மலையக மக்களின் மறுசீரமைப்பும் பல்துறைப் பிரச்சினைகளும்….

இலங்கையின் தற்போதைய பொருளாதார மற்றும் அரசியல் சூழலில், அரச நிறுவனங்களின் மறுசீரமைப்பு மற்றும் விளிம்புநிலை மக்களின் உரிமைகள் சார்ந்த கோரிக்கைகள் மிக முக்கியமான விவாதப் பொருளாக மாறியுள்ளன. குறிப்பாக, தேர்ந்தெடுக்கப்பட்ட 33 அரசுக்குச் சொந்தமான நிறுவனங்களைக் கலைப்பதற்கான அர சாங்கத்தின் அதிரடி நடவடிக்கைகள் ஒருபுறம் தீவிரமடைந் துள்ள நிலையில், மறுபுறம் மலையக மக்களின் நீண்டகாலப் பிரச்சினைகளுக்குத் தீர்வுகாணும் பொருட்டு தனியான ஆணைக்குழு ஒன்று அமைக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையும் வலுப்பெற்றுள்ளது. இந்த இரண்டு முக்கிய நடவடிக்கைகளுக்கு மத்தியில், மலையகத் தமிழ்ப் பேசும் மக்களின் சமூக, பொருளாதார முன்னேற்றத்தை இலக்காகக் கொண்டு உருவாக்கப்பட்ட “மலையகப் புதிய கிராமங்கள் அபிவிருத்தி அதிகாரசபை” தற்போது எத்தகைய விளிம்பில் நிற்கிறது என்பது குறித்த பலத்த கேள்விகள் எழுந்துள்ளன.

நாடளாவிய ரீதியில் செயற்றிறனற்ற மற்றும் பொருளாதாரச் சுமையாக மாறியுள்ள தேர்ந்தெடுக்கப்பட்ட 33 அரசுக்குச் சொந்தமான நிறுவனங்களைக் கலைப் பதற்கான நடவடிக்கைகளை நிதி, திட்டமிடல் மற்றும் பொரு ளாதார அபிவிருத்தி அமைச்சு தீவிரப்படுத்தியுள்ளது. அமைச்சரவையின் ஒப்புதலுடன் கடந்த மார்ச் மாதம் அமைச்சின் கீழ் நிறுவப்பட்ட பிரத்தியேகப் பிரிவு இதற்கான பணிகளை முன்னெடுத்து வருகிறது. இதேவேளை, 2026 வரவு செலவுத் திட்ட யோசனைகளுக்கு அமைவாக, அரச நிறுவனங்களின் ஊழியர் சேமலாப நிதியம் (EPF), ஊழியர் நம்பிக்கை நிதியம் (ETF) மற்றும் பணிக்கொடை (Gratuity) கொடுப்பனவுகள் தொடர்பான நீண்டகால நிலுவை களைத் தீர்ப்பதற்கான நடவடிக்கைகளில் திறைசேரி இறங்கியுள்ளது. இதற்காக ஒதுக்கப்பட்ட 5 பில்லியன் ரூபாயில், 2.8 பில்லியன் ரூபாய் 2026 ஓகஸ்ட் மாத இறுதிக்குள் செலுத்தப்பட்டு முடிக்கப்பட்டுள்ளதாக அமைச்சின் தரவுகள் தெரிவிக்கின்றன.
