இலங்கையில் தமிழ் மக்கள் தனித்துவமான தேசிய இனம். அனைத்து உரிமையும் அவர்களுக்கு உண்டு-சம்பந்தன்

248 Views

இலங்கையில் தமிழ் மக்கள் தனித்துவமான தேசிய இனம். மொழி,கலாசாரம், பண்பாடுகளைக்கொண்ட இனம் தங்களை தாங்களே ஆள்வதற்கான அனைத்து உரிமையும் அந்த இனத்திற்கு இருப்பதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவரும் முன்னாள் எதிர்க்கட்சி தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்தார்.

பல நாடுகளில் சமத்துவமான ஆட்சி முறைகள் பின்பற்றப்படுகின்றன.அதனையே நாங்கள் கேட்கின்றோம்.அதனை யாரும் மறுக்கமுடியும் என நாங்கள் நினைக்கவில்லையென அவர் மேலும் தெரிவித்தார்.

இலங்கை தமிரசுக்கட்சியின் பொதுச்செயலாளர் கி.துரைராஜசிங்கம் எழுதிய மூன்று நூல்களின் வெளியீட்டு நிகழ்வு இன்று மட்டக்களப்பில் நடைபெற்றது.மட்டக்களப்பு மாநகரசபை மண்டபத்தில் இயேசுசபை துறவி அருட்தந்தை ஜோசப்மேரி அடிகளார் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில்  தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவரும் முன்னாள் எதிர்க்கட்சி தலைவருமான இரா.சம்பந்தன் பிரதம அதிதியாக கலந்துகொண்டதுடன் சிறப்பு அதிதியாக மட்டக்களப்பு மாநகரசபை முதல்வர் தி.சரவணபவன் கலந்துகொண்டார்.

இந்த நிகழ்வில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள்,முன்னாள் மாகாணசபை உறுப்பினர்கள்,இலக்கிய ஆர்வலர்கள்,எழுத்தளர்கள் என பெருமளவானோர் கலந்துகொண்டனர்.IMG 8940 இலங்கையில் தமிழ் மக்கள் தனித்துவமான தேசிய இனம். அனைத்து உரிமையும் அவர்களுக்கு உண்டு-சம்பந்தன்

இதன்போது தொடர்ந்து கருத்து தெரிவித்த சம்பந்தர்,

எமது நாட்டில் 70வருடமாக தீர்க்கப்படாத பிரச்சினை இருக்கின்றது.ஒரு அரசியல் தீர்வு சம்பந்தமான பிரச்சினை என்பது மிக இலகுவான பிரச்சினையல்ல, மிகவும் கடினமான பிரச்சினையாகும்.

கால நேரத்தில் சந்தர்ப்பங்கள் கிடைக்கின்றபோது அவற்றை பயன்படுத்தி அவ்விதமான பிரச்சினைகள் தீர்க்கப்படவேண்டும். அவ்வாறு பிரச்சினைகள் தீர்க்கப்படாவிட்டால் அதன்மூலமாக மேலும் குழப்பங்கள் ஏற்பட்டு பிரச்சினைகள் சிக்கலாகி கடுமையான நிலையை அடையும். நாங்களே பல சந்தர்ப்பங்களை இழந்திருக்கின்றோம்.

பல்வேறு காரணங்களினால் அவற்றினை இழந்திருக்கின்றோம்.அதைப்பற்றி விவாதிப்பதிலோ பிரயோஜனமில்லை. இனிமேலும் அவ்வாறான தவறுகளை விடாமல் உரிய நேரத்தில் இதுதொடர்பாக தற்போது நாங்கள் நீண்டதூரம் பயணித்திருக்கின்றோம்.

