இலங்கையை அண்மித்த பகுதிகளில் இடியுடன் கூடிய மழை தீவிரமடையலாம் – வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை

இலங்கையை அண்மித்த பகுதிகளில் வெப்பமண்டல இடையிணைவு வலயம் தீவிரமாகச் செயற்பட்டு வருவதன் காரணமாக இடிமின்னலுடன் கூடிய மழையின் தீவிரம் மேலும் அதிகரிக்கக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரித்துள்ளது.

எதிர்வரும் நாட்களிலும் இந்த மழைவீழ்ச்சி மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதுடன், எதிர்வரும் நவம்பர் 11 ஆம் திகதியளவில் இலங்கைக்கு தென்கிழக்கே உள்ள வங்காள விரிகுடா கடற்பரப்பை அண்டிய பகுதிகளில் தளம்பல் நிலை உருவாகக்கூடிய சாத்தியக்கூறுகள் தென்படுகின்றன. இதன்காரணமாக, வங்காள விரிகுடாவின் ஆழ்கடல் பகுதிகளில் மீன்பிடியில் ஈடுபடும் மீனவர்களும் கடற்படையினரும் காலநிலை தொடர்பான உத்தியோகபூர்வ அறிவிப்புகள் குறித்து மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறு கோரப்பட்டுள்ளனர்.

நாட்டின் வானிலை குறித்து திணைக்களம் மேலும் தெரிவிக்கையில்,

வடக்கு, கிழக்கு மாகாணங்களிலும் அம்பாந்தோட்டை மாவட்டத்திலும் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும் என்பதுடன், நாட்டின் ஏனைய பகுதிகளில் மாலை அல்லது இரவு வேளைகளில் பல இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். அத்துடன் வடக்கு, வடமத்திய, வடமேல், மேல், சப்ரகமுவ, மத்திய மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களின் சில பகுதிகளிலும் 100 மில்லிமீட்டருக்கும் அதிகமான கடும் மழை பெய்யக்கூடும் என்று எதிர்ப்பார்க்கப்டுகிறது. குறுகிய காலப்பகுதியில் பலத்த மழை, பலத்த காற்று மற்றும் கடுமையான மின்னல் தாக்கங்கள் ஏற்படக்கூடிய அபாயம் உள்ளதால் பொதுமக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

இதேவேளை, தொடரும் மழை காரணமாக நில்வளா, கின், களு மற்றும் களனி ஆகிய பிரதான ஆறுகளின் நீர்மட்டம் சடுதியாக அதிகரித்துள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது. நில்வளா கங்கையின் நீர்மட்டம் அதிகரிப்பால் மாத்தறை மற்றும் அக்குரஸ்ஸ கீழ் பகுதியின் தாழ்நிலப் பிரதேசங்கள் நீரில் மூழ்கும் சாத்தியம் காணப்படுகின்ற போதிலும், இது பாரிய வெள்ளமாக மாறுவதற்கான அறிகுறிகள் தென்படவில்லை. கின் கங்கையின் நீர்மட்டம் பத்தேகம பகுதியில் 3.60 மீட்டராகப் பதிவாகியுள்ளதுடன், களு கங்கையின் கிளை ஆறான குடா கங்கையின் நீர்மட்டம் அதிகரிப்பால் பாலிந்தநுவர, புலத்சிங்கள பகுதிகள் நீரில் மூழ்கும் அபாயம் உள்ளது. மேலும், களனி கங்கையின் நீர்மட்டமும் அதிகரித்துள்ளதால் தாழ்நிலப் பகுதி மக்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

கனமழை காரணமாகப் பதுளை, கொழும்பு, காலி, களுத்துறை, கண்டி, கேகாலை, மாத்தறை, மொனாராகலை, நுவரெலியா மற்றும் இரத்தினபுரி ஆகிய 10 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மண்மேடுகள் சரிந்து விழுதல், பாறைகள் உருளுதல் மற்றும் நிலவெடிப்புகள் போன்ற ஆபத்துகள் உள்ளதால் இப்பகுதி மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

மேலும், நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில், மன்னாரிலிருந்து புத்தளம், கொழும்பு மற்றும் காலி ஊடாக மாத்தறை வரையான கரையோரத்திற்கு அப்பாலான பகுதிகளில் பிற்பகல் வேளையில் இடிமின்னலுடன் கூடிய மழை தீவிரமடையக்கூடும். அச்சந்தர்ப்பங்களில் காற்றின் வேகமானது மணிக்கு 60 முதல் 70 கிலோமீற்றர் வரை சடுதியாக அதிகரித்து வீசக்கூடும் என்பதால், கடற்படையினரும் மீனவர்களும் மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.