மறுபுறம், மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் மோதல்கள் காரணமாக மூலப்பொருள் செலவுகள் அதி கரிப்பு, விநியோகச் சங்கிலித் தடங்கல்கள் மற்றும் முன்பதிவு இரத்து போன்ற பல்வேறு சவால்களை அரச நிறுவனங்கள் எதிர்கொண்ட போதிலும், 2025ஆம் ஆண்டின் முதல் ஆறு மாதங்களுடன் (227.8 பில்லியன் ரூபாய்) ஒப்பிடுகையில், 2026 இன் முதல் ஆறு மாதங்களில் 51 பிரதான அரச நிறுவனங்களின் மொத்த இலாபம் 259.3 பில்லியன் ரூபாயாக (31.5 பில்லியன் ரூபாய் அதிகரிப்பு) பதிவாகியுள்ளது. லாபமீட்டும் பிரதான வணிக நிறுவனங்களும், மறுபுறம் கலைக்கப்படும் 33 நிறுவனங்களும் ஒருபுறமிருக்க, வர்த்தக நோக்கம் அற்றதும் சமூக நலனை அடிப்படையாகக் கொண்டதுமான “மலையகப் புதிய கிராமங்கள் அபி விருத்தி அதிகாரசபை” இந்த நிறுவன மறுசீரமைப்புச் சுழலில் எங்கு நிலைநிறுத்தப்பட்டுள்ளது என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது. குறிப்பாக கலைக்கப்பட உள்ள 33 அரச நிறுவனங்கள் குறித்த பட்டியல் எதுவும் இதுவரையில் வெளியாகவில்லை.
மலையக மக்களுக்கு என அமைக்கப்பட்ட அதிகார சபை கலைக்கப்படுமா என்ற அச்சம் எழுந்துள்ள சூழலில் மலையக மக்களின் உரிமைகளும், தனி ஆணைக்குழுக்கான கோரிக்கையும் நாடாளுமன்றில் முன்வைக்கப்பட்டுள்ளது. இவ்வாறான பொருளாதாரச் சீர்திருத்தங்கள் ஒருபுறம் இடம்பெறுகையில், மறுபுறம் மலையக மக்களின் கல்வி, வாழ்வாதாரம், குடியுரிமை மற்றும் வறுமை உள்ளிட்ட பல தசாப்த காலப் பிரச்சினைகளுக்கு நிரந்தரத் தீர்வுகளைப் பெற்றுக்கொடுக்கும் வகையில் அவர்களுக்கெனத் தனியான ஆணைக்குழுவொன்று அமைக்கப்பட வேண்டும் என மலையக மக்கள் முன்னணியின் தலைவரும், நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான வேலுசாமி இராதாகிருஷ்ணன் நாடாளுமன்றத்தில் வலி யுறுத்தியுள்ளார். 1948ஆம் ஆண்டு இலங்கை சுதந்திரம் பெற்றது முதல் மலையக மக்கள் படிப்படியாகப் பல்வேறு உரிமைகளைப் பெற்றிருந்தாலும், ஏனைய சமூகங்களுடன் ஒப்பிடுகையில் இன்றும் அவர்கள் கடுமையான சமூக, பொருளாதாரச் சிக்கல்களை எதிர்கொண்டு வருவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
கடந்தகால அரசாங்கங்கள் இப்பிரச்சினைகளுக் குத் தீர்வு காண்பதில் காட்டிய மெத்தனப்போக்கை விமர்சித்த அவர், தற்போதைய அரசாங்கமாவது உரிய கவனம் செலுத்தி தனியான ஆணைக்குழுவை அமைக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டுள்ளார். ஏனைய சமூகங்களுக்கு இணையாகச் சம உரிமையுடனும், கௌரவமாகவும் வாழ் வதற்கான சூழலை அரசாங்கம் ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என்பதே இக்கோரிக்கையின் நோக்கமாக உள்ளது.