பண்டா செல்வா ஒப்பந்தம், இலங்கை இந்திய ஒப்பந்தம்,13ஆவது அரசியல் திருத்தச் சட்டம், உட்பட பல ஒப்பந்தங்கள்செய்யப்பட்டன .அதன் பிறகு 30வருடகாலமாக ஜனாதிபதி பிரேமதாச அவர்களின் காலத்தில் ஜனாதிபதி சந்திரிகா அவர்களின் காலத்தில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச அவர்களின் காலத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களின் காலத்தில் ஒரு நியாயமான அரசியல் தீர்வை ஏற்படுத்துவதற்கு நாங்கள் முயற்சி செய்திருக்கின்றோம்.

பாராளுமன்றம் தெரிவு செய்யப்பட்டு புதிய பாராளுமன்றம் கூட்டப்படுகின்றபொழுது இந்தப் பிரச்சினை சம்பந்தமாக தீர்வு கண்டு தேசியப் பிரச்சினைக்கு தீர்வு காணப்படவேண்டும் என விஞ்ஞாபனத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் அந்தக் கருத்து வார்த்தையில் தான் இருக்கின்றது என்று நான் சொல்லமாட்டேன். அரசியல் சாசனம் திருத்தியமைக்கப்பட வேண்டும் என்று சொல்கின்றார்கள்,அதேசமயத்தில் அதனை மாற்றியமைத்து தற்போதுள்ள அதிகாரங்கள் குறைக்கப்பட்டு அது வேறுவிதமாக விவாதிக்கப்படும் என்று விஞ்ஞாபனத்தில் உள்ளது.IMG 8976 இலங்கையில் தமிழ் மக்கள் தனித்துவமான தேசிய இனம். அனைத்து உரிமையும் அவர்களுக்கு உண்டு-சம்பந்தன்

ஆனபடியால் புதிய பாராளுமன்றம் எவ்வாறு அமையப்போகின்றது என்பது எங்களுக்குத் தெரியாது. அதை எதிர்பார்த்து நாங்கள் எங்களை தயார்படுத்த வேண்டும். என்னைப்பொறுத்தவரையில் நாம் அநீதியாக எதையும் கேட்கவில்லை,எமது உரிமைகளையே நாம் கேட்கின்றோம். நாங்கள் ஒரு தனிப்பட்ட இனம்.மதம்,கலாசாரத்தினைக்கொண்ட ஒரு இனம்.விசேடமாக தமிழ் மக்கள் சொந்தக்கலாசாரம்,எங்களுக்கென கலாசாரம்,பண்பாடு,பாரம்பரியம்,மொழி,சமயம் போன்றவற்றை உள்ளடக்கிய ஒரு தேசிய இனமாவோம்.

அவ்விதமான இனத்திற்கு சுயநிர்ணய உரிமையின் அடிப்படையில் தன்னுடைய கருமங்களை தானே கண்காணித்துக்கொள்கின்ற தான் சரித்திர ரீதியாக வாழ்ந்துகொண்டிருக்கின்ற பிரதேசங்களில் பெரும்பான்மை இனமாக வாழ்ந்துவந்த வாழ்ந்துகொண்டிருக்கின்ற பிரதேசங்களில் சுதந்திரமாக வாழ்வதற்கான உரிமையுண்டு.

அந்த அடிப்படையில்தான் பல நாடுகளில் சமத்துவத்தின் அடிப்படையில் சமாந்தரமாக வாழ்கின்றோர் மத்தியில் ஆட்சி முறையே பல நாடுகளில் பின்பற்றப்படுகின்றது.இதைத்தான் நாங்கள் கேட்கின்றோம். அதை எங்களுக்கு மறுக்க முடியுமென நான் நினைக்கவில்லை.இன்று சர்வதேச ரீதியாக விஷேடமாக இந்தியாவும் சர்வதேச சமூகமும் இலங்கையில் வாழும் தமிழ் மக்களுடைய பிரச்சினை தீர்க்கப்பட வேண்டுமென்ற கருத்தை மிகவும் உறுதியாக முன்வைத்து வருகின்றார்கள்.

