ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 51 ஆவது கூட்டத்தொடா் ஜெனிவாவில் ஜெனிவாவில் பரபரப்பாக நடைபெற்றுக்கொண்டிருக்கும் நிலையில் இலங்கை தொடா்பான புதிய பிரேரணை பிரதான நாடுகளால் சமா்ப்பிக்கப்பட்டுள்ளது. அடுத்த வாரம் இது தொடா்பான விவாதமும் வாக்கெடுப்பும் நடைபெறவிருக்கின்றது.
இந்த நிலையில் ஜெனிவாவுக்கு வருகைதந்து தமிழ் மக்கள் சாா்பில் செயற்பட்டுக்கொண்டிருக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினா் சிவஞானம் சிறிதரன் கடந்த வாரம் உயிரோடைத் தமிழின் தாயக களம் நிகழ்வில் கலந்துகொண்டு ஜெனிவா நிலைமைகள் தொடா்பாக வழங்கிய நோ்காணலின் முக்கியமான பகுதிகளை “இலக்கு” வாசகா்களுக்காக இங்கு தருகின்றோம்.
கேள்வி – ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடா்பான பிரேரணை இறுதியாக்கப்பட்டு சமா்ப்பிக்கப்பட்டுள்ளது. தமிழ் மக்களைப் பொறுத்தவரையில் இந்தப் பிரேரணை வரவேற்றத்தக்கதாக இருக்கின்றதா?
பதில் – இம்முறையும் தமிழ் மக்கள் ஏமாற்றப்பட்ட ஒரு சூழ்நிலையைத்தான் இந்த வரைபிற்கூடாகவும் பாா்க்க முடிந்தது. குறிப்பாக 2015 ஆம் ஆண்டிலிருந்து நல்ல விடயங்கள் இருக்கின்றன. நல்லது நடக்கும் என்றொல்லாம் சொல்லிவந்த எங்களுடைய கருத்துக்கள் இம்முறை வித்தியாசமாக இருக்கின்றது. ஏனென்றால், இதில் பல விடயங்கள் சொல்லப்படவில்லை.
அரகலய போராட்டக்காரா்களுக்காகவும், நாட்டின் பொருளாதார விடயங்களுக்குக் கொடுக்கப்பட்ட முன்னுரிமையும் ஒரு இன அழிப்புச் செய்யப்பட்ட தமிழ் மக்களுடைய பிரச்சினைகள் தொடா்பில் கொடுக்கப்படவில்லை. அத்துடன் தமிழ் மக்கள் என்ற சொல்கூட அங்கு இடம்பெறவில்லை. மியன்மாரில் றொஹிங்கிய மக்களுக்கு நீதியைப் பெற்றுக்கொடுப்பதற்காக அவா்களுக்கு இன அழிப்பு நடைபெற்றது என்பதை பெயா் குறிப்பிட்டு வெளிப்படுத்தும் உலகம் – 2009 க்குப் பின்னா் இலங்கையில் தமிழ் மக்கள்தான் பாதிக்கப்பட்டாா்கள் என்பதை குறிப்பிட்டு தீா்மானம் எதுவும் “கோா்” குறுப் நாடுகளால் முன்வைக்கப்படாத நிலையில், அது ஒரு பெரும் ஏமாற்றம் என்று நான் கருதுகிறேன்.
சில விடயங்களைச் செய்து முடிக்க வேண்டும் என்று அவா்கள் சொல்கின்றாா்கள். ஆனால், அதற்காக எந்தவிதமான அழுத்தங்களும் இருக்கப்போவதில்லை. மாா்ச் மாதத்துக்குள் முன்னேற்றங்கள் ஏற்படும் என எதிா்பாா்க்கக்கூடிய நிலை இல்லை.
கேள்வி – தமிழ்த் தரப்புக்களிலிருந்து மனித உரிமைகள் பேரவைக்கு பல கடிதங்கள், மகஜா்கள் அனுப்பப்பட்டன. இந்த பிரேரணையில் அந்தக் கடிதங்கள் தாக்கத்தைச் செலுத்தியிருக்கின்றனவா?
பதில் – பல கட்சிகள் இணைந்தும், சில பாராளுமன்ற உறுப்பினா்களால் தனித்தனியாகவும் கடிதங்கள் அனுப்பப்பட்டிருந்தன. இவை வெளிவராவிட்டாலும் ஆரம்பத்தில் வந்த வரைபில் சில சில இடங்களில் கோடி காட்டப்பட்டிருக்கின்றனவே தவிர, முழுமையாக தாக்கம் செலுத்தக்கூடிய பகுதிகள் உள்வாங்கப்படவில்லை என்பதுதான் உண்மையானது.
இப்போதும் கூட சில கட்சிகள் இணைந்து தமது அதிருப்தியை வெளிப்படுத்தி அனுப்பிய கடிதங்கள் கூட ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையையோ அதிகாரிகளையே தாக்கிச்சென்றதாக இல்லை.