மலையகப் புதிய கிராமங்கள் அபிவிருத்தி அதிகாரசபையும் முரண்படும் நிர்வாகத் தகவல்களும்
மலையக மக்களின் வளர்ச்சிக்காகத் தனி நிறுவனம் ஒன்று தேவை என்ற அடிப்படையில், 2018ஆம் ஆண்டின் 32ஆம் இலக்கச் சட்டத்தின் மூலம் உருவாக்கப்பட்ட மலையகப் புதிய கிராமங்கள் அபிவிருத்தி அதிகாரசபை, 2019 பெப்ர வரி முதல் செயற்பாடுகளை ஆரம்பித்தது. ஆனால், தற் போதைய அரசாங்கம் மேற்கொண்டுவரும் அரச நிறுவன மீளாய்வு நடவடிக்கைகள் இதன் மீதான நம்பிக்கையை உலுக்கியுள்ளன. பிரதமரின் செயலாளர் தலைமையிலான மீளாய்வுக் குழுவினால் நடாத்தப்பட்ட மீளாய்வில் (2024 டிசம்பர் – 2025 பெப்ரவரி), 124 நிறுவனங்கள் பரிசீலிக்கப்பட்டு பல்வேறு பரிந்துரைகள் வழங்கப்பட்டன. இதில் மலையகப் புதிய கிராமங்கள் அபிவிருத்தி அதிகாரசபையைத் தனி அதிகாரசபையாகத் தொடரச் செய்யாமல், அமைச்சின் கீழுள்ள ஒரு பிரிவாக மாற்றுமாறு பரிந்துரைக்கப்பட்டதாக ஆங்கிலப் பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
மறுபுறம், அதிகாரசபையை அமைச்சின் ஒரு பிரிவாக மாற்றும் திட்டம் இல்லை என்றும், அதனை மேலும் மேம்படுத்துவதற்காகவே செயற்பாடுகள் மீளாய்வு செய்யப் படுகின்றன என்றும் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் நாடாளுமன்றத்தில் தெரிவித்திருந் தார். 2025 டிசம்பர் மாத நாடாளுமன்ற முன்னேற்ற அறிக் கையில் அதிகாரசபை தனி அதிகாரசபையாகவே பட்டியலிடப்பட்டிருந்தது. மேலும், 2025இல் 42.5 மில்லியன் ரூபாயும், 2026இல் 85 மில்லியன் ரூபாயும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகத் தகவல்கள் கூறினாலும், உண்மையான நிதி விடுவிப்பு மற்றும் திட்டங்களின் நடைமுறைப்படுத்தல் குறித்து தொடர்ந்த வெளிப்படைத்தன்மை தேவைப்படுகிறது. எனவே, மலையக மக்களுக்கெனத் தனியான ஆணைக்குழு வேண்டும் என்ற நாடாளுமன்ற உறுப்பினர்களின் கோரிக்கையும், மறுபுறம் மலையக மக்களின் மேம்பாட்டுக்காக ஏற்கனவே சட்டபூர்வமாக உருவாக்கப்பட்ட ஒரு பிரத்தியேக அதிகார சபையை அமைச்சின் ஒரு சிறிய பிரிவாகத் தரமிறக்கும் அல்லது கலைக்கும் பரிந்துரைகளும் ஒரே நேரத்தில் விவாதிக்கப்படுவது பாரிய முரண்பாடாகும்.
பொருளாதார மீட்சி மற்றும் செலவினக் குறைப்பு என்ற பெயரில் அரசு மேற்கொள்ளும் நிறுவன மறுசீரமைப்பு நடவடிக்கைகள், பல தசாப்தங்களாக விளிம்புநிலையில் வாழும் மலையக மக்களின் சமூக அபிலாஷைகளையும், அவர்களின் அடிப்படை உரிமைகளுக்கான நிறுவனக் கட்டமைப்புகளையும் பலவீனப்படுத்திவிடக் கூடாது. இந்த விடயத்தில் அரசாங்கம் தனது மௌனத்தைக் கலைத்து மலையகப் புதிய கிராமங்கள் அபிவிருத்தி அதிகாரசபை யின் தற்போதைய உண்மையான நிர்வாக நிலை (தனி அதிகாரசபையா அல்லது அமைச்சின் பிரிவா?) பற்றிய தெளிவான அறிக்கையை வெளியிட வேண்டும். நாடாளு மன்ற உறுப்பினர் வேலுசாமி இராதாகிருஷ்ணன் கோரியது போன்று, மலையக மக்களின் நீண்டகாலப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணத் தனி ஆணைக்குழு ஒன்றை அமைப்பது தொடர்பில் தனது உத்தியோகபூர்வ நிலைப்பாட்டைத் தெளிவுபடுத்த வேண்டும். இல்லையேல், நிறுவன மறுசீரமைப்பு என்ற பெயரில் மலையக மக்களின் வளர்ச்சிக்கான பிரத்தியேகக் குரல்கள் ஒடுக்கப்படுகிறதா என்ற கேள்வி எழுவதுடன் மலையக மக்கள் மத்தியில் இது பதற்றத்தையும் ஏற்படுத்தும்.