ஐக்கிய நாடுகளின் சர்வதேச மனித உரிமைகள் பிரகடனத்தின் அடிப்படையில் எங்களது சம்மதம் இல்லாமல் நாங்கள் ஆட்சிசெய்யப்படுகின்றோம்.1956ஆம் ஆ;ணடு தொடக்கம் இந்த நாட்டில் வாழும் தமிழ் மக்கள் ஆட்சிமுறையை மாற்றியமைக்கவேண்டும் என்று தமது ஜனநாயக முடிவுகள் மூலமாக தீர்ப்பளித்துள்ளனர்.அது அமுல்படுத்தப்படவில்லை.

ஐக்கிய நாடுகளின் சபையினால் நிறைவேற்றப்பட்ட மனித உரிமைகள்,அரசியல் உரிமைகள்,குடியுரிமைகள் தொடர்பான தீர்மானமும் பொருளாதார,கலாசார,சமவுரிமைகள் தீர்மானமும் இந்த நாட்டிலே மீறப்படுகின்றன.அவற்றின் அடிப்படையில் தமிழர்களுக்கு உள்ளக சுயநிர்ணயத்திற்கு உரித்துண்டு.

அதுநிறைவேற்றப்படவில்லை.இலங்கை அரசாங்கம் அந்த தீர்மானங்களை ஏற்றுக்கொண்டிருக்கின்றது. நிறைவேற்றவேண்டியது அவர்களின் கடமை.புதிய பாராளுமன்றத்தில் பல முக்கியமான விடயங்கள் தெளிவுபடுத்த வேண்டியுள்ளது.

இவற்றினை நிறைவேற்றுவதற்கு எங்களால் முடிந்த அனைத்து பணிகளையும்முன்னெடுப்போம்.அதில எவ்விதமான சந்தேகமும் கொள்ளத் தேவையில்லை.எமது மக்களின் உரிமைகளை பெற்றுக்கொள்வது எதை செய்யவேண்டுமோ அதனை நாங்கள் செய்வோம்.IMG 4929 இலங்கையில் தமிழ் மக்கள் தனித்துவமான தேசிய இனம். அனைத்து உரிமையும் அவர்களுக்கு உண்டு-சம்பந்தன்

கிழக்கு மாகாணத்தில் உள்ள தொல் பொருள் சம்பந்தமான ஒரு செயலணியை ஜனாதிபதி கோத்தபாய அவர்கள் உருவாக்கியிருக்கின்றார். கிழக்கு மாகாணத்தில் சரித்திர ரீதியாக தமிழ் பேசும் மக்கள் தமிழ் மக்கள் வாழ்ந்துகொண்டிருக்கின்றார்கள்.

1827ஆம் ஆண்டு புள்ளிவிபரத்தின் அடிப்படையில் கிழக்கு மாகாணத்தில் அரை வீதமே பெரும்பான்மையினத்தவர்கள் வாழ்ந்தார்கள்.1881ஆம் ஆண்டில் நான்கு வீதமாக இருந்தனர்.இந்த நாடு சுதந்திரமடைந்த 1949ஆம் ஆண்டு 09வீதமாக இருந்தனர்.இன்று 2020 ஆண்டு சுமார் 26வீதமாக காணப்படுகின்றனர்.

நாங்கள் யாருக்கும் எதிராக செயற்படவில்லை.சமயங்களின் பழைய அடையாளங்கள் இருக்குமானால் அவை பாதுகாக்கப்படவேண்டுமானால் அவற்றினை முறையாக மக்கள் மதிப்பளிக்கும் வகையில் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படவேண்டும்.மற்ற மதங்களை நாங்கள் மதிக்கின்றோம்.ஆனால் அதனை ஒரு சாட்டாக பயன்படுத்தி காணிகளை சுவீகரித்து பெரும்பான்மையை குடியேற்றுவதற்கான சதித்திட்டமாகயிருந்தால் அதனை நாங்கள் அனுமதிக்கமாட்டோம்.அதனை நாங்கள் எதிர்ப்போம்.

Leave a Reply