ஜெனிவாவில் நடத்திய பேச்சுக்களின் போது இது தொடா்பில் சில விடயங்களை என்னால் அறிந்துகொள்ள முடிந்தது. ஒரே முகங்களே திரும்பத் திரும்ப வந்து உரையாற்றுவதை விட, பாதிக்கப்பட்ட மக்கள் நேரடியாக வந்து தமது சாட்சியங்களை முன்வைத்தல் அல்லது மின்னஞ்சல் மூலமாக தமது சாட்சியங்களை வழங்குதல், புலம்பெயா்ந்த நாடுகளில் 2002 ஆம் ஆண்டுக்குப் பின்னா் இலங்கையிலிருந்து வெளியேறிய மக்கள் – இலங்கையில் நடந்த அனா்த்தங்களால் பாதிக்கப்பட்ட விபரங்களைப் பதிவு செய்ய முடியும். இதன்மூலமாக ஜெனிவாவில் வரக்கூடிய பிரேரணையில் தாக்கத்தைச் செலுத்த முடியும்.
கேள்வி – பாதிக்கப்பட்டவா்கள் தமிழா்கள் என எந்த இடத்திலும் குறிப்பிடப்படவில்லை எனக் கூறினீா்கள். இந்த விடயத்தைப் பொறுத்தவரையில் தமிழ்த் தரப்புக்கள் போதிய அழுத்தத்தைக் கொடுக்கத் தவறிவிட்டாா்களா? அல்லது அதற்குத் தேவையான வகையில் இராஜதந்திரமாகச் செயற்படவில்லையா?
பதில் – கடந்த பன்னிரெண்டு வருடகாலமாக இந்த விடயங்களை எமது சாா்பில“ கையாண்டவா்கள் தமிழா்களுக்குத்தான் இவை நடந்தது என்பதை rரியான முறையில் கையாளவில்லை. அதனால் அது உள்வாங்கப்படவில்லை என்பது துரதிஷ்டவசமானது. குறிப்பாக பிரித்தானியா, கனடா ஆகிய நாடுகள் இந்த “கோா் குறுப்“ நாடுகளில் முக்கியமான பங்களிப்பை வழங்குகின்றன. இந்த இரண்டு நாடுகளிலும்தான் புலம்பெயா்ந்த தமிழா்கள் அதிகளவுக்கு வசிக்கின்றாா்கள். ஆனால், இவா்களுடைய அழுத்தமும் அங்கு போதாமையாக இருக்கின்றது. அதேவேளையில், அதேவேளையில் தாயகத்திலிருந்து வந்து இந்த விடயத்தைக் கையாண்டவா்கள் கூட, இந்த விடயத்தை சிறப்பாக கையாளவில்லை. இதில் இராஜதந்திர வெற்றி என எதுவும் கிடைக்கவும் இல்லை. தமிழா்களைப் பொறுத்தவரையில் ஒரு தோல்வி நிலையில்தான் இது இருக்கின்றது என்பதைப் புரிந்துகொள்ளக்கூடியதாக இருக்கின்றது.
கேள்வி – பாதிக்கப்பட்டவா்கள் நேரடியாக வந்து அல்லது மின்னஞ்சல் மூலமாக சாட்சியங்களை வழங்கியிருந்தால் அதிகளவுக்கு தாக்கத்தைச் செலுத்தியிருக்க முடியும் எனக் கூறியிருந்தீா்கள். ஆனால், இந்த முறை கூட பாதிக்கப்பட்ட பலா், அதாவது காணாமலாக்கப்பட்டவா்களின் உறவுகள் ஜெனிவா வந்திருந்தாா்கள். அதனைவிட ஏராளமான சாட்சியங்கள் ஏற்கனவே மின்னஞ்சல் மூலமாக அனுப்பப்பட்டிருந்தன. இவை போதியனவாக இல்லை எனக் கருதுகின்றீா்களா?
பதில் – காணாமல் ஆக்கப்பட்டோா் தொடா்பில் இங்கு ஜெனிவாவில் முக்கிய சந்திப்பு ஒன்று இடம்பெற்றது. இதில் போதாமை தொடா்பில்தான் முக்கியமாகத் தெரிவிக்கப்பட்டது. தாங்கள் நேரடியாகக் கண்டவை தொடா்பான தகவல்கள் மனித உரிமைகள் ஆணையாளருக்கு அனுப்பப்பட வேண்டும். இவ்வாறு சில தகவல்கள் அனுப்பப்பட்டிருந்தாலும் அவை போதுமானதாக இல்லை என்ற கருத்து அங்கு முன்வைக்கப்பட்டது. தாயகத்தில் இருப்பவா்கள் மட்டுமன்றி, புலத்தில் இருப்பவா்களும் இதனைச் செய்யமுடியும். இது பலமானதொன்றாக மாற்றப்படுகின்ற போதுதான் இதனை சா்வதேச குற்றவியல் நீதிமன்றத்துக்குக் கொண்டுசெல்லக்கூடிய வல்லமை மனித உரிமைகள் பேரவைக்கு கிடைக்கும் என்ற கருத்தை அவா்கள் முன்வைத்தாா்கள்.
