மூழ்கியதற்கு நீர்மூழ்கி தாக்குதல் தான் காரணம் என்கிற செய்தியை தாங்கள் முற்றிலும் மறுப்பதாக இலங்கை கடற்படையின் செய்தித் தொடர்பாளர் புத்திகா சம்பத் தெரிவித்துள்ளார்.

“சர்வதேச கடலில் பாதுகாப்பாக இருப்பதாக கருதப்பட்ட ஈரானிய போர்க்கப்பல் ஒன்றை இந்திய பெருங்கடலில் அமெரிக்கா மூழ்கடித்ததாக” அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் பீட் ஹெக்சேத்   தெரிவித்திருந்தார், “அக்கப்பல் நீர்மூழ்கிக் குண்டால் மூழ்கடிக்கப்பட்டது” என்றும் அவர் கூறியிருந்தார். ஆனாலும், தாக்குதலுக்கு உள்ளான ஈரானிய கப்பலின் பெயரை அவர் குறிப்பிடவில்லை.

இந்த நிலையில், இன்று செய்தியாளர் சந்திப்பின்போது வெளிநாட்டு ஊடகங்களை மேற்கோள்காட்டி, ஈரானிய கப்பல் நீர்முழ்கி தாக்குதலுக்கு உள்ளானதாக கடற்படை தெரிவித்துள்ளதா? என்கிற கேள்வி புத்திகா சம்பத்திடம் முன்வைக்கப்பட்ட போது,  “கடற்படை தரப்பிலிருந்து இந்தக் கூற்றை முழுவதுமாக நிராகரிக்கிறோம்.” என்றார்.

”விபத்து நேர்ந்த விதம் தொடர்பில் பின்னரான காலத்தில் நடத்தப்படும் விசாரணைகளின் ஊடாகவே உறுதிப்படுத்த முடியும். விசேட நிபுணத்துவத்துடனான விசாரணை குழு, தொழில்நுட்ப விசாரணைகள் குழுவின் ஊடாக விசாரணைகள் நடத்தப்பட வேண்டும். அதற்காக அதிகாரம் உள்ள நிறுவனங்கள் தொடர்புப்பட வேண்டும். வெளிநாட்டு ஊடகங்கள் வெளியிட்ட தகவலை நிராகரிக்கின்றோம்.” என்று கூறியுள்ளார்.