சர்வதேச கண்டனங்களை பொருட்படுத்தாது ஈரானில் மேலும் மூவருக்கு தூக்கு தண்டனை

ஈரானில் ஹிஜாப் எதிர்ப்பு போராட்டக்காரர்களுக்கு தூக்கு தண்டனைகளை நிறைவேற்றி வரும் ஈரான் அரசு நேற்று மேலும் 3 பேருக்கு தூக்கு தண்டனை விதித்துள்ளது.

பெருகும் சர்வதேச கண்டனங்களை பொருட்படுத்தாது ஈரான் நீதிமன்றம் நேற்று இந்த தண்டனையை பிறப்பித்துள்ளது. ஹிஜாப் எதிர்ப்புப் போராட்டக்காரர்கள் கடவுளுக்கு எதிராக போர் தொடுத்துள்ளதாக ஈரான் அரசு தூக்கு தண்டனை விதிப்பிற்குக் காரணம் கூறியுள்ளது.

கடந்த 8 ஆம் தேதி ஹிஜாப் எதிர்ப்பு போராட்டத்தில் பங்கேற்ற முகமத் கராமி, சையத் முகத் ஆகிய இருவரை ஈரான் அரசு தூக்கிலிட்டுள்ளது. ஈரானில் பாதுகாப்புப் படை வீரரை கொன்ற குற்றத்திற்காக இருவரும் தூக்கிலிடப்பட்டதாக ஈரான் நீதிமன்றம் தெரிவித்தது. ஈரானுக்கு மனித உரிமைகள் அமைப்புகள் கடும் கண்டனத்தை தெரிவித்தன. ஆனால் அந்த பதற்றம் அடங்குவதற்குள் மேலும் 3 பேருக்கு ஈரான் தூக்கு தண்டனை விதித்துள்ளது.

மாஷா அமினி என்ற இளம்பெண்ணின் மரணத்தைத் தொடர்ந்து கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் ஈரானில் ஹிஜாப் எதிர்ப்புப் போராட்டம் தீவிரமடைந்தது. மூன்று மாதங்களுக்கும் மேலாக நடந்த இந்தப் போராட்டத்தில் 300-க்கும் அதிகமானோர் பலியாகினர். 15,000 பேர் வரை கைது செய்யப்பட்டனர். போராட்டத்தில் ஈடுபட்ட பலருக்கு ஈரான் தூக்குத் தண்டனை அறிவித்தது. சிலருக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது. ஆனால், இவற்றின் அதிகாரபூர்வ எண்ணிக்கை இதுவரை தெரியவில்லை. மேலும், போராட்டக்காரர்களில் 400 பேருக்கு 10 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.