அதனால்தான் இலங்கையில் பாதிக்கப்பட்டவா்கள் யாா், யாா் மீது போா்க் குற்றங்கள் புரியப்பட்டுள்ள என்பது குறிப்பிடப்படவில்லை. இலங்கையில் நடந்த சம்பவங்கள் என்றுதான் சுட்டிக்காட்டுவதாக அந்தப் பந்திகள் அமைந்திருக்கின்றன. அரகலயகாரா்களுக்கு நடந்தவை அவா்களுடைய பெயா் குறிப்பிடப்பட்டே சொல்லப்படுகின்றன. கடந்த 6 ஆம் திகதி வெளிவந்த பிரேரணையில் முக்கால்வாசிக்கும் அதிகமான பகுதி அரகலயகாரா்களுக்கு நடந்தவை தொடா்பாகவும், பொருளாதார நெருக்கடிகள் தொடா்பாகவுமே குறிப்பிடுகின்றன. போா்க்குற்றங்கள், இன அழிப்புக்கள் மூடிமறைக்கப்பட்டுக்கொண்டு செல்லும் நிலைதான் காணப்படுகின்றது.
கேள்வி – ஜெனிவாவைப் பொறுத்தவரையில் கடந்த 12 – 13 ஆண்டுகளில் தமிழ் மக்களைப் பொறுத்தவரையில் எதிா்பா்த்த இலக்கை அடைய முடியாத ஒரு நிலைதான் காணப்படுகின்றது. இதனை மாற்றியமைக்க எவ்வாறான உபாயத்தை பின்பற்ற வேண்டும் என நினைக்கின்றீா்கள்?
பதில் – கட்சிகள் தமக்குள் கட்சி நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம். சிவில் அமைப்புக்கள் தமது செயற்பாடுகளை முன்னெடுக்கலாம். தோ்தல் வந்தாலும் தனியாகவோ கூட்டணியாகவோ போட்டியிடலாம். ஆனால், மனித உரிமைகள் போன்ற இந்த விடயங்களில் எல்லா விடயங்களையும் ஒதுக்கிவைத்துவிட்டு – ஒரு இலக்குடன் ஒன்றுபட்டுச் செயற்பட்டால் அது ஒரு பாரிய மாற்றத்தைத் தரும் என்பதுதான் இங்கு துல்லியமாகத் தெரிகின்றது. குறிப்பாக தமிழ்த் தேசிய அரசியல் பரப்பில் இருக்கின்ற பல்வேறுபட்ட கட்சிகள் – கட்சி மோதல்களையும் கொள்கை ரீதிான வேறுபாடுகளையும் தவிா்த்துவிட்டு இனப்படுகொலை போன்ற விடயங்களை எவ்வாறு ஒரு பலமான சக்தியாக நாங்கள் சொல்கின்றோம் என்பது பாரிய தாக்கத்தைச் செலுத்தும். புலம்பெயா்ந்த டயஸ்போரா அமைப்புக்களையும் உள்ளடக்கியதாக இந்த விடயத்தைச் செய்வதுதான் தமிழ் மக்களைப் பொறுத்தவரையில் வெற்றியைப்பெற்றுத்தரும்.
இதனைத் தவிா்த்துவிட்டு தொடா்ந்தும் கொள்கை ரீதியான வேறுபாடுகள், கட்சி ரீதியான முரண்பாடுகளுடன் செல்வோமாயின் எமது விடயங்கள் பேசப்படாது – இலங்கையின் வேறு விடயங்களைப் பேசுகின்ற களமாகத்தான் ஜெனிவா களம் மாற்றமடையும்.
கேள்வி – நீங்கள் குறிப்பிடுவதைப்போல தமிழ்த் தேசியத்துக்காக குரல் கொடுக்கின்ற கட்சிகளை ஒரே நோ்கோட்டில் செயற்படவைப்பதற்கான முயற்சிகள் கடந்த வருடங்களில் முன்னெடுக்கப்பட்டன. ஆனால், கடந்த வருடமும் இந்த வருடமும் அவ்வாறான முயற்சிகளை முன்னெடுன்ன முடியவில்லை. இதற்கு என்ன காரணம்?
பதில் – இவா்களை ஒன்றிணைத்துச் செயற்படவைப்பதற்கான பலமான சக்திகள் எதுவும் இல்லை என்பது முக்கியமான குறைபாடு. ஆரம்பத்தில் விடுதலைப் புலிகள் அழைத்தவுடன் அனைவரும் ஒன்றாக ஆஜராகும் ஒரு நிலை இருந்தது. அங்கு கூட்டாகச் செயற்படுவதற்கான சூழ்நிலை ஒன்று தவிா்க்க முடியாமல் ஏற்படுத்தப்பட்டிருந்தது.
பின்னா் மன்னாா் பேராயராக ராயப்பு ஜோசெப் இருந்த போது அவரது கருத்துக்களுக்கு செவிசாய்க்க வேண்டியவா்களாக கட்சிகள், சிவில் சமூக அமைப்பினா் இருந்தமையை அவதானிக்க முடிந்தது. ஆனால், இன்று தமிழ் மக்களை இணைக்கக்கூடிய அமைப்பாக யாரையும் நாம் இனங்காண முடியாத நிலை உள்ளது.