‘இலங்கையில் தொடரும் சித்திரவதைகளை விசாரிக்கும் நேரம் வந்துவிட்டது’ – ஐநாவுக்கு விக்னேஸ்வரன் அவசர கடிதம் –

213 Views

இலங்கையில் தொடரும் சித்திரவதைகளை விசாரிக்கும் நேரம்

முன்னாள் முதலமைச்சரும் நீதியரசருமான விக்னேஸ்வரன் “இலங்கையில் தொடரும் சித்திரவதைகளை விசாரிக்கும் நேரம் வந்துவிட்டது” என்று இன்று (10 செப்டெம்பர் 2021) ஐநா மனித உரிமை ஆணையருக்கு அனுப்பியுள்ள அவசர மேலதிக கடிதம் ஒன்றில், குறிப்பிட்டுள்ளதுடன், ‘இலங்கையில் பாதுகாப்பு படையினர் தொடர்ந்தும் தமிழர்களுக்கு எதிராக சித்திரவதையையும், பாலியல் வல்லுறவையும் பயன்படுத்தி வருவதற்கான ஆதாரங்கள் இருப்பதாகவும், ஐநா சித்திரவதைக்கு உள்ளானவர்களை சந்தித்து விசாரணைகளை மேற்கொள்ள வேண்டியதுடன், அவர்களை கெளரவிக்க வேண்டிய நேரம் வந்து விட்டது என்றும் கேட்டுக் கொண்டுள்ளார்.

“தொடரும் சித்திரவதை மற்றும் பாலியல் வன்முறை” என்று தலைப்பிடப்பட்டு எழுதப்பட்ட அந்த கடிதத்தின் சாராம்சம் வருமாறு,

“செப்ரெம்பர் 8, 2021 திகதியிடப்பட்ட எனது கடிதத்திற்கான இணைப்பு.

10.09.2021 – Letter to Hon’ Michele Bachelet (1)

8 செப்டம்பர் 2021 அன்று ஐநாவுக்கு அனுப்பப்பட்ட எனது கடிதம் அவசரமாக எழுதப்பட்டது என்பதால் எல்லா விடயங்களையும் குறிப்பிட முடியவில்லை. நேரம் குறைவாக இருந்தாலும், ஒரு முக்கியமான விஷயத்தை உங்கள் கவனத்திற்கு கொண்டு வர வேண்டும் என்பதற்காக இந்த மேலதிக கடிதத்தை எழுதுகிறேன். இது அவசரமாக தயாரிக்கப்பட்ட எனது முந்தய கடிதத்தில் தவறவிடப்பட்டதுக்கு வருந்துகிறேன்.

எனது முந்தைய கடிதத்தில் ஒரு இணைப்பாக இந்த பகுதியை சேர்க்கிறேன்.

இலங்கையில் காவல்துறை மற்றும் இராணுவம் தொடர்ந்து தமிழ் இளைஞர்களை சித்திரவதை செய்துவருவதற்கான அதிக ஆதாரங்கள் உள்ளன. தமிழ் ஊடகவியலாளர்கள் தாக்கப்பட்டு துன்புறுத்தப் படுகிறார்கள். சமீபத்திய நாட்களில் சமூக ஊடகங்களில் அவர்கள் தாக்கப்பட்டதையும் அவர்கள் காயங்களைத் தாங்கியதையும் புகைப்படங்கள் வெளிவந்துள்ளன.

நான் முன்பு கூறியது போல் ஐக்கிய இராச்சியத்தில் உள்ள சர்வதேச உண்மை மற்றும் நீதி திட்டம் (ITJP) சித்திரவதை செய்யப்பட்டவர்களை விசாரணை செய்து, ஆதாரங்களை ஆவணப்படுத்தி வருகிறது. அவர்களால் இன்று வெளியிடப்பட்ட அறிக்கையில் நடைபெற்றுவரும் சித்திரவதைகளின் கொடூரமான விவரங்கள் விபரிக்கப்பட்டுள்ளன.  இலங்கை பாதுகாப்பு படையின் தடுப்புக்காவலில் உள்ள இந்த இளைஞர்களுக்கே இந்த சித்திரவதைகள் நடக்கின்றன.

ஒவ்வொரு முறையும் இத்தகைய தகவலைப் பெறும் போது ஐநா செய்வதெல்லாம், சித்திரவதையை  பற்றி விசாரிக்கவோ அல்லது நடவடிக்கை எடுக்கவோ இல்லாமல், ஒவ்வொரு ஆண்டும் தமது அறிக்கையில் சுருக்கமாக குறிப்பிடுவதோடு மட்டும் நிறுத்தி விடுகிறார்கள் என்பதை நான் மிகவும் மரியாதையுடனும் வருந்தத்துடனும் சுட்டிக் காட்ட விரும்புகிறேன்.

இந்தப் பிரச்சினையை பற்றி OHCHR தைரியமாகப் பேசுவதற்கும் பாதிக்கப் பட்டவர்களைச் சந்தித்து அவர்களை, கௌரவிப் பதற்குமான நேரம் வந்து விட்டது” என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

ilakku-Weekly-Epaper-146-September-05-2021

Leave a Reply