இது தமிழர்களுக்கும் சொந்தமான நாடு, தமிழர்கள் சமஉரிமையுடன் வாழவேண்டும்-இரா.சாணக்கியன்

தமிழர்களுக்கும் சொந்தமான நாடு இது.தமிழர்கள் சமஉரிமையுடன் வாழவேண்டும் இனப்படுகொலைகள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பான விடயங்களுக்கு சர்வதேச சமூகத்துடன் இணைந்து அழுத்தங்களை வழங்கவேண்டும் என கூட்டமைப்பு சார்பில் மட்டக்களப்பில் போட்டியிட்டு வெற்றிபெற்றுள்ள இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் போட்டியிட்ட இவர்,33 ஆயிரத்து 332 விருப்பு வாக்குகளை சுவீகரித்திருந்தார்.இந்தநிலையில் அவர் முடிவுகள் வெளியான தினம் முதல் மட்டக்களப்பின் பல்வேறு பகுதிகளுக்கு சென்று தனக்கு வாக்களித்த மக்களுக்கு நன்றி தெரிவித்து வருகின்றார்.

குறிப்பாக களுவாஞ்சிக்குடி மாணிக்கப்பிள்ளையார் ஆலயம், குருக்கள்மடம்,செட்டிபாளம், மாங்காடு உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்ற இரா.சாணக்கியனுக்கு மக்கள் அமோக வரவேற்பளித்தனர்.அதனை தொடர்ந்து களுவாஞ்சிகுடியில் நடைபெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு அவர் உரையாற்றினார்.இங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர்,

மட்டக்களப்பு மாவட்டத்திற்கு நான்கு தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் கிடைத்துள்ளது என்பது மகிழ்ச்சியான விடயமாகும்.தமிழ் தேசிய கூட்டமைப்பு கூறியது போன்று உரிமையுடன் கூடிய அபிவிருத்திக்காக தொடர்ந்து பயணிக்கும்.இந்த நாடு தமிழர்களுக்கும் சொந்தமான நாடு.இங்கு நாங்கள் உரிமையுடன் கூடிய அபிவிருத்திகளையே செய்யவேண்டும்.அதனை தமிழ் தேசிய கூட்டமைப்பு செய்யும்.

அபிவிருத்தியை நோக்காக கொண்டு மக்களிடம் வாக்குப்பெற்று பாராளுமன்ற உறுப்பினர்களாக தெரிவுசெய்யப்பட்டவர்களிடம் அவர்களின் வாக்குறுதிகளை நிறைவேற்றுமாறு தொடர்ச்சியான அழுத்தங்களை வழங்கவேண்டும்.

இலங்கை தமிழரசுக்கட்சியில் பல மாற்றங்களை செய்யவேண்டும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் ஐயாவிடம் தெரிவித்துள்ளேன்.இளைஞர்கள் எதிர்பார்க்கும் வகையில் சில செயற்பாடுகளை மாற்றவேண்டும்.

கடந்த காலத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையில்லையென தமிழர்களை அரசாங்கங்கள் ஏமாற்றிவந்தன.இதனையே சர்வதேச சமூகத்திற்கும் இலங்கை சாட்டாக சொல்லிவந்தது.ஆனால் இனியேமாற்றமுடியாது.இலகுவாக புதிய அரசியலமைப்பு உருவாக்கங்களை செய்யமுடியும்.

இதேபோன்று தமிழர்களின் பிரச்சினையை தீர்ப்பதற்கு புதிய அரசியலமைப்பினை உருவாக்குவதற்கான சர்வதேசத்தின் அழுத்தங்களை வழங்குவதற்கு தேவையான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவேண்டும்.

2009ஆம் ஆண்டு சர்வதேச சமூகத்திற்கு இலங்கை அரசாங்கம் வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றவேண்டிய காலம் தற்போது வந்துள்ளது.தமிழ் தேசிய கூட்டமைப்பு இன்றும் மூன்றாவது சக்தியாகவே இருக்கின்றது.பத்து ஆசனங்களைக்கொண்டாலும் அது பலமான சக்தியாகவே இருக்கின்றது.

2009ஆம் ஆண்டு இடம்பெற்ற இனப்படுகொலைகள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பான விடயங்களுக்கு சர்வதேச சமூகத்துடன் இணைந்து அழுத்தங்களை  வழங்கவேண்டும்.

கடந்த அரசாங்கத்தில் ஜனாதிபதியும் பிரதமரும் வேறுவேறு திசையில் இருந்தனர்.ஆனால் இன்று சகோதரர்கள் ஜனாதிபதியாகவும் பிரதமராகவும் இருக்கின்றனர்.தமிழர்களின் பிரச்சினைக்கான தீர்வினை வழங்குவதற்கு இதனைவிட நல்லதொரு சந்தர்ப்பம் வேறு அமையாது.

தமிழர்களுக்கும் சொந்தமான நாடு இது.தமிழர்கள் சமஉரிமையுடன் வாழவேண்டும் என்று நாங்கள் தொடர்ச்சியாக போராடினாலும் அபிவிருத்தியை செய்து தருவதாக கூறியவர்களிடம் அந்த அபிவிருத்தியை பெற்றுத்தருமாறு தொடர்ச்சியான அழுத்தங்களை வழங்கவேண்டும்.